Tuesday, 22 December 2020

நாட்டுப்புறப்பாடல்கள் -22.12.2020

 

நாட்டுப்புறப் பாடல்கள்

நமக்குத் தமிழில் கிடைக்கும் மிகத் தொன்மையான எழுத்துச்சான்று தொல்காப்பியரின் தொல்காப்பியமாகும். தொல்காப்பியர் வாய்மொழி இலக்கியங்களுக்கும் இலக்கணம் கூறியுள்ளார். ‘பண்ணத்தி’ என்று தொல்காப்பியர் கூறுவது ‘நாட்டுப்புறப் பாடல்களையே’ என்று அறிஞர்கள் சுட்டுகின்றனர். வேறு சிலர் தொல்காப்பியர் சுட்டும் ‘புலன்’ என்பதையே நாட்டுப்புறப் பாடல்களைக் குறிக்கும் என்பர். நாட்டுப்புறப் பாடல்களுள் இசைப்பாடல்களைப் ‘பண்ணத்தி’ என்றும் இசை குறைந்த பிற பாடல்களைப் ‘புலன்’ என்றும் கருதும் போக்கு காணப்படுகின்றது.

3.1.1 தொன்மை

சங்க இலக்கியங்களில் நாட்டுப்புறப் பாடல்களின் செல்வாக்கினைக் காணமுடிகின்றது. நாட்டுப்புறப் பாடல்களிலிருந்து தமிழிசைப் பாடல்கள் உருவாகியிருப்பதை ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன. கலித்தொகை, பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்கள் செப்பம் செய்யப்பட்ட நாட்டுப்புறப் பாடல்களைப் போலவே காணப்படுகின்றன. நாட்டுப்புறப் பாடல்கள் பற்றிய குறிப்புகள் பல சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் பல பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்களை அடியொற்றியவை. ‘ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்’ எனும் மங்கல வாழ்த்துப் பாடலும் நாட்டுப்புறப் பாடல் வடிவைப் பின்பற்றி எழுதப்பட்டதாகும். ‘கானல்வரி, வேட்டுவவரி, அம்மானைவரி, கந்துகவரி, ஊசல்வரி, வள்ளைப்பாட்டு முதலியன நாட்டுப்புறப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவையாகும். நாயன்மார்களும், ஆழ்வார்களும் நாட்டுப்புறப் பாடல் வடிவங்களைப் பயன்படுத்திய போக்கினைக் காணமுடிகின்றது. ஏராளமான சிற்றிலக்கியங்கள் நாட்டுப்புறப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டன. குறவஞ்சி, சிந்து, அம்மானை, ஊசல், பள்ளு, தாலாட்டு, ஏசல், ஏற்றம், தெம்மாங்கு முதலான ஏராளமான நாட்டுப்புற இலக்கிய வடிவங்களை அடிப்படையாகக் கொண்டு சிற்றிலக்கியங்கள் உருவாக்கப்பட்டன. மக்களை ஒருங்கிணைத்து, நாட்டுப்புற இலக்கியங்களை ஒரே இலக்கியமாகச் செயல்படுத்த வேண்டும் என்று கருதிய காலகட்டங்களில் எல்லாம் நாட்டுப்புற இலக்கியங்களைப் பயன்படுத்தி எழுத்திலக்கியங்கள் உருவாக்கப்பட்ட போக்கினை அறியமுடிகிறது. நீதிக் கருத்துகளோ பக்திச் செய்திகளோ, மக்களைச் சென்றடைவதற்காக இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆயினும் நாட்டுப்புறப் பாடல்களைத் தனியே சேகரித்துப் பாதுகாக்கவேண்டும் என்ற எண்ணம் ஐரோப்பியர்களின் தொடர்பால் ஏற்பட்டதேயாகும்.

3.1.2 சேகரிப்பும் பதிப்பும்

உலகின் பல்வேறு நாடுகளில் கி.பி. 1600 தொடங்கி நாட்டுப்புறப் பாடல்களைப் பதிவு செய்து பாதுகாத்த போக்கு காணப்படுகிறது. பல்வேறு நாடுகளில் நாட்டுப்புறவியல் ஆவணக்காப்பகங்களும் நாட்டுப்புறவியல் கழகங்களும் உருவாக்கப்பட்டன. 1831இல் பின்லாந்தியர்களால் உருவாக்கப்பட்ட ஆவணக்காப்பகம், 1878இல் இலண்டனில் உருவாக்கப்பட்ட நாட்டுப்புறவியல் கழகம், 1888இல் அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட நாட்டுப்புறவியல் கழகம் முதலானவற்றைச் சான்றுகளாகக் கூறலாம். இத்தகைய அமைப்புகளில் நாட்டுப்புறப் பாடல்களைச் சேகரித்துப் பாதுகாக்கும் பணி, வெளியிடும் பணி நிகழ்ந்து வந்தன. இத்தகைய உலகச் செல்நெறிக் (trends) காரணமாகத் தமிழகத்திலும் நாட்டுப்புறப் பாடல்களைச் சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டது. முதன்முதலில் 1871ல் ‘சார்லஸ்-இ-கோவர்’ எனும் ஆங்கிலேயர் Folk Songs of South India என்னும் தலைப்பில் நூலினை வெளியிட்டார். இந்நூலில் தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுத் தரப்பட்டுள்ளன. மக்களின் உணர்வுகளை ஐரோப்பியர்கள் அறிந்து கொள்வதற்கான ஆதாரங்களை நல்குவது இந்த நூலின் முதன்மையான நோக்கமாக இருந்தது. இந்நூலில் நாட்டுப்புறப் பாடல்கள் மட்டுமல்லாது திருக்குறள், பத்திரகிரியார் பாடல்கள், கபிலர் அகவல், சிவவாக்கியார் பாடல்கள் போன்ற எழுத்திலக்கியப் பாடல்களும் மொழிபெயர்க்கப்பட்டு நாட்டுப்புறப் பாடல்கள் என்று தவறாக அளிக்கப்பட்டுள்ளன. சார்லஸ்-இ-கோவரைத் தொடர்ந்து இந்திய அறிஞர்கள் நாட்டுப்புற இலக்கியங்களைச் சேகரித்து வெளியிடத் தொடங்கினர். 1939 தொடங்கி தமிழகத்திலும் இலங்கையிலும் இதுவரை ஏறத்தாழ நூறு நாட்டுப்புறப் பாடல் தொகுப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. இவையேயன்றி தமிழகம் முழுவதும் முதுகலை (M.A.) ஆய்வியல், நிறைஞர் (M. Phil), முனைவர் (Ph.d) பட்டங்களுக்காக உருவாக்கப்பட்ட ஆய்வேடுகளின் பின்னிணைப்புகளில் ஏராளமான நாட்டுப்புறப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இவை இன்னும் நூல்வடிவம் பெறவில்லை.

இதுவரை வெளியிடப்பட்ட நாட்டுப்புறப் பாடல் தொகுப்புகளுள் குறிப்பிடத்தக்க ஒரு சில ஏடுகள் பற்றிச் சுருக்கமாகக் காணலாம்.

தமிழண்ணல் (1956) வெளியிட்ட தாலாட்டு என்னும் நூலில் பாண்டிய நாடு, ஈழநாடு, சோழநாடு, நாஞ்சில்நாடு, தென்பாண்டிநாடு, கொங்குநாடு, கவிஞர்கள் பாடிய தாலாட்டுக்கள், பிறமொழித் தாலாட்டுக்கள் என்ற தலைப்புக்களில் பாடல்களைத் தந்துள்ளார். தாலாட்டுப் பற்றி இவர் எழுதியுள்ள ஆய்வுரை குறிப்பிடத்தக்கது.

கி.வா. ஜகந்நாதன் பல பாடல் தொகுப்புகளை வெளியிட்டவர். மக்கள் எளிதில் புரிந்துகொள்வதற்காகப் பாடலுக்கு முன்னும் பின்னும் எளிய விளக்கங்களைத் தந்து பாடல்களை வெளியிட்டவர். இந்த விளக்கங்கள் கற்பித வர்ணனைகளாக அமைந்திருக்கும். ‘பெர்சி மக்வின்’ சேகரித்து, தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தால் வெளியிடப்பட்ட மலையருவி எனும் நூலை இவர் பதிப்பித்துள்ளார். நல்லதொரு ஆய்வு முன்னுரையுடன் கூடிய பழைய பாடல்களை உள்ளடக்கிய தொகுப்பு நூலாக இதனைக் கருதலாம். பாடல்களில் திருத்தம் செய்து செப்பம் செய்திருப்பது இதன் குறையாகும்.

செ. அன்ன காமு (1959) வெளியிட்ட ஏட்டில் எழுதாக் கவிதைகள் என்னும் நூல் களப்பணி வாயிலாக அவரால் சேகரிக்கப்பட்ட பாடல்களைக் கொண்டதாக உள்ளது. அவருடைய அனுபவபூர்வமான குறிப்புகள் இத்தொகுப்பு நூலின் சிறப்பாகும்.

நா. வானமாமலையின் நாட்டுப்புறப் பாடல் பதிப்புப் பணி சிறப்பாகக் குறிக்கத்தக்கது. தமிழர் நாட்டுப் பாடல்கள் (1964) என்ற தொகுப்பு, சிறந்த ஆய்வு முன்னுரையுடன் வழங்கும் சொற்பொருள், சேகரிப்பாளர் பற்றிய விவரம், ஆழமான குறிப்புகள் போன்றவற்றுடன் வெளிவந்துள்ளது.

க. கிருட்டினசாமி (1978, 1980) பதிப்பித்து வெளியிட்ட கொங்கு நாட்டுப்புறப் பாடல்கள், கவிஞர் கோ.பெ.நா. (1986) பதிப்பித்த பாலை - மலைப் பாடல்கள் முதலிய நூல்களும் குறிப்பிடத்தக்கவை.

ஆறு. இராமநாதனை முதன்மைப் பதிப்பாசிரியாராகக் கொண்டு மெய்யப்பன் தமிழாய்வகம் வெளியிட்டுள்ள நாட்டுப்புறப் பாடல் களஞ்சியம் (2001) பத்துத் தொகுதிகள் குறிப்பிடத்தக்கவை. பாடல்களைச் சேகரித்த முறை, பாடகர்களின் கருத்துக்கள், பதிப்பாசிரியர்களின் கருத்துக்கள், வழக்குச் சொற்பொருள், பாடல் பற்றிய விவரங்கள் முதலான அனைத்து விவரங்களையும் கொண்ட சிறந்த பதிப்பாக இதனைக் குறிப்பிடலாம்.

3.1.3 ஆய்வுப் பணிகள்

நா. வானமாமலை நாட்டுப்புறப் பாடல்கள் பற்றிய எழுதிய கட்டுரைகள் சிறந்த ஆய்வுகளாக காணப்படுகின்றன. நாட்டுப்புறப் பாடல் தொகுப்புகளுக்கு அவர் எழுதியுள்ள முன்னுரைகளும், பாடல் குறிப்புகளும் மிக ஆழமானவை. பல்துறைக் கலப்பாய்வாக (inter-deciplinary research) இவருடைய ஆய்வுகள் காணப்படுகின்றன. அதன் பிறகு பல்கலைக்கழகப் பட்டங்களுக்காக ஆய்வு செய்யும் போக்கு தொடங்குகிறது. நாட்டுப்புறவியல் துறையில் தொடக்க காலத்தில் தமிழ் இலக்கியம் படித்தவர்களே ஆய்வுகளில் ஈடுபட்டனர். எனவே தொடக்க காலத்தில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகள் நாட்டுப்புறப் பாடல்கள் பற்றியனவாகவே இருந்தன. ஆறு. அழகப்பன் தன்னுடைய எம்.லிட். பட்டத்திற்காக நாட்டுப்புறப் பாடல்களை ஆராய்ந்தார். பா.ரா. சுப்பிரமணியன் (1969) சாதி அடிப்படைத் தாலாட்டு ஒப்பாரிப் பாடல்களை ஆராய்ந்தார். சு.சண்முக சுந்தரம் ‘நெல்லை மாவட்ட நாட்டுப்புறப் பாடல்களையும், ஆறு. இராமநாதன் தென்னார்க்காடு மாவட்ட நாட்டுப்புறப் பாடல்களையும், ச.நசீர் அலி திருச்சி மாவட்டப் பாடல்களையும், இ.பாலசுந்தரம் ஈழத்து நாட்டார் பாடல்களையும், க.கிருட்டினசாமி கொங்கு நாட்டுப்புறப் பாடல்களையும், த.கனகசபை தஞ்சைப் பகுதிப் பாடல்களையும் ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். இவர்களின் ஆய்வுகள் நூலாக வெளிவந்துள்ளன. இந்த ஆய்வுகள் வழி நாட்டுப்புறப் பாடல் சிலவற்றின் அமைப்புகளையும், பாடல்கள்வழி மக்கள் வாழ்வியலையும் அறிந்து கொள்ள முடிகிறது. நாட்டுப்புறப் பாடல்கள் மக்கள் வாழ்க்கையை எவ்வித ஒளிவு மறைவுமின்றி வெளிப்படையாக எடுத்துரைக்கின்றன. எழுத்திலக்கியங்களோ எவ்வாறு வாழவேண்டும் என்று நன்னெறி காட்டுவனவாக அமைந்துள்ளன. எழுத்திலக்கியங்களை மட்டுமே வைத்துக் கொண்டு தமிழக மக்களின் வாழ்வியலை முழுமையாக உள்ளது உள்ளபடி தெரிந்துகொள்ள இயலாது. நாட்டுப்புறப் பாடல்களையும் தரவுகளாகக் கொள்ளும் போதுதான் தமிழக மக்களின் வாழ்க்கையினை முழுமையாகப் புரிந்து கொள்ள இயலும். இந்த உண்மையை மேற்குறிப்பிட்ட ஆய்வுகள் தெளிவுபடுத்தியுள்ளன.

3.1.4 வகைகள்

நாட்டுப்புறப் பாடல்களை அவை வழங்கப்படும் ‘சூழல்’ அடிப்படையில் எட்டுப் பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம். அவை வருமாறு:

• தாலாட்டுப் பாடல்கள்

குழந்தையை மகிழ்ச்சிப்படுத்தும் அல்லது தூங்க செய்யும் சூழல்களில் பாடப்படும் பாடல்கள்.

• குழந்தை வளர்ச்சி நிலைப் பாடல்கள்

குழந்தை வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் பாடல்கள் பாடப்படுகின்றன. குழந்தை தவழும்போதும், உண்ணும்போதும், சாய்ந்தாடும் போதும், அம்புலி தூக்கும்போதும் குழந்தைக்காகப் பாடப்படும் பாடல்களும் இதில் அடங்கும்.

• விளையாட்டுப் பாடல்கள்

விளையாடும் சூழல்களில் பாடப்படும் உடற்பயிற்சி விளையாட்டுப் பாடல்கள், வாய்மொழி விளையாட்டுப் பாடல்கள் ஆகியன இப்பகுதியில் வைக்கப்படும்.


• தொழிற் பாடல்கள்

தொழில் செய்யும் போது பாடப்படும் பாடல்கள் தொழிற்பாடல்கள். வேளாண்மைத் தொழிலும் வேளாண்மை அல்லாத தொழிலும் இதில் அடங்கும்.


• வழிபாட்டுப் பாடல்கள்

வழிபடும் சூழலில் வழிபடும் தெய்வங்கள் குறித்துப் பாடப்படும் பாடல் அனைத்தும் இப்பிரிவில் அடங்கும்.


• கொண்டாட்டப் பாடல்கள்

மகிழ்ச்சியை ஏற்படுத்தும் அனைத்துச் சூழல்களிலும் பாடப்படும் பாடல்களைக் கொண்டாட்டப் பாடல்கள் எனலாம். ஓய்வு நேரங்கள், மக்கள் ஈடுபடும் பொதுவான கொண்டாட்டங்கள், விழா எடுத்துக் கொண்டாடப்படும் சிறப்பான நிகழ்ச்சிகள், அதுபோன்ற கொண்டாட்டங்களில் பொதுமக்களே பாடுபவை, கலைஞர்கள் பாடுபவை, குடும்பக் கொண்டாட்டங்கள் என்று பலவாறான கொண்டாட்டச் சூழல்களில் பாடப்படும் பாடல்களை இவ்வகையில் அடக்கலாம்.


• இரத்தல் பாடல்கள்

ஊர் ஊராகச் சென்று யாசித்து வாழ்வோர் யாசிக்கும் சூழலில் பாடும் பாடல்கள் இதில் அடங்கும்.


• இழப்புப் பாடல்கள்

யாதேனும் ஒன்றை இழக்கும் சூழல்களில் பாடப்படும் பாடல்கள். உயிர் இழத்தலின் போது பாடப்படும் ஒப்பாரிப் பாடல்களும், (மகளிர் பாடுவன, கலைஞர்கள் பாடுவன) பொருட்களை இழந்து புலம்பும் பாடல்களும் இதில் அடங்கும்.


மேற்காட்டப்பட்ட பாடல்களுள் தாலாட்டுப் பாடல்கள், குழந்தை வளர்ச்சி நிலைப் பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள், தொழிற்பாடல்கள் ஆகிய பாடல் வகைகளை மட்டும் இப்பாடத்தில் காணலாம்.

Friday, 20 November 2020

குறுந்தொகை -20.11.2020

 

குறுந்தொகை


குறுந்தொகை எட்டுத்தொகையில் உள்ள நூல்களுள் ஒன்று. "நல்ல குறுந்தொகை" எனச் சிறப்பித்து உரைக்கப்படுவது. குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் இது குறுந்தொகை எனப் பெயர் பெற்றது. ஏனைய பழந்தமிழ் நூல்களைப் போல் இதுவும் 400 பாடல்களின் தொகுப்பாகவே இருந்திருக்க வேண்டுமென்றும் ஒரு பாடல் இடைச் செருகலாக இருக்கக்கூடுமென்றும் சிலர் கருதுகிறார்கள். உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் குறுந்தொகையே. ஆதலால் இந்நூலே முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூலாகக் கருதப்படுகிறது. இது பலவகையிலும் நற்றிணை, அகநானூறு ஆகிய பாடல் தொகுப்புக்களை ஒத்தது. இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார்.

சங்க இலக்கிய பாடல்

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல்
கற்றறிந்தா ரேத்துங் கலியே அகம் புறம் என்
றித்திறத்த எட்டுத் தொகை

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி- மருஒஇனிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்

பாலை கடாத் தொடும் பத்து

பாடியோர்

இத் தொகுப்பில் அமைந்துள்ள 401 பாடல்களை 206 புலவர்கள் பாடியுள்ளனர். இந்நூலில் அமைந்துள்ள 10 பாடல்களுக்கு ஆசிரியர் பெயர் தெரியவில்லை. ஆனால் அப்பாடல்களின் சிறப்பு நோக்கி அத்தொடர்களையே ஆசிரியர் பெயர்களாக அமைத்து வழங்கினர். 'அனிலாடு முன்றிலார்', 'செம்புலப்பெயல் நீரார்', 'குப்பைக் கோழியார்', 'காக்கைப்பாடினியார்' என்பன இவ்வாறு உவமைச் சிறப்பால் பெயர் பெற்ற ஆசிரியர்கள் 18 பேர் இந்நூலில் காணப்படுகிறார்கள். கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.

நூலமைப்பு

நான்கு முதல் எட்டு வரையான அடிகளைக் கொண்டமைந்த 401 பாடல்களின் தொகுப்பு இது. (307,391-ஆம் பாடல்கள் 9 அடிகளால் ஆனது) அகப்பொருள்களை அகவற்பாக்களால் கூறுவது குறுந்தொகை. இந்நூலில் முதல், கருப்பொருட்களை விட உரிப்பொருளுக்கே சிறப்பிடம் தரப்பட்டுள்ளது. வருணனைகள் குறைந்தும் உணர்வு மிகுந்தும் காணப்படுகின்றன. பொருளுக்கேற்ற பொருத்தமான உவமைகள் கொண்டு கருப்பொருளின் பின்னணியில் மாந்தர்களின் அகத்தெழும் உணர்ச்சிகளை சிறந்த முறையில் சித்தரித்துக் காட்டுபவை குறுந்தொகைப் பாடல்களாகும்.

குறுந்தொகை பழைய உரைகள்

இந்த நூலின் 380 பாடல்களுக்குப் ‘பேராசிரியர்’ உரை எழுதியுள்ளார். பேராசிரியர் உரை எழுதாத 20 பாடல்களுக்கும் ‘நச்சினார்க்கினியர்’ உரை எழுதிச் சேர்த்துள்ளார். நச்சினார்க்கினியர் தாம் எழுதிய தொல்காப்பிய உரையில் (அகத்திணையியல் நூற்பா 46) பேராசிரியரின் குறுந்தொகை உரையை மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார். இந்த இரண்டு உரைகளும் இன்று கிடைக்கவில்லை. 

பாடல் 01 (செங்களம்)

குறிஞ்சி - தோழி கூற்று
செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
செங்கோ லம்பிற் செங்கோட் டியானைக்
கழல்தொடிச் சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே.

என்பது தோழி கையுறை மறுத்தது.

பாடியவர்
திப்புத் தோளார்

செய்தி

தலைவன் தலைவிக்காக அவளது தோழியிடம் பூ தருகிறான். அதனை அவள் வாங்க மறுத்துச் சொல்லும் சொற்கள் இவை.

தலைவியின் இருப்பிடம் குன்றம். அதில் குருதிநிறச் செங்காந்தள் மலர்கள் மிகுதியாக உள்ளன. நாங்கள் அதனைச் சூடிக்கொள்வோம். உன் பூ வேண்டாம் என்கிறாள். குன்றம் முருகன் இருக்கும் குன்றம். அவன் அவுணரைப் போர்க்களம் செங்களமாகும்படி கொன்று தேய்த்தவன். அவனது செங்கோல் மலையில் ஓடும் நீர். அது உயர்ந்த முகட்டினைக் கொண்ட ஆனைமலையில் ஓடுகிறது. அவன் கழலில் தொடி அணிந்துள்ளான்.

அம்பு = நீர், கழல் = கணுக்கால், ஆனைமலைக் குன்றுகளில் ஒன்று பழனிமலை. ஒப்புநோக்குக; 'அறுகோட்டு யானை பொதினி' (அகம் 1) செங்கோட்டு யானை எனபதற்கு யானை ஊர்தி கொண்டவன் என்பர்.

பாடல் 02 (கொங்குதேர்)

குறிஞ்சி - தலைவன் கூற்று
கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவு முளவோநீ யறியும் பூவே.
என்பது, இயற்கைப்புணர்ச்சிக்கண் இடையீடுபட்டு நின்ற தலைமகன், தலைமகளை நாணின் நீக்குதற்பொருட்டு 'மெய்தொட்டுப் பயிறல்' முதலாயின அவண்மாட்டு நிகழ்த்திக் கூடித் தனது அன்புதோன்ற நலம் பாராட்டியது.
பாடியவர்
இறையனார்

செய்தி

அவனைப் பார்த்த அவள் நாணி ஒதுங்கினாள். அவன் அவளைத் தொடவேண்டும். அதற்கு ஒரு சாக்குபோக்காகச் சொல்வதாக அமைந்துள்ள பாடல் இது. தும்பியே! உனக்கு அழகிய சிறகுகள். உனது வாழ்க்கை தேனைத் தேடி எடுத்துக்கொள்வது. உனக்குத் தெரியும் எந்தப் பூ அதிக மணம் என்று. இவள் தலையில் சூடியுள்ள பூவை மொய்க்கும் ஆசையால் சொல்லிவிடாதே. இவள் கூந்தலைக் காட்டிலும் நல்ல மணமுள்ள பூ நீ அறிந்தது உண்டா?

இவன் அரிவை. செறிந்த எயிறுகளில் புன்னகை பூக்கிறாள். மயில் போல் மெல்லமெல்ல ஆடி அசைகிறாள். (விலக மனமில்லை) இவள் என்னிடம் ஏதோ பயின்றிருக்கிறாள். அது ஒட்டுறவு உள்ள நட்பாகத் தெரிகிறது. (அது உடலுறவாக மாறவேண்டும்)

பாடல் 03 (நிலத்தினும்)

குறிஞ்சி - தலைவி கூற்று

நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று
நீரினு மாரள வின்றே சாரற்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பொருந்தே னிழைக்கு நாடனொடு நட்பே.

என்பது தலைமகன் சிறைப்புறமாக, அவன் வரைந்துகொள்வது வேண்டித் தோழி இயற்பழித்தவழித் தலைமகள் இயற்பட மொழிந்தது.

பாடியவர்
தேவகுலத்தார்

செய்தி

அவன் அவளுக்காக வெளியில் காத்திருக்கிறான். திருமணம் செய்துகொண்டு அவளை அடையவேண்டும் என்று விரும்பிய தோழி அவனது களவொழுக்கம் பற்றி இழிவாகப் பெசுகிறாள். தலைவி அவ்வாறு பேசக்கூடாது என்று கூறும் செய்தி இது; நாடனுக்கும் எனக்கும் உள்ள நட்பு நிலத்தைக் காட்டிலும் மிகுதியான நீளஅகலம் கொண்டது. வானைக் காட்டிலும் உயர்ந்தது. கடல் நீரைக் காட்டிலும் ஆழமானது. மலைநீரைக் காட்டிலும் தூய்மையானது. எனவே பழிக்காதே. மலைத் தேனீ குறிஞ்சிப் பூவில் தேனை எடுத்துக்கொண்டுபோய் என்ன செய்யும்? கூடுதானே கட்டும். (அதுபோல அவன் என்னைத் தன் இல்லத்துக்குக் கொண்டுசெல்வான்.

பாடல் 04 (நோமென்)

நெய்தல் - தலைமகள் கூற்று

நோமென் னெஞ்சே நோமென் னெஞ்சே
இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி
அமைதற் கமைந்தநங் காதலர்
அமைவில ராகுதல் நோமென் னெஞ்சே.

என்பது பிரிவிடை ஆற்றாளெனக்கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

பாடியவர்
காமஞ்சேர் குளத்தார்

செய்தி

அவன் பிரிவை உணர்த்துகிறான். பிரிவைத் தலைவி தாங்கமாட்டள் என்கிறாள் தோழி. நான் தாங்கிக்கொள்வேன். காதலர்தான் தாங்கமாட்டார். அவருக்காகத்தான் என் நெஞ்சு நோகிறது. என் கண்ணீர் சுட்டு என் இமைகளே தீய்ந்துவிடும் போல் இருக்கிறது. அதற்காகவே என் கண்கள் அமைந்திருக்கின்றன. நம் காதலர் கண்கள் அதற்காக அமையவில்லை - என்கிறாள் தலைவி.

அவர் அமைவிலர் என்பதற்கு அவர் கண்ணீர் வடியும் கண்கள் அமையப்பெறாதவர் என்றும், அமைவு என்னும் நிம்மதி இல்லாதவர் என்றும், இருவகையில் பொருள் கொள்ளவேண்டும்.

பாடல் 05 (அதுகொறோழி)

நெய்தல் - தலைவி கூற்று

அதுகொ றோழி காம நோயே
வதிகுரு குறங்கு மின்னிழற் புன்னை
உடைதிரைத் திவலை யரும்புந் தீநீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
பல்லித ழுண்கண் பாடொல் லாவே.

என்பது பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

பாடியவர்
நரிவெரூஉத் தலையார்

செய்தி

அவன் பிரிந்திருக்கும் நிலை. தலைவி கவலைப்படுவாள் என்று தோழி கவலை கொள்கிறாள். நான் மட்டுமா உறங்காமல் இருக்கிறேன். கடலலைகளைப் பார். அவையும் கூட உறங்கவில்லை. புன்னைமர இனிய நிழலில் வாழும் குருகு உறங்குகிறது. அதன் அருகில் கடலலை புலம்பன் பிரிந்தான் என்று உடைந்துபோய்த் திவலைகளைத் தன் கண்ணீராகத் துளித்துக்கொண்டிருக்கிறது, என்கிறாள் தலைவி

பாடல் 06 (நள்ளென்)

நெய்தல் - தலைவி கூற்று

நள்ளென் றன்றே யாமஞ் சொல்லவிந்
தினிதடங் கினரே மாக்கண் முனிவின்று
நனந்தலை யுலகமுந் துஞ்சும்
ஓஒர்யான் மன்ற துஞ்சா தேனே.

என்பது வரைவிடை வைத்துப் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள் தோழியை நெருங்கிச் சொல்லியது.

பாடியவர்
பதுமனார்

செய்தி

திருமண நாளைத் தள்ளிப்போட்டுவிட்டு அவன் பிரிந்தான். தலைமகள் தன் கவலையைத் தோழியிடம் சொல்கிறாள்.

யாம வேளையாகிய நள்ளிரவு எந்த ஆரவாரமும் இல்லாமல் 'நள்' என்று இருக்கிறது. மக்கள் பேசாமல் அடங்கிக் கிடக்கிறார்கள்.உலகமும் சினம் இல்லாமல் தூங்குகிறது. இந்த அமைதி வேளையில் நான் மட்டும் தூக்கம் வராமல் இருக்கிறேன்.

பாடல் 07 (வில்லோன்)

பாலை - கண்டோர் கூற்று

வில்லோன் காலன கழலே தொடியோள்
மெல்லடி மேலவுஞ் சிலம்பே நல்லோர்
யார்கொ லளியர் தாமே யாரியர்
கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி
வாகை வெண்ணெற் றொலிக்கும்
வேய்பயி லழுவ முன்னி யோரே.

என்பது செலவின்கண் இடைச்சுரத்துக் கண்டோர் கூறியது.

பாடியவர்
பெரும்பதுமனார்

செய்தி

ஆருக்கும் தெரியாமல் அவளை அழைத்துக்கொண்டு அவன் தன் ஊருக்குச் செல்கிறான். அவர்களை வழியில் பார்த்தவர்கள் பேசிக்கொள்கின்றனர்.

அவன் காலில் கழல் உள்ளது. அவள் கைகளில் தொடியும், கால்களில் சிலம்பும் உள்ளன. மூங்கில் காட்டுக்குள்ளே இவர்கள் செல்கின்றனர். ஆரியர் கயிற்றின்மேல் ஏறி நடந்து ஆடும்போது அவர்கள் முழக்கும் முழவொலி கேட்கும். (ஊரில் இந்த ஒலியைக் கேட்டவர்கள் இவர்கள்) இங்கு அந்த ஒலி போல் காற்று மோதிச் சலசலக்கும் வாகை நெற்றுகளின் ஒலியைக் கேட்டுக்கொண்டே நடக்கிறார்கள். இவர்களில் அளியர் யார்?

அளி = கொடை நல்கு. அளிப்போர் = கொடை நல்குவோர். அளியர் = கொடை வாங்குவோர். யார் யாருக்குக் கொடுத்தார்? அவள் தன்னை அவனுக்குக் கொடுத்தாளா? அவன் தன்னை அவளுக்குக் கொடுத்து அழைத்துச் செல்கிறானா? அளியர் என்பதற்கு இரங்கத்தக்கவர் என்று பொருள் கூறுதலும் ஒன்று.

பாடல் 08 (கழனிமாஅ)

மருதம் - காதற் பரத்தை கூற்று

கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூஉ மூரன்
எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்
கையும் காலுந் தூக்கத் தூக்கும்
ஆடியல் பாவை போல
மேவன செய்யுந்தன் புதல்வன் றாய்க்கே.

என்பது கிழத்தி தன்னைப் புறனுரைத்தாளெனக் கேட்ட காதற்பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.

பாடியவர்
ஆலங்குடி வங்கனார்.

செய்தி

அவன் பரத்தையோடு வாழ்ந்தான். பரத்தையைப் பற்றிப் பெருமையாகப் பேசினான். பின் தன் வீட்டுக்குச் சென்றுவிட்டான். அவன் மனைவி புதல்வனைப் பெற்றெடுத்த தாய். அங்கே அவன் தன் மனைவி ஆட்டிவைக்கும் பொம்மையாய் ஆடுகிறான். அவள் சொன்னதையெல்லாம் கேட்கிறான். அவன் ஊரன்.

(கழனி = பயிர் விளையும் நன்செய் வயல், பழனம் = குளத்துநீர் பாய்ந்து பழஞ்சேறு பட்ட நிலம்.) கழனி ஓரத்திலிருந்த மரத்தில் விளைந்து முதிருந்த மாம்பழம் விழும். பழனத்திலிருந்த வாளைமீன் அதனைக் கௌவிக்கொள்ளும். இப்படிப்பட்ட நாட்டின் தலைவன் அவன்.

இறைச்சிப் பொருள்; கழனி - புதல்வனைப் பெற்ற தாய், பழன வாளை - பரத்தை, மாம்பழம் - கிழவன்

பாடல்: 09 நெய்தல் (யாயா கியளே மாஅ)

தோழி கூற்று

யாயா கியளே மாஅ யோளே
மடைமாண் செப்பிற் றமிய வைகிய
பெய்யாப் பூவின் மெய்சா யினளே
பாசடை நிவந்த கணைக்கா னெய்தல்
இனமீ னிருங்கழி யோத மல்குதொறும்
கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்
தண்ணந் துறைவன் கொடுமை
நம்மு னாணிக் கரப்பா டும்மே.

என்பது தலைமகற்குத் தோழி வாயில் நேர்ந்தது.

பாடியவர்
கயமனார்.

செய்தி

தலைவி தாயானாள் என்பதைத் தோழி தலைவனுக்குச் சொல்லும் பாடல் இது.

மாயோள் தாயாகிவிட்டாள். அன்று இருந்த மாந்தளிர் போன்ற அவளது மேனி இன்று வெளுத்துவிட்டது. (அவள் முல்லைப் பூவைத் தலையில் வைத்துக்கொள்வாள். அவள் தொடுக்க மறந்த பூமொட்டு ஒன்று அவள் பறித்து வைத்த செப்புப் பாத்திரத்திலேயே தவறிக் கிடந்துவிட்டது) அந்தப் பூ மலர்ந்திருப்பது போன்ற நிறம் அவள் மேனியில் சாய்ந்திருக்கிறது.

அதை அவள் நாணத்தால் நம்முன் சொல்லாமல் மறைக்கிறாள். மீன்கள் விளையாடும் கடலோர நீர்த்தேக்கங்களில் அலை வரும்போதெல்லாம் மூழ்கி மூழ்கித் தலைதூக்கும் நெய்தல் பூவைப் போல அவள் கண்கள் நாணத்தால் அவ்வப்போது மூடித் திறக்கின்றன. குளத்தில் மூழ்கி நீராடும் மகளிரின் கண்கள் போலவும் காணப்படுகின்றன. அத்துடன் அந்தப் பூவின் செந்நிறம் போலவும், குளத்தில் நீராடும் பெண்களின் கண்கள் சிவந்திருப்பது போலவும் அவளது கண்களும் சிவந்து உள்ளன. இது தண்ணந் துறைவன் செய்த கொடுமை என்று பொய் சொல்லுகிறாள். (புணர்ச்சியில் நேர்ந்த சிவப்பு என்கிறாள்)

பாடல்: 10 மருதம் (யாயாகியளேவிழவு)

தோழி கூற்று.

யாயா கியளே விழவுமுத லாட்டி
பயறுபோ லிணர பைந்தாது படீஇயர்
உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக்
காஞ்சி யூரன் கொடுமை
கரந்தன ளாகலி னாணிய வருமே.

என்பது தலைமகற்குத் தோழி வாயில் நேர்ந்தது.

பாடியவர்
ஓரம்போகியார்.

செய்தி

அவன் பரத்தையிடம் இருந்துவிட்டு இல்லம் மீண்டான். தோழி அவனது மனைவி தாயான செய்தியைக் கூறி வீட்டுக்குள் நுழைய விடுகிறாள்.

நீ காஞ்சிமரம் அடரந்த ஊரின் தலைவன். நீ விழாக் கொண்டாடி முதலில் திருமணம் செய்துகொண்டாயே அவள் தாயாகிவிட்டாள். நீ செய்த கொடுமையை இவள் மனத்துக்குள் போட்டுப் புதைத்துவிட்டாள். காஞ்சிமரம் பயறுகள் போலப் பூ பூக்கும். அந்தப் பூக்களின் தாதுகள் அங்குள்ள உழவர் வளைக்கும்போது அவர்கள் தலையில் கொட்டும். (அதுபோல அவன் இனி மனைவிமாட்டு அன்பைக் கொட்டவேண்டும் என்பது உள்ளுறை)அத்தகைய காஞ்சி மரங்களை உடைய ஊரனின் கொடுமைகளை யாருக்கும் தெரியாமல் தலைவி மறைத்தாள். இப்பொழுது, அவன் நாணும்படி அவனை ஏற்றுக்கொள்ள அவள் வருகிறாள்.தலைவி தன் தலைவனை ஏற்றுக்கொண்ட மாண்பினால் அவள் தாயினை நிகர்த்த தன்மையை பெற்றாள் என்பதாம் 

Tuesday, 20 October 2020

தேம்பாவணி -20.10.2020

 

தேம்பாவணி

தேம்பாவணி என்னும் நூல் இயேசு கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தையான புனித யோசேப்பு மீது இயற்றப்பட்ட முதற் பெரும் செய்யுள் வகை நூலாகும். இந்நூல் இத்தாலிய நாட்டவரான வீரமாமுனிவர் அவர்கள் தமிழில் திறம்பட ஆக்கிய நூல் எனப் புகழப்படுகிறது. கிறிஸ்தவ சமயத்தின் சுருக்கமென்றே இந்நூலை அறிஞர்கள் மதிப்பிடுகின்றனர்.

இத்தமிழ்க் காப்பியம் பிறமொழி நூல் ஒன்றில் வருகின்ற செய்திகளைத் தழுவி, தமி்ழ் நெறிக்கேற்ப எழுதப்பட்டதாகும். அதாவது, ஸ்பானிய நாட்டு ஆகிருத நகரில் வாழ்ந்த ஆகிர்த மரியாள் (Maríyal de Ágreda) என்னும் கன்னி மறைபொருளான இறைநகரம் (Mystical City of God) என்னும் நூலை, கன்னி மரியாவின் ஆணைப்படி எழுதியதாகக் கூறியுள்ளார்[1]. அந்த நூலில் இயேசுவின் வளர்ப்புத் தந்தையான யோசேப்பு பற்றிய செய்திகளும் உண்டு. ஆகிர்த மரியின் அந்நூலைத் தழுவி, தமிழ் மரபுக்கும், தமிழ்ப் பண்பாட்டுக்கும் ஏற்ப யோசேப்பின் வரலாற்றை இயற்றியிருக்கிறார் வீரமாமுனிவர்.

தேம்பாவணியின் பொருள்

தேம்பா + அணி எனப் பிரித்து வாடாத மாலை என்றும், தேன் + பா + அணி எனப் பிரித்துத் தேன் போன்ற இனிய பாடல்களின் மாலை என்றும் இதற்குப் பொருள் உண்டு. இயேசு நாதரை வளர்த்த தந்தையாகிய சூசையப்பரைத் தலைவராகக் கொண்டு இது பாடப்பட்டது. சூசையப்பருக்குத் தேம்பாவணி எனப் பெயரிட்டு இந்நூலில் பாடியுள்ளார்.

தேம்பாவணியின் அரங்கேற்றம்

'தேம்பாவணி' கி.பி. 1726 ஆம் ஆண்டில் மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் பலத்த எதிர்புகளுக்கிடையில் அரங்கேற்றப்பட்டது. பல புலவர்களின் அடுக்கடுக்கான கேள்விகளுக்குச் சளைக்காமல் பதிலளித்த வீரமாமுனிவரிடம் தமிழ்ப் புலவர்கள், "எல்லாம் தெரியுமெனக் கூறும்; பெஸ்கி அவர்களே! வானத்தில் எத்தனை நட்சத்திரம் இருக்கிறது; எனக் கூற முடியுமா?" என நையாண்டியாகக் கேட்டார்கள். பதட்டமின்றி "முப்பது மூன்று கோடி, முப்பதிமூன்று லட்டத்து, முப்பதிமூவாயிரத்து, முன்னூற்றிமுப்பதிமூன்று நட்சத்திரங்கள் சந்தேகமிருந்தால் எண்ணிப்பாருங்கள்" என்றதும், சபையில் சிரிப்பொலி எழும்பிப் பலர் முனிவரைப் பாராட்டினார்கள்.

"தேம்பாவணி"யின் சிறப்பைப் பாராட்டி மதுரைத் தமிழ்ச்சங்கம்; பெஸ்கிப் பாதிரியாருக்கு ராஜரிஷி என்ற பட்டம் அளித்து சிறப்பித்தது.

நூலின் அமைப்பு

தேம்பாவணி மூன்று காண்டங்களைக் கொண்டது. ஒவ்வொன்றிலும் 12 படலமாக 36 படலங்கள் உள்ளன. மொத்தம் 3,615 விருத்தப் பாக்கள் 90 சந்த வகைகளுடன் பாடப் பெற்றது தேம்பாவணி.

தமிழ் மரபு

தேம்பாவணி ஆசிரியர், வெளி நாட்டவரே ஆயினும், காப்பியக் கதைத் தலைவர் சூசை வாழ்ந்ததும் தமிழ் மண்ணில் இல்லை எனினும், காப்பியம் முழுக்கத் தமிழ் மணம் கமழ்வதாக, தமிழ்ப் பண்பாட்டில் தோய்ந்ததாகவே படைக்கப் பெற்றுள்ளமைக்குப் பல சான்றுகள் கூறலாம்.

பிற தமிழ்க் காப்பியங்களைப் போலவே, சீரிய உலகம் மூன்றும் என மங்கலச் சொற்களைப் பெய்தே, தொடங்குகிறார் ஆசிரியர். இறைவனை வணங்க முற்படும் போது, மேனாடுகளில் வழங்கும் கிறித்தவ மரபுகளைச் சாராது, தமிழ் மரபையே சார்ந்து, இறைவனது பாதங்களையே முதலில் வணங்குவதையும், இறைவனது பாதங்களை மலராகக் காண்பதையும் இங்குக் காண்கிறோம். இறைவனுக்கு வாகனங்களை உரிமை செய்து பாடுவன தமிழகச் சமயங்கள். அத்துடன், இறைவனுக்குரிய கொடிகளாகச் சிலவற்றைக் குறிப்பதும் இங்குள்ள சமய மரபு. இதனைப் பின்பற்றி வீரமாமுனிவரும் திருமகன் இயேசுவை மேக வாகனத்தில் வருபவராகவும், அவரது முன்னோரான தாவீது அரசனைச் சிங்கக் கொடியோன் என்றும் பாடுகிறார்.

மேலும் இறைவனது திருமேனிக்கு வண்ணம் (நிறம்) குறித்துப் பாடுவது, இறைவனைத் தரையில் தலைபட வணங்குவது, கை கூப்பி வணங்குவது, மலர்கள் தூவி வழிபாடு செய்வது, பல்வகை விளக்குகளை ஆலயத்தில் ஏற்றுவது, தேர்த்திருவிழா காண்பது முதலிய பல தமிழ்ச் சமய மரபுகளைத் தம் காப்பியத்தில் வீரமாமுனிவர் இணைத்துள்ளதைக் காண்கிறோம். ஓரிரு இடங்களில் தாம் கூறவரும் செய்திகளுக்கு உவமையாகத் தமிழ்நாட்டுப் புராணச் செய்திகளையும் பயன்படுத்தியுள்ளார். இவ்வாறு தமிழ் மரபுக் கேற்ப, தம் காப்பியத்தைக் கவிஞர் அமைத்துள்ளமை புலனாகிறது.

தமிழ் இலக்கியத் தாக்கம்

வீரமாமுனிவர் வெளிநாட்டவராக இருந்தும் தமிழ் மரபைக் கருத்தாகக் கடைப்பிடிப்பது சிறப்பு. அவர் வருணிக்கின்ற பாலத்தீன நாடும், எருசலேம் நகரும் தமிழ் மண்ணின் மணம் கமழ்வதாகவே உள்ளன. முன்னோர் மொழியைப் பொன்னேபோல் போற்றிய வீரமாமுனிவர் திருவள்ளுவர், சீவக சிந்தாமணி பாடிய திருத்தக்கதேவர், கம்பர், மாணிக்கவாசகர் போன்றோரின் நடை, சொல், உவமை, கருத்து போன்றவற்றைச் சூழலுக்குப் பொருத்தமாக எடுத்தாள்கிறார்.

எடுத்துக்காட்டாக, கபிரியேல் வானதூதன் கடவுளின் நற்செய்தியை மரியாவிடம் உரைத்தபோது, மரியா கலக்கமுற்றதையும் அக்கலக்கத்தை வானதூதர் உணர்ந்தறிந்தார் என்பதையும் விளக்கவந்த வீர்மாமுனிவர்

பளிங்கு அடுத்தவற்றைக் காட்டும் பான்மையால் இவள் முகத்தில்
உளம் கடுத்தவற்றை ஓர்ந்த கபிரியேல் உறுதி சொல்வான்... (பாடல்: 535)

என்ற வரிகளில் திருவள்ளுவரின்

அடுத்தது காட்டும் பளிங்குபோல நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்

என்னும் குறட்பா அமைவதைக் காணலாம்.

எருசலேம் நகரை வருணிக்கும் வீரமாமுனிவர் இவ்வாறு பாடுகிறார்: 

Monday, 21 September 2020

திருக்குறள் -21.09.2020

 

திருக்குறள்

திருக்குறள் (Thirukkural)  உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.


வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை. கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும் அழைக்கப்படுகிறது

திருக்குறள் - இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் சிலவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழுங்கள்.

தமிழ் உரை எழுதியவர்கள்
• திரு பரிமேலழகர்
• திரு மு.வரதராசனார்
• திரு மணக்குடவர்
• திரு மு.கருணாநிதி
• திரு சாலமன் பாப்பையா
• திரு வீ.முனிசாமி


குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: இல்வாழ்க்கை.

குறள் வரிசை:  41  42  43  44  45  46  47  48  49  50

குறள் 41:
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்.
மு.வரதராசனார் உரை:
இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.
சாலமன் பாப்பையா உரை:
மனைவியோடு வாழ்பவன்தான் பிள்ளைகள், பெற்றோர், உறவினர் என்னும் மூவர்க்கும் நல்ல வழியில் உதவுபவன்.
பரிமேலழகர் உரை:
[அஃதாவது, இல்லாளோடு கூடி வாழ்தலினது சிறப்பு.இந்நிலை அறம் செய்தற்கு உரிய இருவகை நிலையுள் முதலது ஆதலின், இஃது அறன் வலியுறுத்தலின் பின் வைக்கப்பட்டது)

இல்வாழ்வான் என்பான் - இல்லறத்தோடு கூடி வாழ்வான் என்று சொல்லப்படுவான்; இயல்பு உடைய மூவர்க்கும் நல் ஆற்றின் நின்ற துணை- அற இயல்பினையுடைய ஏனை மூவர்க்கும் நல் ஆற்றின் நின்ற துணை - அற இயல்பினையுடைய ஏனை மூவர்க்கும் அவர் செல்லும் நல்லொழுக்க நெறிக்கண் நிலை பெற்ற துணை ஆம். (இல் என்பது ஆகுபெயர். என்பான் எனச் செயப்படு பொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது. ஏனை மூவர் ஆவார், ஆசாரியனிடத்தினின்று ஓதுதலும் விரதங்காத்தலும் ஆகிய பிரமசரிய ஒழுக்கத்தானும், இல்லை விட்டு வனத்தின்கண் தீயொடு சென்று மனையாள் வழிபடத் தவஞ் செய்யும் ஒழுக்கத்தானும், முற்றத் துறந்த யோக ஒழுக்கத்தானும் என இவர்; இவருள் முன்னை இருவரையும் பிறர் மதம் மேற்கொண்டு கூறினார். இவர் இவ்வொழுக்க நெறிகளை முடியச் செல்லுமளவும், அச்செலவிற்குப் பசி நோய், குளிர் முதலியவற்றான் இடையூறுவாராமல், உண்டியும் மருந்தும் உறையுளும் முதலிய உதவி, அவ்வந்நெறிகளின் வழுவாமல் செலுத்துதலான் 'நல் ஆற்றின் நின்ற துணை' என்றார்.).
மணக்குடவர் உரை:
இல்வாழ்வானென்று சொல்லப்படுபவன் இயல்புடைய மூவர்க்கும் நல்ல வழியின்கண்ணே நின்றவொருதுணை. (தவசி, பிரமச்சாரி, துறவியாகிய மூவர்) என்றது தானமாகிய வில்லறஞ் செய்யுமவன் தவத்தின்பாற்பட்ட விரதங் கொண்டொழுகாநின்ற பிரமச்சாரிக்கும், தவமேற் கொண்டொழுகாநின்ற வானப்பிரஸ்தன் ஸந்நியாசிகளுக்கும், தத்தம் நிலைகுலையாம லுணவு முதலாயின கொடுத்துப் பாதுகாத்தலின் அவர்க்கு நல்லுலகின்கண் செல்லும் நெறியிலே நின்ற வொரு துணையென்று கூறியவாறாயிற்று. துணையென்பது இடையூறு வாராமலுய்த்து விடுவாரை.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
இல்லறத்தோடு கூடி வாழ்பவன் என்று சொல்லப்படுபவன் இயல்பாகவே தன்னைச் சார்ந்திருக்கும் பெற்றோர், மனைவி, மக்கள் ஆகிய மூன்று திறத்தார்க்கும் நல்லலொழுக்க நெறியில் நின்ற சிறந்த துணையாக இருப்பவனாவான்.
குறள் 42:
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
பற்றற்ற துறவிகட்கும், பசியால் வாடுவோர்க்கும், பாதுகாப்பற்றவர்க்கும் இல்லற வாழ்வு நடத்துவோர் துணையாக இருத்தல் வேண்டும்.
மு.வரதராசனார் உரை:
துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான்.
சாலமன் பாப்பையா உரை:
மனைவியோடு வாழ்பவன்தான் துறவியர், வறுமைப்பட்டவர், இறந்து போனவர் என்பவர்க்கும் உதவுபவன்.
பரிமேலழகர் உரை:
துறந்தார்க்கும்- களைகண் ஆனவரால் துறக்கப்பட்டார்க்கும்; துவ்வாதவர்க்கும் - நல்கூர்ந்தார்க்கும்; இறந்தார்க்கும்-ஒருவருமன்றித் தன்பால்வந்து இறந்தார்க்கும்; இல்வாழ்வான் என்பான் 'துணை'-இல்வாழ்வானென்று சொல்லப்படுவான் துணை (துறந்தார்க்குப் பாவம் ஒழிய அவர் களைகணாய் நின்று வேண்டுவன செய்தலானும், துவ்வாதவர்க்கு உணவு முதலிய கொடுத்தலானும், இறந்தார்க்கு நீர்க்கடன் முதலிய செய்து நல்லுலகின்கண் செலுத்தலானும், துணை என்றார். இவை இரண்டு பாட்டானும் இல்நிலை எல்லா உபகாரத்திற்கும் உரித்தாதல் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை:
வருணத்தினையும் நாமத்தினையுந் துறந்தார்க்கும், துறவாது நல்குரவாளரா யுண்ணப் பெறாதார்க்கும், பிறராய் வந்து செத்தார்க்கும் இல்வாழ்வானென்று சொல்லப்படுமவன் துணை யாவான். (வறுமையாளர், கைவிடப்பட்டவர், திக்கற்றவர்). மேற்கூறிய மூவரும் வருணநாமங்களைத் துறவாமையாலீண்டுத் துறந்தாரென்று கூறினார். செத்தார்க் கிவன் செய்ய வேண்டிய புறங்காட்டுய்த்தல் முதலாயின. இது மேற்கூறியவர்க்கேயன்றி இவர்க்கும் துணையென்று கூறிற்று.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
துறந்தவர்களுக்கும், வறுமையாளர்களுக்கும், யாருமின்றித் தன்னிடம் வந்து இறந்தவர்களுக்கும் இல்வாழ்வான் என்பவன் துணையாக இருக்கக் கடவன். 
குறள் 43:
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
வாழ்ந்து மறைந்தோரை நினைவுகூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல் ஆகிய கடமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுக்குரியனவாம்.
மு.வரதராசனார் உரை:
தென்புலத்தார், தெய்வம் விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
இறந்து தென்திசையில் வாழ்பவர், தேவர்கள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய அறத்தைத் தவறாமல் செய்வது சிறப்பு.
பரிமேலழகர் உரை:
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று - பிதிரர்,தேவர்,விருந்தினர்,சுற்றத்தார் தான் என்று சொல்லப்பட்ட; ஐம் புலத்து ஆறு ஓம்பல் தலை - ஐந்து இடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறம்ஆம். (பிதிரராவார் படைப்புக்காலத்து அயனால் படைக்கப்பட்டதோர் கடவுட்சாதி; அவர்க்கு இடம் தென்திசை ஆதலின், 'தென்புலத்தார்' என்றார். தெய்வம் என்றது சாதியொருமை. 'விருந்து' என்பது புதுமை; அஃது ஈண்டு ஆகுபெயராய்ப் புதியவராய் வந்தார்மேல் நின்றது; அவர் இரு வகையர்: பண்டு அறிவுண்மையின் குறித்து வந்தாரும், அஃது இன்மையின் குறியாது வந்தாரும் என. ஒக்கல்: சுற்றத்தார். எல்லா அறங்களும் தான் உளனாய் நின்று செய்ய வேண்டுதலின் தன்னை ஓம்பலும் அறனாயிற்று. 'என்ற என்பது விகாரமாயிற்று'. 'ஆங்கு' அசை. ஐவகையும் அறம் செய்தற்கு இடனாகலின் 'ஐம்புலம்' என்றார். அரசனுக்கு இறைப்பொருள் ஆறில் ஒன்றாயிற்று, இவ்வைம்புலத்திற்கும் ஐந்து கூறு வேண்டுதலான் என்பதறிக.).
மணக்குடவர் உரை:
பிதிரர், தேவர், புதியராய் வந்தார், சுற்றத்தார், தானென்னு மைந்திடமாகிய நெறியைக் கெடாம லோம்புதல் தலையான இல்வாழ்க்கை. தனக்குண்டான பொருளை ஆறு கூறாக்கி ஒருகூறு அரசற்குக் கொடுத்து ஒழிந்தவைந்து கூறினுந் தான் கொள்வது ஒரு கூறென்றற்குத் தன்னையு மெண்ணினார். இது தலையான இல்வாழ்க்கை வாழும் வாழ்வு கூறிற்று: என்னை? இவையெல்லா மொருங்கு செய்யப்படுதலின் மேற்கூறிய அறுவரும் விருந்தினது வகையினரென்று கொள்ளப்படுவர்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
முன்னோர்கள், தெய்வம், விருந்து, சுற்றம், தான் என்ற ஐந்திடத்தும் செய்யவேண்டிய நல்வழியினைப் போற்றிக் காத்து வழுவாமல் நடந்துகொள்ளுதல் சிறப்புடைய அறமாகும்.
குறள் 44:
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது.
மு.வரதராசனார் உரை:
பொருள் சேர்க்கும் பொது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும் போது பகுந்து உண்பதை மேற்க்கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
பொருள் தேடும்போது பாவத்திற்குப் பயந்து தேடிய பொருளை உறவோடு பகிர்ந்து உண்ணும் இல்வாழ்பவனின் பரம்பரை ஒருகாலும் அழிவதில்லை.
பரிமேலழகர் உரை:
பழி அஞ்சிப் பாத்து ஊண் வாழ்க்கை உடைத்தாயின் - பொருள் செய்யுங்கால் பாவத்தை அஞ்சி ஈட்டி, அப்பொருளை இயல்பு உடைய மூவர் முதலாயினார்க்கும் தென் புலத்தார் முதலிய நால்வர்க்கும் பகுத்துத் தான் உண்டலை ஒருவன் இல்வாழ்க்கை உடைத்தாயின்; வழி எஞ்ஞான்றும் எஞ்சல் இல் - அவன் வழி உலகத்து எஞ்ஞான்றும் நிற்றல் அல்லது இறத்தல் இல்லை. (பாவத்தான் வந்த பிறன் பொருளைப் பகுத்து உண்ணின், அறம் பொருளுடையார் மேலும், பாவம் தன் மேலுமாய் நின்று வழி எஞ்சும் ஆகலின், 'பழி அஞ்சி' என்றார். வாழ்வானது உடைமை வாழ்க்கை மேல் ஏற்றப்பட்டது.).
மணக்குடவர் உரை:
இல்வாழ்க்கையாகிய நிலை, பழியையுமஞ்சி பகுத்துண்டலையுமுடைத்தாயின், தனதொழுங்கு, இடையறுதல் எக்காலத்தினுமில்லை. மேல் பகுக்குமாறு கூறினார். பகுக்குங்காற் பழியோடு வாராத பொருளைப் பகுக்க வேண்டுமென்று கூறினார்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
மற்றவர்கள் கூறும் பழிக்கு அஞ்சிப் பிறர்க்கும் பகுத்துக் கொடுத்து வாழ்கின்ற இல்லறத்தானுடைய பரம்பரை என்றும் குறைவின்றி இருப்பதாகும்.
குறள் 45:
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை.
மு.வரதராசனார் உரை:
இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே; பயனும் அதுவே.
பரிமேலழகர் உரை:
இல்வாழ்க்கை அன்பும் அறனும் உடைத்தாயின் - ஒருவன் இல்வாழ்க்கை தன் துணைவிமேல் செய்யத்தகும் அன்பினையும், பிறர்க்குப் பகுத்து உண்டல் ஆகிய அறத்தினையும் உடைத்தாயின்; அது பண்பும் பயனும் - அவ்வுடைமை அதற்குப் பண்பும் பயனும் ஆகும். (நிரல்நிறை. இல்லாட்கும் கணவற்கும் நெஞ்சு ஒன்றாகா வழி இல்லறம் கடைபோகாமையின், அன்புடைமை பண்பு ஆயிற்று; அறனுடைமை பயன் ஆயிற்று. இவை மூன்று பாட்டானும் இல்நிலையில் நின்றான் அறஞ்செய்யுமாறு கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை:
இல்வாழ்க்கையாகிய நிலை யாவர்மட்டும் அன்பு செய்தலையும் அறஞ்செய்தலையும் உடைத்தாயின், அதற்குக் குண மாவதும் பயனாவதும் அவ்விரண்டினையு முடைமை தானே. பயன் வேறு வேண்டாம் :தனக்கும் பிறர்க்கும் உண்டான முகமலர்ச்சி தானே யமையுமென்பது. இது பழியோடு வாராத வுணவை நுகர வேற்பார் மாட்டு அன்புசெய்யவேண்டுமென்பதும் சீலனாய்க் கொடுக்க வேண்டுமென்பதும் கூறிற்று.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
இல்லற வாழ்க்கையானது அன்பினையும் அறத்தினையும் உடையதாக இருக்குமேயானால் அதுவே இல்லறத்தின் பண்பும் பயனுமாகும்

 

 

Thursday, 20 August 2020

சீறாப் புராணம் -20.08.2020

 

சீறாப் புராணம்

தமிழில் எழுதப்பட்ட தலைச்சிறந்த இசுலாமிய இலக்கியம் சீறாப் புராணம் ஆகும். இந்நூல் இறைதூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு தமிழ்மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம். இதனை இயற்றியவர் 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் ஆவார். அதே காலத்தில் வாழ்ந்த வள்ளல் சீதக்காதியின் ஆதரவை உமறுப் புலவர் பெற்றார். வள்ளல் சீதக்காதியின் பெருமையைச் "செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என்ற சொற்றொடர் விளக்கும்.

சீறாப்புராண அமைப்பு

இரண்டு பாகங்களில் அமைந்துள்ளது. முதற்பாகத்தில் 44படலங்களும், இரண்டாவது பாகத்தில் 47படலங்களும் உடையதாக உள்ளது.

முதற்பாகம்

முதற்பாகமானது இரண்டு காண்டங்களாக அமைந்துள்ளது. இப்பாகத்தில் மொத்தம் 44படலங்கள் உள்ளன. அவை கீழ்கண்டவாறு பிரிந்துள்ளன.
  1. கடவுள் வாழ்த்துப் படலம்
  2. நாட்டுப் படலம்
  3. தலைமுறைப் படலம்
  4. நபியவதாரப் படலம்
  5. அலிமா முலையூட்டுப் படலம்
  6. இலாஞ்சனை தரித்த படலம்
  7. புனல் விளையாட்டுப் படலம்
  8. புகைறா கண்ட படலம்
  9. பாதை போந்த படலம்
  10. சுரத்திற் புனலழைத்த படலம்
  11. பாந்தள்வதைப் படலம்
  12. நதிகடந்த படலம்
  13. புலிவசனித்த படலம்
  14. பாந்தள் வசனித்த படலம்
  15. இசுறாகாண் படலம்
  16. கள்வரை நதிமறித்த படலம்
  17. சாமு நகர் புக்க படலம்
  18. கரம் பொருத்து படலம்
  19. ஊசாவைக் கண்ட படலம்
  20. கதீசா கனவு கண்ட படலம்
  21. மணம் பொருத்து படலம்
  22. மணம்புரி படலம்
  23. கஃபத்துல்லா வரலாற்றுப் படலம்

நுபுவ்வத்துக் காண்டம்

இரண்டாவதாக அமைந்துள்ள இதில், மொத்தம் 21 படலங்கள் உள்ளன.
  1. தொழுகை வந்த வரலாற்றுப் படலம்
  2. தீனிலைக்கண்ட படலம்
  3. உமறுகத்தாபீமான் கொண்ட படலம்
  4. உடும்பு பேசிய படலம்
  5. உத்துபா வந்த படலம்
  6. அபீபு மக்கத்துக்கு வந்த படலம்
  7. மதியையழைப்பித்த படலம்
  8. தசைக் கட்டியைப் பெண்ணுருவமைத்த படலம்
  9. அபீபு ராஜா வரிசை வரவிடுத்த படலம்
  10. ஈமான் கொண்டவர்கள் அபாசா ராச்சியத்துக்குப் போந்த படலம்
  11. மானுக்குப் பிணை நின்ற படலம்
  12. ஈத்தங்குலை வரவழைத்த படலம்
  13. ஒப்பெழுதித் தீர்ந்த படலம்
  14. புத்து பேசிய படலம்
  15. பிராட்டியார் பொன்னுலகு புக்க படலம்
  16. பருப்பதராசனைக் கண்ணுற்ற படலம்
  17. அத்தாசீமான் கொண்ட படலம்
  18. சின்களீமான் கொண்ட படலம்
  19. காம்மாப் படலம்
  20. விருந்தூட்டுப் படலம்

இரண்டாம் பாகம்

இப்பாகத்தில் இறுதிக்காண்டமான, இசிறத்துக்(ஹிஜிறத்துக் காண்டம்)காண்டம் அமைந்துள்ளது. இக்காண்டம், மொத்தம் 47 படலங்களைப் பெற்றுள்ளது.
  1. ஈமான் கொண்ட படலம்
  2. மதீனத்தார் வாய்மை கொடுத்த படலம்
  3. யாத்திரைப் படலம்
  4. விடமீட்ட படலம்
  5. சுறாக்கத்துத் தொடர்ந்த படலம்
  6. உம்மி மகுபதுப் படலம்
  7. மதீனம்புக்க படலம்
  8. கபுகாபுப் படலம்
  9. விருந்திட்டீமான் கொள்வித்த படலம்
  10. உகுபான் படலம்
  11. சல்மான் பாரிசுப் படலம்
  12. ககுபத்துல்லாவை நோக்கித் தொழுத படலம்
  13. ஓநாய் பேசிய படலம்
  14. வத்தான் படைப் படலம்
  15. பாத்திமா திருமணப் படலம்
  16. சீபுல் பகுறுப் படலம்
  17. புவாத்துப் படலம்
  18. அசீறாப் படலம்
  19. பத்னுன்ன குலாப் படலம்
  20. பத்றுப் படலம்
  21. சவீக்குப் படலம்
  22. குதிரிப் படலம்
  23. தீயம்றுப் படலம்
  24. அபிறாபிகு வதைப் படலம்
  25. அசனார் பிறந்த படலம்
  26. அபூத்தல்ஹா விருந்துப் படலம்
  27. உகுதுப் படலம்
  28. அமுறாப் படலம்
  29. ககுபு வதைப் படலம்
  30. சுகுறாப் படலம்
  31. பதுறு சுகுறாப் படலம்
  32. உசைனார் பிறந்த படலம்
  33. தாத்துற் றஹ்ஹாக்குப் படலம்
  34. சாபிர் கடன் றீர்த்த படலம்
  35. முறைசீக்குப் படலம்
  36. கந்தக்குப் படலம்
  37. உயை வந்த படலம்
  38. பனீ குறைலா வதைப் படலம்
  39. லுமாமீமான் கொண்ட படலம்
  40. செயினபு நாச்சியார் கலியாணப் படலம்
  41. ஒட்டகை பேசிய படலம்
  42. மழையழைப்பித்த படலம்
  43. அந்தகன் படலம்
  44. கவுலத்தை விட்டுக் கூட்டின படலம்
  45. உமுறாவுக்கு போன படலம்
  46. சல்மா பொருத படலம்
  47. உறனிக் கூட்டத்தார் படலம்
 
 

Monday, 20 July 2020

பெரியபுராணம் - 20.07.2020

 

திருத்தொண்டர் புராணம் (பெரியபுராணம்)

திருச்சிற்றம்பலம்

147

கங்கையும் மதியும் பாம்பும் கடுக்கையும் முடி மேல் வைத்த 
அங்கணர் ஓலை காட்டி ஆண்டவர் தமக்கு நாடு 
மங்கையர் வதன சீத மதி இருமருங்கும் ஓடிச் 
செங்கயல் குழைகள் நாடும் திருமுனைப்பாடி நாடு .

1.5.1

148

பெருகிய நலத்தால் மிக்க பெரும் திரு நாடு தன்னில் 
அரு மறைச் சைவம் ஓங்க அருளினால் அவதரித்த 
மருவிய தவத்தால் மிக்க வளம்பதி வாய்மை குன்றாத் 
திரு மறையவர்கள் நீடும் திரு நாவலூராம் அன்றே.

1.5.2

149

மாதொ ஒரு பாகனார்க்கு வழி வழி அடிமை செய்யும் 
வேதியர் குலத்துள் தோன்றி மேம்படு சடையனார்க்(கு) 
ஏதமில் கற்பின் வாழ்க்கை மனை இசை ஞானியார்பால் 
தீதகன்று உலகம் உய்யத் திரு அவதாரம் செய்தார்.

1.5.3

150

தம்பிரான் அருளினாலே தவத்தினால் மிக்கோர் போற்றும், 
நம்பி ஆரூரர் என்றே நாமமும் சாற்றிமிக்க 
ஐம் படை சதங்கை சாத்தி அணிமணிச் சுட்டிச் சாத்தி 
செம் பொன் நாண் அரையில் மின்னத் தெருவில் தேர் உருட்டு நாளில்.

1.5.4

151

நர சிங்க முனையர் என்னும் நாடு வாழ் அரசர் கண்டு 
பரவருங் காதல்கூரப் பயந்தவர் தம்பால் சென்று 
விரவிய நண்பினாலே வேண்டினர் பெற்றுத் தங்கள் 
அரசிளங் குமரற்கு ஏற்ப அன்பினால் மகன்மை கொண்டார்.

1.5.5

152

பெருமைசால் அரசர் காதற் பிள்ளையாய்ப் பின்னும் தங்கள் 
வரு முறை மரபில் வைகி வளர்ந்து மங்கலம் செய் கோலத்து 
அரு மறை முந் நூல் சாத்தி அளவில் தொல் கலைகள் ஆய்ந்து 
திரு மலி சிறப்பின் ஓங்கிச் சீர் மணப் பருவஞ் சேர்ந்தார்.

1.5.6

153

தந்தையார் சடையனார் தம் தனித் திரு மகற்குச் சைவ 
அந்தணர் குலத்துள் தங்கள் அரும் பெரும் மரபுக்கு ஏற்ப 
வந்த தொல் சிறப்பிற் புத்தூர்ச் சடங்கவி மறையோன் தன்பால் 
செந் திரு அனைய கன்னி மணத் திறஞ் செப்பி விட்டார்.

1.5.7

154

குல முதல் அறிவின் மிக்கோர் கோத்திர முறையும் தேர்ந்தார் 
நல மிகு முதியோர் சொல்லச் சடங்கவி நன்மை ஏற்று 
மலர் தரு முகத்தன் ஆகி மணம் புரி செயலின் வாய்மை 
பலவுடன் பேசி ஒத்த பண்பினால் அன்பு நேர்ந்தான்

1.5.8

155

மற்றவன் இசைந்த வார்த்தை கேட்டவர் வள்ளல் தன்னைப் 
பெற்றவர் தம்பால் சென்று சொன்ன பின் பெருகு சிந்தை 
உற்றதோர் மகிழ்ச்சி எய்தி மண வினை உவந்து சாற்றிக் 
கொற்றவர் திருவுக்கு ஏற்பக் குறித்து நாள் ஓலை விட்டார்.


156

மங்கலம் பொலியச் செய்த மண வினை ஓலை ஏந்தி 
அங்கயற் கண்ணினாரும் ஆடவர் பலரும் ஈண்டிக் 
கொங்கலர்ச் சோலை மூதூர் குறுகினார் எதிரே வந்து 
பங்கய வதனி மாரும் மைந்தரும் பணிந்து கொண்டார்.


Friday, 19 June 2020

மணிமேகலை - 19.06.2020

 

மணிமேகலை (காப்பியம்)

மணிமேகலை ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.மணிமேகலை காப்பியத்தில் அடி இணையும், அதன் வழிபாடும், வேறு கடவுள்களின் வழிபாடும் இருக்கும் நிலையில், அது ஒரு மஹாயாண காப்பியமாகவே இருக்கமுடியும். மேலும், மஹாயாண பௌத்தமானது இல்லறத்தையும், துறவறத்தையும் வலியுறுத்தும் நிலையிலும், சிலப்பதிகாரமானது இல்லறத்தையும், மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதாலும், இவைகள் இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.

கதை

சிலப்பதிகாரத்திற்கு அடுத்ததாக இலக்கிய அழகில் பெருமைவாய்ந்த மணிமேகலை, ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்றாகும். இக்காப்பியத்தின் தலைவி, மணிமேகலை, சிலப்பதிகாரத்தின் கோவலன் மற்றும் மாதவி என்பவர்களின் மகளாவாள். கோவலனின் துயர மரணத்திற்குப் பிறகு மாதவி தன் மகளை ஒரு புத்தத் துறவியாக வளர்த்தாள். ஒரு சமயத்தில் மணிமேகலையும் அவளுடைய தோழியும் பூப்பறிக்கச் சென்றிருந்தபோது, உதயகுமரன் என்ற சோழ மன்னன் மணிமேகலையின் மீது காதல் மயக்கம் கொண்டான். கடலின் கடவுளான மணிமேகலா, மணிமேகலையின் உலக இன்பங்கள் துறந்த வாழ்க்கையைப் பாதுகாக்க, அவளை தான் அறியாமலே மணிபல்லவம் என்ற தீவில் கொண்டு விட்டாள். அத்தீவில் மணிமேகலை ஒரு புத்த பீடிகை மூலம் தனது முன்பிறப்பைப் பற்றி அறிந்தாள். அதன் பிறகு, கடலின் கடவுள் மணிமேகலா, மணிமேகலையிடம் அவள் ஏன் மணிபல்லவத்திற்கு அழைத்து வரப்பட்டாள் என்பதைக் கூறி, மூன்று அதிசய மந்திரங்களையும் கற்றுக்கொடுத்தாள். அத்தீவில் மணிமேகலை 'அமுத சுரபி' என்ற உணவுக் கிண்ணத்தைக் கண்டெடுத்து, அதிலிருந்து அளவற்ற உணவை புகாரிலுள்ள ஏழைஎளியோருக்கு வழங்கினாள். இதையெல்லாம் கண்ட உதயகுமரன், மணிமேகலை தன்னை மணக்க வேண்டும் என்று அவளை வற்புறுத்தினான். ஆனால் மணிமேகலை தான் கற்ற வித்தையைப் பயன்படுத்தி காயசண்டிகையாக உருமாற்றிக் கொண்டாள். உண்மையான காயசண்டிகையின் கணவன் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் உதயகுமரனைக் கொலை செய்துவிட்டான். இதற்காகக் காயசண்டிகையின் உருவத்தில் இருக்கும் மணிமேகலை கைது செய்யப்படுகிறாள். ஆனால் தனது தாயாரின் உதவியோடு விடுவிக்கப்படுகிறாள். பிறகு அவள் வஞ்சி நகரத்திற்குச் சென்று தந்து ஞான ஆசிரியரான கண்ணகியிடம் உரையாடி அறிவுரை பெற்றாள். அத்துடன் அனைத்து மதங்களின் நிறைகுறைகளை வல்லுனர்களிடமிருந்து அறிந்தாள். அதன்பிறகு காஞ்சி நகரத்திற்குச் சென்று தனது ஆசானான அறவண அடிகளிடம் படிப்பினை பெற்று ஒரு முழுமையான புத்தத் துறவியாகி, தவத்தில் ஆழ்ந்தாள்

கதாப்பாத்திரங்கள்

மணிமேகலை - கோவலன் மாதவி தம்பதியின் மகள். இரத்தத்திலேயே ஊறிய துணிச்சல், பண்புகள் அதிகம் பெற்றவள். துறவியாகவேண்டும் என்று கூறிய புத்த மதப் பிக்குணி, ஒரு புறமும், தன்னை மோகத்தினால் பின்தொடர்ந்த சோழ மன்னன் மறுபுறமும் இருந்தும், மணிமேகலை அனைத்துத் தடைக்கற்களையும் துணிச்சலுடன் உடைத்தெறிந்தாள். பிறகு தன் விருப்பப்படியே புத்தத் துறவியாகி மக்களின் பசியைப் போக்குவதையே தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்த மணிமேகலை, அவள் மறைவிற்கு பின் தெய்வமாகப் போற்றப்பட்டாள். கோவலன் இரத்தத்தில் பசுமரத்தாணி போல் பதிந்திருந்த வீரம் மணிமேகலையிடம் இருந்ததால்தான் இது சாத்தியமானது. மாதவியைப் போல் மணிமேகலையிடம் அளவற்ற பண்புகள் இருந்தமையால்தான், தனது தாயார், ஆசான் மற்றும் ஞானபிதாவின் பேச்சை மதித்து நடக்கிறாள். இக்காப்பியமே மணிமேகலை பெரியவர்களின் பேச்சைக் கேட்டு நடப்பதை மூலமாகக் கொண்டு அமைந்துள்ளது.

உதயகுமரன் - சோழ மன்னன், மணிமேகலையின் மீது முட்டாள் தனமான மோகம் கொண்டவன். நினைத்ததை அடையவேண்டும் என்ற குணம் படைத்தவன். ஆசை இருக்கலாம் ஆனால் வெறித்தனமான ஆசை இருந்தால் அழிவு நிச்சயம் என்பதை உதயகுமரன் கதாப்பாத்திரம் காட்டியுள்ளது. மணிமேகலையின் மேல் காதல்கொண்ட உதயகுமரன் அவளது துறவியாக வேண்டும் என்ற ஆசையை அறிந்தும் கூட அவளைப் பின்தொடர்ந்தான். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளால், கஞ்சணன் என்பவன் உதயகுமாரனைக் கொலை செய்துவிட்டான்.

சுதமதி - மணிமேகலையின் நம்பகமான தோழி. மணிமேகலையை மணிபல்லவத்தில் விட்டு, அவளை ஆன்மீகப் பாதையில் செலுத்தியதை மேகலையின் தாயாரிடம் கூடக் கூறாமல், சுதமதியின் கனவிலேயே முதலில் தோன்றி நடந்ததை கூறினாள், கடலின் கடவுள் மணிமேகலா. இது சுதமதியின் மேல் மணிமேகலா வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது. இக்காப்பியத்திலேயே மணிமேகலையின் ஒரே தோழி சுதமதிதான். அக்காலகட்டங்களில் நண்பர்களுக்கெல்லாம் ஒரு இலக்கணமாக அமைந்தவள் சுதமதி. அவளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியவை பல உண்டு.

இயற்றப்பட்ட காலம்

மணிமேகலை காப்பியத்தின் காலம் தொடர்பாக முரண்பட்ட கருத்துக்கள் இருந்து வருகின்றன. இது நியாயப் பிரவேசம் என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப் படுகிறது.

மணிமேகலை நியாயப் பிரவேசத்தைப் பின்பற்றித் தோன்றியது என்று கருதப்படுகிறது. இதனைப் பின்பற்றி மணிமேகலையின் காலம் பொ.ஆ. 450 - பொ.ஆ. 550 என்று சோ.ந. கந்தசாமி கருதுகின்றார்.[3]

பாவ்லா ரிச்மேன் மணிமேகலையின் காலம் பொ.ஆ. ஆறாம் நூற்றாண்டு என்று குறிப்பிடுகிறார்.[4] இவ் ஆய்வுகளில் இருந்து மாறுபட்ட எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் மணிமேகலை திண்ணாகருக்கும் நியாயப் பிரவேசத்திற்கும் முற்பட்டது என்று விளக்குகின்றார். அதன்வழி மணிமேகலை பொ.ஆ. ஐந்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்று குறிப்பிடுகிறார். 

Wednesday, 20 May 2020

நற்றிணை - 20.05.2020


 நற்றிணை

 நற்றிணை என்னும் இந்நூல் தனிப்பாடல்களாக பலராலும் பாடப்பட்டு பின்னர் தொகுக்கப்பட்டது. இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். எட்டுத்தொகை நூல்கள் இவையெனப் பாடும் வெண்பாவால் முதலிடம் பெற்றுத்திகழ்வது நற்றிணை ஆகும். நல் என்ற அடைமொழி பெற்றது. இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர். இந்நூல் 9 அடி முதல் 12 அடிகள் வரை அமைந்த கடவுள் வாழ்த்தோடு 401 பாடல்களைக் கொண்டது. இந்நூலைத் தொகுத்தவர் யாரெனத் தெரியவில்லை. தொகுப்பித்தவன் "பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி" ஆவான். நற்றிணைப் பாடல்கள் அகப்பொருள் பாடல்களாம். 

பாடியோர்

நற்றிணையில் உள்ள 401 பாடல்களை 187 புலவர்கள் பாடியுள்ளனர்.குறுந்தொகைப் புலவர்கள் போலவே நற்றிணைப் புலவர்களும் பாடல் தொடர்களால் பெயர் பெற்றுள்ளனர். அவர்கள் - வண்ணப்புறக் கந்தத்தனார், மலையனார், தனிமகனார், விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார், தும்பிசேர்க்கீரனார், தேய்புரிப் பழங்கயிற்றினார், மடல் பாடிய மாதங்கீரனார் என்ற எழுவராவர். மேலும் 59 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் காணப்படவில்லை. இதில் உள்ள நானூறு பாடல்களில் 234ஆம் பாடலும் 385ஆம் பாடலின் ஒரு பகுதியும் கிட்டவில்லை. திணை அடிப்படையில் பார்க்கும்போது குறிஞ்சித் திணைப் பாடல்கள் 130, பாலைப் பாடல்கள் 107, நெய்தல் படல்கள் 101, மருதப் பாடல்கள் 33, முல்லைப் பாடல்கள் 28 அமைந்துள்ளன.

துறைவிளக்கம் 

இந்நூல் என்றும் நின்று நிலவ வேண்டிக் கடவுளை வாழ்த்துவான் எடுத்துக்கொண்ட ஆசிரியர், மாயோனே வேதமுதல்வனென ஆன்றோர் கூறுவராதலின், யாமும் அவனையே வணங்குவோமென்று வாழ்த்துக் கூறாநிற்பது.

“பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே

 

நாடுங் காலை நாலிரண் டுடைத்தே”     (தொல். பாடாண் 80)

எனப் பெறப்பட்ட கடவுள் வாழ்த்து வகை முதலிய எட்டு வகையினுள் இது கடவுள் வாழ்த்து என்னும் வகையினுள் அடங்கும்.

“வாழ்த்தியல் வகையே நாற்பாக்கும் உரித்தே” என்னும் விதிபற்றி ஆசிரியர் பாரதம் பாடிய பெருந்தேவனார் இந்நூற்கு ஆசிரியப் பாவாற் கடவுள் வாழ்த்துக் கூறுவாராயினர் என்க. இஃது உலகிற்குப் பயன்பட இறைவனைப்படர்க்கையில் வைத்து வாழ்த்தியபடியாம்.

பாடல்

மாநிலஞ் சேவடி யாக தூநீர்

வளைநரல் பெளவம் உடுக்கை யாக

விசும்புமெய் யாக திசைகை யாக

பசுங்கதிர் மதியோடு சுடர்கண் ணாக

இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய

வேத முதல்வன் என்ப

தீதற விளங்கிய திகிரி யோனே.


புலவர் - பாரதம் பாடிய பெருந்தேவனார். 

Thursday, 16 April 2020

சிலப்பதிகாரம் - 17.04.2020

 

 சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம் சிலம்பு- அதிகாரம் என்ற இரு சொற்களால் ஆனது. சிலம்பு காரணமாக விளைந்த கதை ஆனதால் சிலப்பதிகாரம் ஆயிற்று. இந்நூல் தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று.இந்நூல் 'பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள்' எனவும் வழங்கப்படுகிறது. இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றனையும் காணலாம். கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பர். ஏனைய நூல்கள் அரசனையோ தெய்வங்களையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டிருக்க சிலப்பதிகாரம் கோவலன் என்ற குடிமகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டதால் இதனை 'குடிமக்கள் காப்பியம்' என்றும் கூறுவர். இன்பியலும் துன்பியலும் கலந்து எழுதப்பட்ட இந்நூலை இயற்றியவர் இளங்கோ அடிகள் என்பவராவார். இவர் புகழ் பெற்ற சேரமன்னன் செங்குட்டுவனுடைய தம்பி எனக் கருதப்படுகின்றது.

இளங்கோவடிகள்

இவர் இளவரசுப் பட்டத்தை விடுத்துத் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். தன் அண்ணன் செங்குட்டுவனுடன் மலை வளம் காணச் சென்றபோது, கண்ணகியைப் பற்றிய செய்தியை சீத்தலைச் சாத்தனார் எனும் புலவர் மூலமாக அறிந்தார் இளங்கோ. கண்ணகியின் கற்பொழுக்கமும், பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் நேர்மையும் அரசியல் நடுநிலைமையும் அவரை மிகவும் கவர, மூவேந்தர்களுக்கும் உரிய தமிழின் உயர் காவியமாக சிலப்பதிகாரத்தை கவிபுனைந்தார் அவர்.

சிலப்பதிகாரம் கோவலன், கண்ணகி மற்றும் கோவலனின் துணைவி மாதவி ஆகியோரது வரலாற்றை விவரிக்கின்றது. இதன் இரட்டைக் காப்பியமாகத் திகழும் மணிமேகலை, ஆடலரசி மாதவியின் மகள் மணிமேகலையின் வரலாற்றை உரைக்கும் காவியமாகும். இதனை எழுதியவர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்னும் புலவர் ஆவார்.


காண்டங்கள்

  • புகார்க் காண்டம்
  • மதுரைக் காண்டம்
  • வஞ்சிக் காண்டம்

கதை

காவிரிப்பூம்பட்டினத்து பெரு வணிகன் மாசாத்துவானின் மகன் கோவலன். இவன் கலையுணர்வும், வறியோர்க்கு உதவும் நற்பண்பும் மிக்கவன். காவிரிப்பூம்பட்டினத்துப் பெருவணிகன் மாநாயகனின் மகள் கண்ணகி. இவள் திருமகள் போன்ற அழகும், அழகிய பெண்கள் போற்றும் பெருங்குணச்சிறப்பும், கற்புத்திறமும் கொண்டவள். இவ்விருவரும் மனையறம் பூண்டு, இன்புற்று வாழ்ந்தனர்.

கோவலன் ஆடலரசி மாதவியை விரும்பிக் கண்ணகியை விட்டுப் பிரிந்தான். அவன் மாதவி இல்லத்திலேயே தங்கித் தன் செல்வத்தையெல்லாம் இழந்தான். மாதவி இந்திர விழாவில் கானல் வரிப் பாடலைப் பாடினாள். பாடலின் பொருளைத் தவறாகப் புரிந்து கொண்ட கோவலன், மாதவியை விட்டுப் பிரிந்தான், பிரிந்தவன் தன் மனைவி கண்ணகியிடம் சென்றான். தான் இழந்த செல்வத்தை ஈட்ட எண்ணினான். வணிகம் செய்தற்பொருட்டு கண்ணகியுடன் மதுரைக்குச் சென்றான். அவர்களுக்கு வழித்துணையாகக் கவுந்தியடிகள் என்னும் சமணத் துறவியும் சென்றார். அவர், மதுரை நகர்ப்புறத்தில் மாதரிஎன்னும் இடைக்குல மூதாட்டியிடம் அவ்விருவரையும் அடைக்கலப்படுத்தினார். கோவலன் சிலம்பு விற்று வர மதுரை நகரக் கடை வீதிக்குச் சென்றான். விலை மதிப்பற்ற காற்சிலம்பு ஒன்றை கோவலன் விற்பதைப் பாண்டிய மன்னனின் பொற்கொல்லன் அறிந்தான்.

பாண்டிமாதேவியின் காற்சிலம்பைக் களவாடிய பொற்கொல்லன், பொய்யான பழியைக் கோவலன் மேல் சுமத்தினான். அதனை , சிலம்பைக் கொணர்க என்று ஆணையிட்டான். கோவலன் கொலை செய்யப்பட்ட செய்தியை மாதரி மூலம் அறிந்த கண்ணகி; பெருந்துயருற்றாள். அவள் தன் கணவன் கள்வன் அல்லன் என்பதை மன்னனுக்கும் உலகோர்க்கும் உணர்த்த எண்ணினாள். மன்னனின் அனுமதியோடு, வாயிற்காவலன், கண்ணகியை பாண்டிய மன்னனிடம் அழைத்துச் சென்றான். மன்னன் கண்ணகியை நோக்கி " நீரொழுகும் கண்களுடன் எம்முன் வந்து நிற்கும் நீ, யார்?" என வினவினான். கண்ணகி மன்னனை நோக்கி, "ஆராய்ந்து நீதி வழங்காத மன்னனே! உன்னிடம் கூறுவது ஒன்றொண்டு என உரைக்கத் தொடங்கினாள். "புறாவின் துன்பத்தைப் போக்கிய சிபி மன்னனும் தன் அரண்மனை மணி ஒலித்ததைக் கேட்டுப் பசுவின் துயர் அறிந்து தன் ஒப்பற்ற மகனையே தேர்ச்சக்கரத்திலிட்டுக் கொன்ற மனுநீதிச் சோழனும் வாழ்ந்த, பெரும்புகழுடைய புகார் நகரமே, யான் பிறந்த ஊர். அப்புகார் நகரில் பழியில்லாத சிறப்பினையுடைய புகழ்மிக்க குடியில் தோன்றிய மாசத்துவான் மகனை மணம் புரிந்தேன். வீரக்கழலணிந்த மன்னனே! ஊழ்வினைப் பயனால் வாழ்வதற்காக நின் மதுரை நகரத்திற்கு வந்து, என் காற்சிலம்பினை விற்க முயன்று, உன்னால் கொலை செய்யப்பட்ட கோவலன் மனைவி, நான். கண்ணகி என்பது என் பெயர் " என்று கூறினாள். பாண்டிய மன்னன் கண்ணகியிடம்" கள்வனைக் கொலை செய்தல் கொடுங்கோலன்று. அதுவே அரச நீதி என்று கூறினான். அதற்குக் கண்ணகி "அறநெறியில் செல்லாத அரசனே! என் காற்சிலம்பு, மாணிக்கப் பரல்களைக் கொண்டது" என்றாள். அதற்கு அரசன் "நீ கூறியது, நல்லதே! எம்முடைச் சிலம்பின் பரல்கள் முத்துகளே" என்றான். கோவலனிடமிருந்து கைப்பற்றிய சிலம்பைத் தருவித்து, அவள் முன் வைத்தான். வைத்த அச்சிலம்பைனைக் கண்ணகி எடுத்து ஓங்கி உடைத்தாள். அதிலிருந்து வெளிப்பட்ட மாணிக்கப்பரல் ஒன்று பாண்டிய மன்னனின் உதட்டில்பட்டுத் தெறித்தது. அம்மாணிக்கப் பரல்களைக் கண்ட பாண்டிய மன்னன் தாழ்வுற்ற குடையனாய், சோர்வுற்ற செங்கோலனாய், "பொன் தொழில் செய்யும் கொல்லனின் பொய்யுரை கேட்டு, அறநெறி தவறிய, நானோஅரசன்! நானே கள்வன். அறந்தவறாது குடிமக்களைக் காக்கும் தொன்மையாட்சி என் முதல் தவறியது. என் வாழ்நாள் அழியட்டும்" என்றவாறே மயங்கி வீழ்ந்தான். மன்னனின் மனைவி உள்ளங்கலங்கி, உடல் நடுங்கி, கணவனை இழந்த மகளிர்க்கு, எவ்விதத்திலும் ஆறுதல் கூற இயலாது என்று கூறித் தன் கணவனின் திருவடிகளை வணங்கி நிலத்தில் வீழ்ந்து இறந்தாள்.

ஆய்ச்சியர் குரவை

ஆயர் சேரியிலே பல தீய நிமித்தங்கள் தோன்றின. குடத்திலிட்டு வைத்த பாலோ உறையவில்லை. ஏற்றின் அழகிய கண்களிலிருந்து நீர் சொரிகின்றன. வெண்ணெயோ உருக்கவும் உருகாது போயிற்று. ஆநிரைகளின் கழுத்து மணிகள் நிலத்திலே அறுந்து வீழ்கின்றன. ஆட்டுக்குட்டிகள் துள்ளியாடாவாய் முடங்கிக் கிடக்கின்றன. அதனால் தீமை நேரும் என்று அஞ்சிய ஆயமகளிர்கள், தம் குலதெய்வமான கண்ணனை வேண்டிக் குரவைக் கூத்து ஆடுகின்றனர். 

Friday, 21 February 2020

கம்பராமாயணம் - 21.2.2020

 

              கம்பராமாயணம்

இராமனது வரலாற்றைக் கூறும் நூல் இராமாயணம் எனப்பட்டது. கம்பராமாயணம் எனும் நூல் குலோத்துங்க சோழனின் ஆணைப்படி கம்பர் எனும் பெரும் புலவரால் இயற்றப்பட்ட தமிழ் நூலாகும். இந்நூல் இந்து சமய இதிகாசங்கள் இரண்டினுள் ஒன்றான இராமாயணத்தினை மூலமாகக் கொண்டு இயற்றப்பட்டதாகும். கம்பரால் இயற்றப்பட்ட கம்பராமாயணம் ஒரு வழி நூலாகும். இது வடமொழியில் வால்மீகி என்பவர் இயற்றிய இராமாயணத்தினைத் தழுவி எழுதப்பட்ட நூல் ஆகும். இது ஒரு வழி நூலாகவே இருந்தாலும் கம்பர் தனக்கே உரித்தான பாணியில் கருப்பொருள் சிதையாமல் தமிழ் மொழியில் இயற்றியுள்ளார். வடமொழி கலவாத தூய தமிழ்ச்சொற்களைத் தனது நூலில் கையாண்டதால் கம்பர், தொல்காப்பிய நெறி நின்றவர் என்று புகழப்படுகிறார். {("வடசொல் கிளவி வடஎழுத் தொரீ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகுமே ") (தொல்காப்பியம், எச்சவியல், 5)}

மூல இலக்கியமான வடமொழி இராமாயணத்திலிருந்து சில மாறுபாடுகளோடு கம்பர் இந்நூலை இயற்றியிருந்தார். கம்பர் இயற்றிய இராமாயணம் என்பதால், இது கம்பராமாயணம் என்று அழைக்கப்படுகிறது.

கம்பராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் எனும் ஆறு காண்டங்களையும், 123 படலங்களையும் உடையது. காண்டம் என்பது பெரும்பிரிவினையும் படலம் என்பது அதன் உட்பிரிவினையும் குறிக்கும். ஏழாம் காண்டமாகிய "உத்திர காண்டம்" என்னும் பகுதியை கம்பரின் சம காலத்தவராகிய "ஒட்டக்கூத்தர்" இயற்றினார் என்பர். தமிழிலக்கியத்தில் காப்பிய வளர்ச்சி கம்பரின் காலத்தில் (கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டு) உச்சநிலையினை அடைந்தது என்பர். இந்நூலின் சிறப்பு கருதியும் திருக்குறளின் பெருமை கருதியும் இவ்விரு நூல்களையும் "தமிழுக்குக் கதி" (கம்பராமாயணம் திருக்குறள்) என்பர்.

கம்பரின் இராமாயணத்தைக் கம்பநாடகம் எனவும் கம்பச்சித்திரம் எனவும் கற்றறிந்த அறிஞர் பெருமக்கள் அழைப்பதுண்டு. கம்பரின் யாப்பு வண்ணங்கள் நூல் நெடுகிலும் மின்னி மிளிர்கின்றன. "வரமிகு கம்பன் சொன்ன வண்ணமுந் தொண்ணூற்றாறே (யாப்பு வண்ணங்களின் எண்ணிக்கை 96)" என்றொரு கணக்கீடும் உண்டு.

கம்பராமாயணம் பெருங்காப்பியத்திற்குரிய இலக்கணங்களை முழுமையாகப் பெற்றது. அணி, பொருள், நடை ஆகியவற்றால் சிறந்து விளங்குவது. சொற்சுவையும் பொருட்சுவையும் கொண்டு தமிழ்ப்பண்பாட்டோடு இயைந்து விளங்குவது.

பெயர்

தாம் இயற்றிய இந்நூலிற்கு கம்பர் முதலில் இராமவதாரம் என்றே பெயரிட்டிருந்தார். ஆனால் இராமாயணம் பலரால் இயற்றப்பட்டதால் கம்பரின் பெயரோடு இணைத்து கம்பராமாயணம் என்றே அழைக்கப்படுகிறது.

காப்பியக் காலம்

கம்பராமாயணத்தில் உள்ள பாடல்களையும், கம்பரின் வாழ்வினையும் கொண்டு கம்ப இராமாயணம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது என்று அறிஞர்கள் கருதுகின்றனர். சிலர் கம்பராமாயணம் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது, பத்தாம் நூற்றாண்டினைச் சேர்ந்தது என்றும் கூறியுள்ளார்கள். வையாபுரிப் பிள்ளை என்பவர் கம்பர் தனியன்கள் என்பதினை 16ம் நூற்றாண்டில் சிலர் புகுத்தியிருக்கக் கூடும் என்று கூறியுள்ளார். 

இந்த கம்பர் தனியன்களில் பதினேழு பாடல்கள் உள்ளன. அவற்றில் எண்ணிய சகாப்தம் எண்ணூற்று ஏழில் மேல் என்ற தொடர் அமைந்துள்ளது. இதனைக் கொண்டு கிபி 885ல் இராமாயணம் இயற்றப்பட்டிருக்கக் கூடும் என்கின்றனர்.

மா. இராசமாணிக்கனார் கி.பி. 1325க்கும் முன்பே கம்பராமாயணம் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்று கன்னட நாட்டில் உள்ள கல்வெட்டினைக் கொண்டு குறிப்பிடுகிறார். எனினும் இறுதியாக கம்பர் மூன்றாம் குலோத்துங்க சோழனோடு மாறுபட்டு தற்போதைய ஆந்திராவில் இருக்கும் ஓரங்கல் எனும் பகுதியில் தங்கியிருக்கிறார். அப்போது அவ்விடத்தில் இருந்த அரசன் பிரதாபருத்திரன் என்பவராவார். அவருடைய காலம் கிபி 1162 - 1197 ஆகும். இதனால் கம்பர் 12ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்து கம்பராமாயணத்தினை இயற்றியுள்ளார்.

தொன்மங்கள்

கம்பர் இக்காப்பியத்தை அதன் மூலமான வடமொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தார். அந்த முயற்சியை ஓர் அரிய உவமையின் வாயிலாக வெளிப்படுத்துகிறார். பசியுடைய பூனை ஒன்று பாற்கடலைக் கண்டு அதை நக்கிக் குடித்துவிட ஆசைகொண்டதுபோல தன் முயற்சியை ஒப்பிடுகிறார். இது அவையடக்கமாகக் கொள்ளப்படுகிறது. கம்பர் இராமகாதையை எழுதுவதற்கு உறுதுணையாக இருந்தவர் சடையப்ப வள்ளல் ஆவார். இதற்கு நன்றிபாராட்டும் விதமாக தனது காப்பியத்தில் ஆயிரம் பாடல்களுக்கு ஒருபாடல் எனும் வீதத்தில் சடையப்ப வள்ளலைப் போற்றிப் பாடியுள்ளார்.

அரங்கேற்றம்

கம்பர் இராமாயணத்தினை எழுதியபின்பு, அதனை திருவரங்கத்தில் அரங்கேற்றம் செய்ய விரும்பினார். திருவரங்கத்தில் உள்ளோர்கள், தில்லை தீட்சதர்கள் ஒப்புக் கொண்டால் இராமாயணத்தினை திருவரங்கத்தில் அரங்கேற்றம் செய்யலாம், இல்லையென்றால் வேண்டாம் என்று கூறிவிடுகின்றனர். அதனால் கம்பர் தில்லை சென்றார். அங்கே தீட்சிதர்களாக இருக்கும் மூவாயிரம் நபர்களும் ஒன்று சேர்க்க இயலாமல் இருந்த போது, ஒரு குழந்தை இறந்தது. அந்தக் குழந்தைக்காக அனைத்து தீட்சிதர்களும் கூடி நின்றார்கள். அப்போது கம்பர் தன்னுடைய இராமாயணத்திலிருந்து நாகபாசப் படலம் என்ற பகுதியைப் பாடி குழந்தையை உயிர்ப்பித்தார். தீட்சிதர்கள் அனைவரும் மகிழ்ந்தர். தான் இயற்றிய இராமாயணத்தினை திருவரங்கத்தில் அரங்கேற்றம் செய்ய அனுமதியும் பெற்றார்.

திருவரங்கத்தில் உள்ளவர்கள் அரங்கேற்றத்திற்கு முன்பு சடகோபரைப் பாடும் படி கூறியமையால், கம்பர் சடகோபர் அந்தாதியைப் பாடினார். அதன் பின்பு இராமாயணத்தினை திருவரங்கத்தில் அரங்கேற்றம் செய்தார்.

கிட்கிந்தா காண்டம்

சீதையைத் தேடிச் செல்கின்ற இராமனும், இலக்குவனும் கிட்கிந்தைக்கு வருகிறார்கள். அங்கு அனுமனைச் சந்திக்கிறார் இராமர். அனுமன் சுக்கிரீவன் என்பவரை இராமருக்கு அறிமுகம் செய்கிறார். சுக்கிரீவனின் மனைவியை சுக்கிரீவனுடைய அண்ணன் வாலியே கவர்ந்து சென்று விடுகிறார். அதனால் இராமன் வாலியைக் கொன்று சுக்கிரீவனின் மனைவியை மீட்கிறார்.

இராமனும் தன்னைப் போல மனைவியை இழந்து தவிக்கிறான் என்பதை அறிந்த சுக்கிரீவனும், அவனுடைய குடிமக்களான வானரங்களும் இராமனுக்கு உதவ முன்வருகிறார்கள்.

அங்கதன் என்பவர் தலைமையில் அனைவரும் செல்கின்றனர். வழியில் சம்பாதி எனும் சடாயுவின் அண்ணனைச் சந்திக்கின்றனர். சம்பாதி இலங்கையில் சீதை சிறைப்பட்டு இருப்பதைத் தெரிவிக்கின்றார். இலங்கைக்குச் செல்ல ஏற்றவர் அனுமன் என்று தீர்மானித்து அனுமனிடம் தெரிவிக்கின்றனர். அனுமனுக்கு அவருடைய பெருமையை உணர்த்தி அவர் இலங்கை செல்ல விஸ்வரூபம் எடுக்கிறார்.


 

Thursday, 23 January 2020


ஐங்குறுநூறு



ஐங்குறுநூறு
ஐங்குறுநூறு எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்பு நூல்களுள் ஒன்று. இதிலுள்ள பாடல்கள் சங்க காலத்தைச் சேர்ந்தவை. மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் ஐந்து நிலம் சார்ந்த திணை ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் இந் நூலில் ஐந்நூறு அகத்திணைப் பாடல்கள் உள்ளன.

ஐங்குறுநூற்றில் அடங்கியுள்ள பாடல்களில் ஒவ்வொரு திணையைச் சேர்ந்த பாடல்களும் ஐந்து வெவ்வேறு புலவர்களால் இயற்றப்படுள்ளன.

மருதத் திணைப் பாடல்கள் (100) - ஓரம்போகியார்
நெய்தல் திணைப் பாடல்கள் (100) - அம்மூவனார்
குறிஞ்சித் திணைப் பாடல்கள் (100) - கபிலர்
பாலைத் திணைப் பாடல்கள் (100) - ஓதலாந்தையார்
முல்லைத் திணைப் பாடல்கள் (100) - பேயனார்

  1. வாழி ஆதன் வாழி அவினி
  2. வாழி ஆதன் வாழி அவினி
  3. வாழி ஆதன் வாழி அவினி
  4. வாழி ஆதன் வாழி அவினி
  5. வாழி ஆதன் வாழி அவினி
  6. வாழி ஆதன் வாழி அவினி
  7. வாழி ஆதன் வாழி அவினி
  8. வாழி ஆதன் வாழி அவினி
  9. வாழி ஆதன்வாழி அவினி
  10. வாழி ஆதன் வாழி அவினி
  11. மனைநடு வயலை வேழஞ் சுற்றும்
  12. கரைசேர் வேழம் கரும்பிற் பூக்கும்
  13. பரியுடை நன்மான் பொங்குளை யன்ன
  14. கொடிப்பூ வேழம் தீண்டி அயல
  15. மண்லாடு மலிர்நிறை விரும்பிய ஒண்தழைப்
  16. ஓங்குபூ வேழத்துத் தூம்புடைத் திரள்கால்
  17. புதன்மிசை நுடங்கும் வேழ வெண்பூ
  18. இருஞ்சா யன்ன செருந்தியொடு வேழம்
  19. எக்கர் மாஅத்துப் புதுப்பூம் பெருஞ்சினை
  20. அறுசில் கால அஞ்சிறைத் தும்பி       சிறுவெண் காக்கைப் பத்து.

  1. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
  2. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
  3. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
  4. இருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
  5. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
  6. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
  7. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
  8. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
  9. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
  10. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை

    குரக்குப் பத்து

    1. அவரை அருந்த மந்தி பகர்வர்
    2. கருவிரல் மந்திக் கல்லா வன்பறழ்
    3. அத்தச் செயலைத் துப்புறழ் ஒள்தளிர்
    4. மந்திக் கணவன் கல்லாக் கொடுவன்
    5. குரங்கின் தலிஅவன் குருமயிர்க் கடுவன்
    6. மந்திக் காதலன் முறிமேய் கடுவன்
    7. குறவர் முன்றில் மாதீண்டு துறுகல்
    8. சிலம்பின் வெதிரத்துக் கண்விடு கழைக்கோல்
    9. கல் இவர் இற்றி புல்லுவன எறிக்
    10. கருவிரல் மந்திக் கல்லா வன்பார்ப்பு