தமிழக வரலாறும் பண்பாடும்
தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என வழங்கப்படுகிறது. இதன் தலைநகரமாக சென்னை உள்ளது.
இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கிழக்கு கரையில் அமைந்துள்ள தமிழ்நாடு, மேற்கில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் தக்காணப் பீடபூமி, வடக்கில் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகியவற்றை புவியியல் எல்லைகளாகக் கொண்டுள்ளது. கிழக்கில் வங்காள விரிகுடா, தென்கிழக்கில் மன்னார் வளைகுடா மற்றும் பாக்கு நீரிணை மற்றும் தென் முனையில் இலட்சத்தீவுக் கடல் ஆகிய நீர்நிலைகளால் சூழப்பட்டுள்ளது. இலங்கை நாட்டுடன் கடல்வழி எல்லையைக் கொண்டுள்ளது. இதன் ஆட்சிப்பகுதி எல்லைகளாக, மேற்கில் கேரளம், வடமேற்கில் கருநாடகம் மற்றும் வடக்கில் ஆந்திர மாநிலங்கள் உள்ளன. புதுச்சேரி ஒன்றியப் பகுதியின், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகள் மாநில எல்லைக்குள் அமைந்துள்ளன.
தொல்லியல் சான்றுகள் தமிழ்நாட்டில் மக்கள் ஏறத்தாழ நான்கு இலட்சம் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருவதையும், 5,500 ஆண்டுகளுக்கும் மேலான தொடர்ச்சியான கலாச்சார வரலாற்றைக் கொண்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. வரலாற்று ரீதியாக, பண்டைய தமிழகப் பகுதியில் தமிழ் மொழி பேசிய திராவிட மக்கள் வசித்து வந்தனர். பல நூற்றாண்டுகளாக சங்க காலம் தொட்டு சேரர், சோழர் மற்றும் பாண்டியரால் ஆளப்பட்டது. பிற்காலத்தில் பல்லவர் (பொ.ஊ. 3-9 ஆம் நூற்றாண்டு) மற்றும் விசயநகர பேரரசின் (பொ.ஊ. 14-17 ஆம் நூற்றாண்டு) கீழ் வந்த இப்பகுதியில், 17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் வரத் தொடங்கினர். 1947 இல் இந்திய விடுதலைக்கு முன் இரண்டு நூற்றாண்டுகளுக்கு தென்னிந்தியாவின் பெரும்பகுதி பிரித்தானிய கட்டுப்பாட்டில் சென்னை மாகாணமாக ஆட்சி செய்யப்பட்டது. விடுதலைக்கு பிறகு மதராசு மாநிலம் என மாறிய இப்பகுதி, ௧௯௫௬ ஆம் ஆண்டின் மொழிவாரி மறுசீரமைப்புக்குப் பிறகு தற்போதைய வடிவம் பெற்றது. 1969 இல் "தமிழ் நாடு" என பெயர் மாற்றப்பட்டது.
இந்தியாவின் மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலமாக திகழும் தமிழ்நாடு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்குப் பங்களிப்பதில் இரண்டாவதாக உள்ளது. மனித வளர்ச்சிச் சுட்டெண்ணில் பதினாறாவது இடத்தில் இருக்கும் தமிழகம், நாட்டின் மிகவும் தொழில்மயமான மாநிலங்களில் ஒன்றாகும். தமிழ்நாட்டில் பல இயற்கை வளங்கள், தமிழர் கட்டிடக் கலை சாற்றும் கோவில்கள், மலைத்தலங்கள், கடலோர ஓய்விடங்கள், பல சமயத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் நிறைந்துள்ளன; மூன்று உலக பாரம்பரியக் களங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. மாநிலத்தின் பரப்பளவில் ஏறத்தாழ 17.4% காடுகளைக் கொண்டுள்ள இங்கு மூன்று உயிர்க்கோள காப்பகங்கள், சதுப்புநில காடுகள், ஐந்து தேசிய பூங்காக்கள், 18 வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் 17 பறவை சரணாலயங்கள் உள்ளன. தமிழ்த் திரையுலகம் மாநிலத்தின் பிரபலமான கலாச்சாரம் மற்றும் அரசியலில் செல்வாக்கு மிக்க பங்கு வகிக்கிறது.
தமிழ்நாடு என்ற பெயர் தமிழ் மொழியில் இருந்து பெறப்பட்டது. இது "தமிழர்களின் நிலம்" எனப் பொருள்படும். தமிழ் என்ற சொல்லின் பெயரியல் சரியாக அறியப்படவில்லை. பண்டைய தமிழ் இலக்கியங்களான சங்க இலக்கியங்களில் தற்போதைய தமிழ்நாடு, கேரளம் ஆகிவற்றின் முழு பகுதிகளையும், கருநாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களின் தென் பகுதிகளையும் உள்ளடக்கிய பகுதிகளைக் குறிக்க தமிழகம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் எல்லைகளைத் தொல்காப்பியப் பாடல் பின்வருமாறு.
“ | வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம் | ” |
— தொல்காப்பியம், சிறப்புப் பாயிரம், 1-3 |
தொன்றுதொட்டே தமிழ் மக்கள் வாழ்ந்த நிலப்பரப்பு தமிழகம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. அதற்குச் சான்றாகக் கீழ்வரும் இலக்கியக் குறிப்புகளைக் காட்டலாம்:
“ | வையக வரைப்பில் தமிழகம் கேட்ப | ” |
— புறநானூறு, 168 :18 |
“ | இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்க | ” |
— பதிற்றுப்பத்து, இரண்டாம் பத்து, பதிகம் : 5 |
“ | இமிழ் கடல் வரைப்பில் தமிழகம் அறிய | ” |
— சிலப்பதிகாரம், அரங்கேற்றுகாதை : 38 |
“ | சம்புத் தீவினுள் தமிழக மருங்கில் | ” |
— மணிமேகலை, 17: 62 |
சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்த சிலப்பதிகாரத்தில் தமிழ்நாடு என்ற பெயர் காணப்படுகிறது.
“ | இமிழ்கடல் வேலியை தமிழ்நாடாக்கிய இது நீ கருதினை யாயின் ஏற்பவர் முது நீ ருலகில் முழுவது மில்லை | ” |
“ | தென் தமிழ்நாடு ஆளும் வேந்தர் செரு வேட்டு, புகன்று எழுந்து, மின் தவழும் இமய நெற்றியில் விளங்கு வில் புலி கயல் பொறித்த நாள் | ” |
— இளங்கோவடிகள், சிலப்பதிகாரம் |
திருக்கோயிலூர் வீரட்டேசுவரர் கோயிலில் உள்ள சோழர் காலக் கல்வெட்டில் உள்ள மெய்க்கீர்த்தியானது இராசராச சோழனை தண்டமிழ் நாடன் என குறிப்பிடுகிறது.[12] 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இளம்பூரணர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.[13]
“ | நும் நாடு யாது என்றால், தமிழ்நாடு என்றல் | ” |
— இளம்பூரணர் |
கம்பர் தன் கம்பராமாயணத்தில் கிட்கிந்தா காண்டம் நாட விட்ட படலம்-30 இல் தமிழ்நாட்டை அடையாளப்படுத்தியுள்ளார். அதில் அனுமனுக்கும் மற்ற வானரப் படையினருக்கும் இலங்கைக்குச் செல்லும் வழிகளைச் சொல்கிறான். அப்போது இலங்கைக்கு தமிழ்நாட்டைக் கடந்து செல்ல வேண்டும் என்று கூறுகிறான்.
“ | துறக்கம் உற்றார் மனம் என்ன,துறைகெழு நீர்ச்சோணாடு கடந்தால்,தொல்லை மறக்கம் உற்றார் அதன் அயலே மறைந்து உறைவர்; அவ் வழி நீர் வல்லை ஏகி, உறக்கம் உற்றார் கனவு உற்றார் எனும் உணர்வினொடும் ஒதுங்கி, மணியால் ஓங்கல் பிறக்கம் உற்ற மலை நாடு நாடி, அகன் தமிழ்நாட்டில் பெயர்திர் மாதோ. | ” |
— கம்பர், கம்பராமாயணம் |
வரலாற்றுக்கு முந்தைய காலம் (பொ.ஊ.மு. 5 ஆம் நூற்றாண்டுக்கு முன்)
தொல்பொருள் சான்றுகள் 400 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் ஓமினிட்கள் வாழ்ந்ததைச் சுட்டிக்காட்டுகின்றன.[15][16] இந்தியத் தொல்லியல் ஆய்வகம் (ASI) மூலம் ஆதிச்சநல்லூரில் மீட்கப்பட்ட தொல்பொருட்கள் 3,800 ஆண்டுகளுக்கு முந்தைய தொடர்ச்சியான வரலாற்றைக் குறிப்பிடுகின்றன. பொ.ஊ.மு.1500 மற்றும் 2000 க்கு இடைப்பட்ட சிந்துவெளி நாகரீகத்தைச் சேர்ந்த கற்சுவடுகள் பண்டைய தமிழ் எழுத்துக்களின் பயன்பாட்டைக் குறிக்கிறது. கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள், பொ.ஊ.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு முந்தைய ஒரு பெரிய நகர்ப்புற குடியேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளன. மேலும் ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் தமிழ் பிராமி எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றன, இது பொ.ஊ.மு. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு அடிப்படை எழுத்தாகும். கீழடியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பானை ஓடுகள் சிந்து சமவெளி எழுத்து மற்றும் தமிழ் பிராமி எழுத்துகளுக்கு இடைப்பட்ட ஒரு எழுத்துமுறையைக் குறிக்கின்றன. தொன்கதை பாரம்பரியத்தின் படி, தமிழ் மொழியானது, சிவபெருமானால் அகத்தியருக்குக் கற்பிக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது.