Friday, 16 February 2018

பிப்ரவரி மாத அறிக்கை



கலித்தொகை
அவர் பொருளீட்டச் சென்றார். பொருள் ஈட்டிக் கொண்டுவந்து அறம் செய்யு இன்பம் துய்க்கலாம் என்று சொல்லிவிட்டுச் சென்றார். அவர் வருவதைத் தெரிவிக்கும் அறிகுறியாக என் இடக்கண் துடிக்கிறது – என்று தலைவி தன் தோழியிடம் கூறி மகிழ்கிறாள்.  
1
அறம் செய்யும் பேறு பெறுவது அரிது. அந்தப் பேற்றினைப் பெற்று அருள் பெறாமல் வாடுபவர்களுக்கு உதவுதல் வேண்டும். பகைதான் எல்லாவற்றிலும் பெரியது. பகைவரை வென்று பிறரைப் பேணாதவர்களை அழித்தல் வேண்டும். விரும்புவதெல்லாம் காதலைப் பெற்றுப் புணர்தல். இப்படி இல்லாதவர்க்கு அளிக்கும் அறம், எதிரியை அழிக்கும் பொருள், இனியவரைத் துய்க்கும் இன்பம் ஆகிய மூன்றையும் செல்வமாகிய பொருள் தரும் – இப்படிச் சொல்லிவிட்டு நம் காதலர் சென்றார். அவர் பொர்ருளோடு திரும்பி வருகிறார் போல இருக்கிறது.
வலிப்பல் = உறுதியாகச் சொல்கிறேன்
2
காலடி தாங்கமுடியாத அளவுக்குப் பொடி சுடும் காடு என்றார். அந்தக் காட்டில் தன் குட்டியும், பெண்யானையும் கலக்கிய கொஞ்சமாக இருக்கும் நீரை அவை இரண்டும் உண்ணுமாறு காட்டி ஊட்டிவிட்டு கடைசியில் மீதமிருப்பதை ஆண்யானை உண்ணும் காடு அது எனவும் சொன்னாரே.
3
அந்தக் காட்டில் இன்பம் இல்லை. இலை தீய்ந்து போன காய்ந்த மரங்கள் நிற்கும். துன்பம் தரும் தன்மை கொண்ட காடு – என்றார். அந்தத் துன்பத்தால் வாடும் தன் பெண்-புறாவை ஆண்-புறா தன் மென்மையான சிறகுகளால் விசிறிக்கொடுக்கும் என்றும் சொன்னாரே.


4
மலைமேல் வளரும் மூங்கிலே காயும்படி வெயில் கொளுத்தும். எனவே நெருங்கமுடியாத காடு அது – என்று அவர் சொன்னார். அந்தக் காட்டில் நிழல் இல்லாமல் வருந்தும் பெண்மானுக்கு அதன் ஆண்மான் தன் உடம்பு நிழலைத் தந்து காப்பாற்றும் என்றும் சொன்னாரே.
கலை = ஆண்மான்
பிணை = பெண்மான்
கல் = மலை
5, 6
என்று, இப்படிப்பட்ட நலம் மிக்க காட்டு வழியில் அவர் சென்றார். அப்படிப்பட்டவர் நாம் புனைந்திருக்கும் நல்லணிகளை இழந்து நாம் வாடும்படி விடமாட்டார். வீட்டில் பல்லி ஒலிக்கிறது. என் இடக்கண் துடிக்கிறத்து. இவை இரண்டும் நல்ல நிமித்தங்கள் (சகுணங்கள்). வந்துகொண்டிருக்கிறார் போலும்.

பாடியவர் – பாலைபாடிய பெருங்கடுங்கோ
பாடல் – சொல் பிரிப்புப் பதிவு
எண் - 11
திணை - பாலை
கி.மு. காலத்துப் பாடல்

1
'அரிதாய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும்,
பெரிதாய பகை வென்று பேணாரைத் தெறுதலும்,
புரிவு அமர் காதலின் புணர்ச்சியும் தரும்' என,
பிரிவு எண்ணிப் பொருள்வயிற் சென்ற நம் காதலர்
வருவர்கொல்; வயங்கிழாஅய்! வலிப்பல், யான்; கேஎள், இனி:
இது தரவு
2
'அடி தாங்கும் அளவு இன்றி, அழல் அன்ன வெம்மையால்,          5
கடியவே' கனங் குழாஅய்! 'காடு' என்றார்; 'அக் காட்டுள்,
துடி அடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்
பிடி ஊட்டி, பின் உண்ணும், களிறு' எனவும் உரைத்தனரே
3
'இன்பத்தின் இகந்து ஒரீஇ, இலை தீந்த உலவையால்,
துன்புறூஉம் தகையவே காடு' என்றார்; 'அக் காட்டுள்,        10
அன்பு கொள் மடப் பெடை அசைஇய வருத்தத்தை
மென் சிறகரால் ஆற்றும், புறவு' எனவும் உரைத்தனரே
4
'கல் மிசை வேய் வாடக் கனை கதிர் தெறுதலான்,
துன்னரூஉம் தகையவே காடு' என்றார்; 'அக் காட்டுள்,
இன் நிழல் இன்மையான் வருந்திய மடப் பிணைக்குத்  15
தன் நிழலைக் கொடுத்து அளிக்கும், கலை' எனவும் உரைத்தனரே
இவை மூன்றும் தாழிசை
5
என ஆங்கு
இது தனிச்சொல்
6
இனை நலம் உடைய கானம் சென்றோர்
புனை நலம் வாட்டுநர் அல்லர்; மனைவயின்
பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன;   20
நல் எழில் உண்கணும் ஆடுமால், இடனே.
இது சுரிதகம்
தலைவி, மூன்றாம்பகுதி தலைவன் கூறிப் பொருள்வயிற் பிரிகின்ற காலத்துக் காடு கடியவாயினும் இவ்வகைப் பட்டனவும் உளவென்று கூறினார், அவை காண்டலின் வருவரெனத் தோழிக்குக் கூறி அதற்கு நிமித்தமும் கூறி ஆற்றுவித்தது.
மூன்றன்பகுதி கூறுதலாவது, அறத்தினாற் பொருளாக்கி அப்பொருளாற் காமம் நுகர்வேனென்றலாம். உடைமையது உயர்ச்சி கூறிப் பிரிந்தானெனக் கிளவி கூறிற் பொருள்வயிற் பிரிதலின்றாம்; அது பொருள்வயிற் பிரிவை விலக்குமென்றலின்.

இமய மலையை வில்லாக்கி வளைத்தவன் சிவபெருமான், அவன் கங்கை ஆறு பாயும் ஈரச் சடையை உடையவன். அவன் தன் மனைவி உமையாளோடு சேர்ந்து இமயமலை மேல் அமர்ந்திருந்தான். 10 தலை கொண்டவனான அரக்கர் தலைவன் இராவணன் தொடி அணிந்திருந்த தன் கையை இமய மலைக்கு அடியில் புகுத்தி அந்த மலையை எடுக்க முயன்றான். எடுக்க முடியாமல் துன்புற்றான். அதுபோல ஒரு நிகழ்வு. வேங்ககை மரம் பூத்திருந்தது. அது புலி போல் தோன்றியது. அதன் மீது சினம் கொண்டு மதம் கொண்ட யானை வேங்கை அடிமரத்தில் குத்தியது. குத்திய கொம்பை அதனால் பிடுங்க முடியவில்லை. மலையின் குகைகளில் எதிரொலி கேட்கும்படி முழங்கியது. இப்படி யானை முழங்கும் நாட்டை உடையவன் நீ. நாட! கேள்.
தரவு
பாம்பு மேயும் வழியில் அஞ்சாமல் நீ வருகிறாய். அதனை எண்ணி என் தலைவி நீர் இல்லாமல் வறண்டுபோன நிலம் போல வருந்துகிறாள். பொழுது புலரும் காலத்தில் மழை பொழியப்பெற்ற நிலம் போலக் காணப்படும் இவள் மேனி அழகு குறையாமல் பார்த்துக்கொள்ளும் திறமை உனக்கு இருக்குமானால் சொல்.
தாழிசை 1
இருள் மிக்க இரவு வேளையில் நீ அஞ்சாமல் வருகிறாய். அப்படி நீ வருவதால் இளமையில் பொருள் இல்லாதவன் வருந்துவது போல இவள் வருந்துகிறாள். கொடையருள் மிக்கவன் செல்வம் பெற்றிருப்பது போலக் காலையில் மகிழ்கிறாள். அந்த மகிழ்வைக் காக்கும் திறம் உனக்கு இருக்குமேல் சொல்.
தாழிசை 2
பிறரைத் துன்புறுத்தும் மற நெறியிலிருந்து சிலர் திருந்துவதே இல்லை. செல்லும் வழியில் இருந்துகொண்டு அவர்கள் துன்புறுத்துவார்களே என்று எண்ணாமல் மலை வழியில் நீ வருகிறாய். அப்படி நீ வருவதால், அறவழியை நாடாமல் வயதில் முதிர்ந்தவன் துன்புறுவது போல இவள் துன்புறுகிறாள். நல்ல திறப்பாடுகளை அறிந்தவன் செல்வம் சிறப்படைவது போல் இவளைச் சிறப்படையச் செய்து, சிலர் இவளைப் பழி புறம்பேசுவதை தீர்க்கும் கருத்து இருக்குமாயின் சொல்.
தாழிசை 3
என்றெல்லாம்
தனிச்சொல்
உன் துன்பத்தை நான் கூறக் கேட்ட உன் காதலன், நல்ல மலைநாட்டின் தலைவன், திருமணம் செய்துகொண்டு உன் தோளைத் தழுவ வருகிறார். தோழி! மூங்கில் போன்ற உன் தோள் மகிழ்வில் பருமனாகட்டும்.
சுரிதகம்
பாடல் 38 – சொல் பிரிப்புப் பதிவு

இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக,
இரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப் பொலி தடக் கையின் கீழ் புகுத்து, அம் மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல    5             
உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக்
கறுவு கொண்டு, அதன் முதல் குத்திய மத யானை
நீடு இரு விடர் அகம் சிலம்பக் கூய், தன்
கோடு புய்க்கல்லாது, உழக்கும் நாட! கேள்:
தரவு
ஆர் இடை என்னாய் நீ அரவு அஞ்சாய் வந்தக்கால்,               10          
நீர் அற்ற புலமே போல் புல்லென்றாள், வைகறை,
கார் பெற்ற புலமே போல், கவின் பெறும்; அக் கவின்
தீராமல் காப்பது ஓர் திறன் உண்டேல், உரைத்தைக்காண்
தாழிசை 1
இருள் இடை என்னாய் நீ இரவு அஞ்சாய் வந்தக்கால்,
பொருளில்லான் இளமை போல் புல்லென்றாள், வைகறை,        15          
அருள் வல்லான் ஆக்கம் போல் அணி பெறும்; அவ் அணி
தெருளாமல் காப்பது ஓர் திறன் உண்டேல், உரைத்தைக்காண்
தாழிசை 2
மறம் திருந்தார் என்னாய் நீ மலையிடை வந்தக்கால்,
அறம் சாரான் மூப்பே போல் அழிதக்காள், வைகறை,
திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திருத்தகும்; அத் திருப் 20          
புறங்கூற்றுத் தீர்ப்பது ஓர் பொருள் உண்டேல், உரைத்தைக்காண்
தாழிசை 3
என ஆங்கு,
தனிச்சொல்
நின் உறு விழுமம் கூறக் கேட்டு,
வருமே, தோழி! நல் மலை நாடன்
வேங்கை விரிவு இடம் நோக்கி,               25          
வீங்கு இறைப் பணைத் தோள் வரைந்தனன் கொளற்கே
சுரிதகம்

இரவுக்குறி வந்து நீங்கும் தலைவனை எதிர்ப்பட்டு, தோழி தலைவியது நிலைமை கூறி அவனை வரைவு கடாவ, அவன் வரைய வருகின்றமை தோழி தலைவிக்கு வரைவு மலிந்து கூறியது

பாடியவர் – கபிலர்
திணை - குறிஞ்சி
கி.மு. காலத்துப் பாடல்
சான்றோர் கூற்று

ஈண்டு, நீர்மிசைத் தோன்றி இருள் சீக்கும் சுடரே போல்,
வேண்டாதார் நெஞ்சு உட்க, வெரு வந்த கொடுமையும்,
நீண்டு தோன்று உயர் குடை நிழல் எனச் சேர்ந்தார்க்குக்
காண் தகு மதி என்னக் கதிர் விடு தண்மையும்,
மாண்ட நின் ஒழுக்கத்தான், மறு இன்றி, வியன் ஞாலத்து   5
யாண்டோரும் தொழுது ஏத்தும் இரங்கு இசை முரசினாய்!

கடலில் தோன்றி இருள் போக்கும் கதிரவன் போல, பகைவர் நடுங்கும்படி அவர்கள் விரும்பாத கொடுமைகளைச் செய்பவனே! உயர்ந்து தோன்றும் உன் குடை நிழல் மதியம் போலத் தண்ணொளி வீச ஆட்சி புரிபவனே! மாட்சிமை தங்கிய உன் ஒழுக்க நெறியால் குற்றம் ஏதும் நிகழாவண்ணம் உலகிலுள்ள அனைவரும் உன்னைத் தொழுது பாராட்டும்படி முரசு முழக்கம் செய்பவனே!

'
ஐயம் தீர்ந்து யார்கண்ணும் அருந் தவ முதல்வன் போல்
பொய் கூறாய்' என நின்னைப் புகழ்வது கெடாதோதான்
நல்கி நீ தெளித்த சொல் நசை எனத் தேறியாள்
பல் இதழ் மலர் உண்கண் பனி மல்கக் காணுங்கால்?   10

உன் சொல்லில் தெளிவு பெற்று உன்னை நம்பி வாழும் உன் பெண்ணின் கண்ணில் பனிக்கும் நீர் நிறைந்திக்க மற்றவர்கள் காணும்போது, அரிய தவம் இயற்றும் முனிவன் போல எல்லாரும் தெளிவு பெறும்படி நீ பொய் சொல்லமாட்டாய் என்று கூறுவது கெட்டுப்போகாதோ?

'
சுரந்த வான் பொழிந்தற்றா, சூழ நின்று யாவர்க்கும்
இரந்தது நசை வாட்டாய்' என்பது கெடாதோதான்
கலங்கு அஞர் உற்று, நின் கமழ் மார்பு நசைஇயாள்
இலங்கு கோல் அவிர் தொடி இறை ஊரக் காணுங்கால்?

மணம் கமழும் உன் மார்பை விரும்பியவள் கலங்கித் துன்புற்றுக் கை வளையல் கழன்று தோளிலிருந்து நழுவுவதை மற்றவர்கள் காணும்போது, "நீ சுரக்கும் வானம் போலக் கொடை நல்கிக்கொண்டு சூழ்ந்திருப்பவர் எவராயினும் அவர்கள் கேட்டதையெல்லாம் வழங்கி அவர்கள் விரும்புவதை வழங்குபவன்" என்னும் உன் புகழ் கெட்டுப்போகாதோ?

'
உறை வரை நிறுத்த கோல், உயிர் திறம் பெயர்ப்பான் போல்,   15
முறை செய்தி' என நின்னை மொழிவது கெடாதோதான்
அழி படர் வருத்த, நின் அளி வேண்டிக் கலங்கியாள்
பழி தபு வாள் முகம் பசப்பு ஊரக் காணுங்கால்?

