சங்க காலம்
5 ஆம் நூற்றாண்டு முதல் 3 ஆம் நூற்றாண்டு வரை
தொல்பொருள் சான்றுகளின் படி சங்க காலம் ஏறத்தாழ பொ.ஊ.மு. 5 ஆம் நூற்றாண்டு முதல் பொ.ஊ. 3 ஆம் நூற்றாண்டு வரை எட்டு நூற்றாண்டுகள் நீடித்தது. இக்காலத்தில் இயற்றப்பட்ட சங்க இலக்கியங்கள் இக்கால வரலாற்றின் முக்கிய ஆதாரமாக உள்ளன. பண்டைய தமிழகம் முடியாட்சி அரசுகாளாகிய, சேரர், சோழர் மற்றும் பாண்டியர் எனும் மூவேந்தரால் ஆளப்பட்டது. சேரர்கள் தமிழ்கத்தின் மேற்குப் பகுதியையும், பாண்டியர்கள் தெற்கு பகுதியையும், சோழர்கள் காவேரி வடிநிலப் பகுதியையும் ஆண்டனர். இம்மன்னர்கள் வேந்தர் என்று அழைக்கப்பட்டனர். வேள் அல்லது வேளிர் என்று அழைக்கப்பட்ட பழங்குடித் தலைவர்கள் குறுநில மன்னர்களாக ஆண்டுவந்தனர். உள்ளூர் அளவில் கிழார் அல்லது மன்னர் என்று அழைக்கப்படும் குலத்தலைவர்கள் இருந்தனர். சேரர்களில் செங்குட்டுவன் மன்னனும், சோழர்களில் கரிகால் சோழன் மன்னனும், பாண்டியர்களில் நெடுஞ்செழியன் மன்னனும் பெயர் பெற்ற ஆட்சியாளர்களாகத் திகழ்ந்து, மிகவும் புகழ்பெற்று விளங்கினர். இவர்கள், போர் நடவடிக்கைகளில் சிறந்து விளங்கியதாக நம்பப்படுகிறது.தமிழகதத்தில் தனியரசுகளாக விளங்கின இந்த இராச்சியங்களைத் தவிர்த்து வெளி சக்திகளால் இந்தக் கால கட்டத்தில் கைப்பற்றப்படவில்லை. வடக்கே உள்ள அரசுகளுக்கு இடையே குறிப்பிடத்தக்க தொடர்புகள் இருந்தன. இவை அசோகரின் தூண்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த இராச்சியங்கள் உரோமானியர் மற்றும் ஆன் சீனர் உட்பட பல இராச்சியங்களுடன் குறிப்பிடத்தக்க வர்த்தக தொடர்புகளைக் கொண்டிருந்தன. வணிகத்தின் பெரும்பகுதி முசிறி மற்றும் கொற்கை உள்ளிட்ட துறைமுகங்கள் வழியாக நடத்தப்பட்டது. அழகன்குளம் தொல்லியல் தளத்தில் அண்மைய அகழ்வாய்வுகள் சங்க காலத்தின் முக்கியமான வர்த்தக மையங்கள் அல்லது துறைமுக நகரங்களில் ஒன்றாக விளங்கியது தெரியவருகிறது. முத்து, பட்டு, வாசனைப் பொருட்கள் மற்றும் மசாலாப் பொருட்கள் ஆகியவை பரவலாக வர்த்தகம் செய்யப்பட்டன.
இக்காலத்தில் பல நூல்கள் இயற்றப்பட்டன, அதில் எஞ்சியிருக்கும் பழமையான நூல், தமிழ் இலக்கண குறிப்பான தொல்காப்பியம் ஆகும். பெரும்பாலான சங்க இலக்கியங்கள் காதல் மற்றும் போரை கருப்பொருளாகக் கொண்டுள்ளன. இச்செய்யுள்களின் வழியாக அன்றைய தமிழ்ச் சமூகத்தை அறிய முடிகிறது. நிலம் வளமானதாக இருந்தது, மேலும் மக்கள் எந்தப் பகுதியில் வாழ்கிறார்கள் என்பதைப் பொறுத்து வெவ்வேறு தொழில்களைத் தொடர்ந்தனர். அவர்களின் கடவுள்களில் சேயோன் மற்றும் கொற்றவை போன்றவர்கள் அடங்குவர். அவர்கள் வெவ்வேறு இடங்களில் வணங்கப்பட்டனர். ஆட்சியாளர்கள் பௌத்தம் மற்றும் சமண சமயத்தையும் ஆதரித்தனர், மேலும் பொது ஊழிக்குப் பிறகான காலத்தில் தொடங்கி வேத வழக்கங்கள் பற்றிய குறிப்புகள் வளரத் தொடங்கின.
இடைக்காலம் (பொ.ஊ. 3 முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை)
மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், களப்பிரர்கள் தமிழகத்தின் பெரும்பகுதியை ஆண்டனர். இவர்கள் வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒரு காலத்தில் பண்டைய தமிழ் இராச்சியங்களில் நிலப்பிரபுக்களாக இருந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. களப்பிரர் ஆட்சி தமிழ் வரலாற்றின் "இருண்ட காலம்" என்று குறிப்பிடப்படுகிறது. பொதுவாக இந்த காலத்தை பற்றிய தகவல்கள் கூறும் இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுக்கள் இல்லாததாலும், இக்காலத்தை பற்றிய குறிப்புகள் பல நூற்றாண்டிற்கு பிறகு வெளிவந்த ஆதாரங்களைப் பின்பற்றியிருப்பதனால், இக்காலத்தை பற்றிய சரியான முடிவுகள் எடுப்பது கடினமாக உள்ளது. இரட்டை தமிழ் காவியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை இக்காலத்தில் எழுதப்பட்டது. திருவள்ளுவரின் உன்னதமான தமிழ்த் தொகுப்பான திருக்குறள் இக்காலத்திற்கு தேதியிடப்பட்டுள்ளது.
பொ.ஊ. ஏழாம் நூற்றாண்டில், களப்பிரர்கள் பாண்டியர்கள் மற்றும் சோழர்களால் தோற்கடிக்கபப்ட்டனர். முன்னர் பௌத்தம் மற்றும் சமணத்தை ஆதரித்த அவர்கள் பக்தி இயக்கத்தின் போது சைவம் மற்றும் வைணவத்திற்கு மாறினர். இக்காலம் பல்லவர்களின் எழுச்சியைக் கண்டது. ஆறாம் நூற்றாண்டில் முதலாம் மகேந்திரவர்மன், காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு சில பகுதிகளை ஆட்சி செய்தார். பல்லவர்கள் கோயில்களின் நுழைவாயிலில் கட்டப்பட்ட அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான கோபுரங்கள் மற்றும் கற்கோயில்களின் கட்டிடக்கலைக்காக அறியப்படுகின்றனர். மகாபலிபுரத்தில் பல கற்கோயில்கள் மற்றும் சிற்பங்களையும், காஞ்சிபுரத்தில் கோயில்களையும் எழுப்பினார்கள். பல்லவர்கள் தங்கள் ஆட்சிகாலம் முழுவதிலும் சோழர்கள் மற்றும் பாண்டியர்களுடன் தொடர்ந்து மோதலில் இருந்து வந்தனர். கிபி 6 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கடுங்கோனால் பாண்டியர்கள் புத்துயிர் பெற்றனர். உறையூரில் சோழர்கள் மறைந்திருந்த நிலையில், தமிழகம் பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையில் பிரிக்கப்பட்டது. பல்லவர்கள் இறுதியாக 9 ஆம் நூற்றாண்டில் முதலாம் ஆதித்த சோழனால் தோற்கடிக்கப்பட்டனர்.
சோழர் ஆட்சி மீண்டும் ஒன்பதாம் நூற்றாண்டில் விசயாலய சோழன் கீழ் நிறுவப்பட்டது. தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு பெரும் ஆதிக்கம் செலுத்தும் அரசை நிறுவினார். 11 ஆம் நூற்றாண்டில், முதலாம் இராசராசன் தென்னிந்தியாவையும், இன்றைய இலங்கை, மாலத்தீவுகளின் சில பகுதிகளையும் கைப்பற்றி, இந்தியப் பெருங்கடல் முழுவதும் சோழர்களின் செல்வாக்கை அதிகரித்தார்.[50][51] இந்த காலத்தில் நாட்டை தனி நிர்வாக அலகுகளாக மறுசீரமைப்பது உட்பட பல நிர்வாக சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தனர். இராசராசனின் மகன் முதலாம் இராசேந்திர சோழனின் கீழ், சோழப் பேரரசு அதன் உச்சத்தை அடைந்தது. வடக்கே வங்காளம் வரையிலும், இந்தியப் பெருங்கடலிலும் பரவி விரிந்தது. சோழர்கள் திராவிடக் கட்டிடக்கலை பாணியில் பல கோயில்களைக் கட்டினார்கள், அதில் மிகவும் குறிப்பிடத்தக்கது இராசராசனால் கட்டப்பட்ட தஞ்சைப் பெருவுடையார் கோயில் மற்றும் ராசேந்திரனால் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம்.
13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் கீழ் பாண்டியர்கள் மீண்டும் ஆட்சி செய்தனர். இவர்கள் தங்கள் தலைநகரான மதுரையிலிருந்து பிற கடல்சார் பேரரசுகளுடன் வர்த்தக தொடர்புகளை விரிவுபடுத்தினர். மார்கோ போலோ பாண்டியர்களை உலகின் பணக்கார பேரரசு என்று குறிப்பிட்டார். மதுரை மீனாட்சியம்மன் கோயில் உட்பட பல கோயில்களையும் பாண்டியர்கள் கட்டியுள்ளனர்.
No comments:
Post a Comment