உன் உறவுக் கொடையை விரும்பிப் பெறமுடியாமல் கலங்கித் தன் பழி இல்லாத ஒளி முகத்தில் பசப்பு ஊரத் துன்புறுபவளை மற்றவர்கள் காணுங்கால், வாழ்நாள் முடியும் வரையில்ஒருவனது உயிரைக் காப்பாற்றிக்கொண்டிரும் எமன் போல நீ முறை செய்பவன் என்று உன்னைப் புகழ்வது கெட்டுப்போகாதோ?

ஆங்கு

தொல் நலம் இழந்தோள், நீ துணை எனப் புணர்ந்தவள்;  20
இன் உறல் வியன் மார்ப! 'இனையையால்; கொடிது' என,
நின்னை யான் கழறுதல் வேண்டுமோ,
என்னோர்கள் இடும்பையும் களைந்தீவாய் நினக்கே?

இன்பம் தரும் பார்பினை உடையவனே! நீதான் துணை என்று உன்னைப் புணர்ந்தவள், பண்டைய அழகினை இழந்தவளாகத் துன்புறுவது கொடியது. எத்தகையவராக இருந்தாலும் அவர்களின் துன்பங்கள் எல்லாவற்றையும் போக்கும் பாங்குடைய உனக்கு, இப்படியெல்லாம் நான் எடுத்துச் சொல்ல வேண்டுமா?  
அரசன் தலைவனாயவன் தலைவியை நீங்கி இருந்ததற்குத் தலைவி புலவி நீட்டித்துஆற்றாளாய வழி, அவட்கு நிகழ்ந்த காமத்து மிகு திறத்தை அவ் அரசனை நோக்கிச் சான்றோர் கூறியதுஇது பெருந்திணை.

தரவு -  தாழிசை 3 - தனிச்சொல் - சுரிதகம் என அமைந்த நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா

கலித்தொகைமருதக் கலி
பாடியவர்மருதன் இளநாகனார்
திணை - மருதம்
கி.மு. காலத்துப் பாடல்
தலைவி கூற்று

தீம் பால் கறந்த கலம் மாற்றி, கன்று எல்லாம்
தாம்பின் பிணித்து, மனை நிறீஇ, யாய் தந்த
பூங் கரை நீலம் புடை தாழ மெய் அசைஇ, பாங்கரும்
முல்லையும் தாய பாட்டங்கால் தோழி! நம்
புல்லினத்து ஆயர் மகளிரோடு எல்லாம்   5
ஒருங்கு விளையாட, அவ் வழி வந்த
குருந்தம்பூங் கண்ணிப் பொதுவன், மற்று என்னை,

தோழி! கறந்த பாலை வேறு பாத்திரத்துக்கு மாற்றிவிட்டு, கன்றுக் குட்டியைத் தாம்புக் கயிற்றில் பிணித்துக் கட்டிவ்வைத்துவிட்டு, தாய் தந்த பூப் போட்ட கரை கொண்ட நீல நிறப் புடவையை உடம்பில் தொங்கும்படி உடுத்திக்கொண்டு, பாங்கர், முல்லை ஆகிய பூக்கொடிகள் படர்ந்திருக்கும் பாட்டங்கால் தோட்டத்தில் நாம் ஆடு மேய்க்கும் ஆயர் சிறுமியரோடு சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தோம். அப்போது குருந்தம்பூ மாலை அணிந்துகொண்டிருந்த பொதுவன் அங்கு வந்தான்.

'
முற்று இழை ஏஎர் மட நல்லாய்! நீ ஆடும்
சிற்றில் புனைகோ, சிறிது?' என்றான்; எல்லா! நீ,
"
பெற்றேம் யாம்" என்று, பிறர் செய்த இல் இருப்பாய்;   10
கற்றது இலை மன்ற காண்' என்றேன். 'முற்றிழாய்!

வேலைப்பாடு முற்றிய அணிகலன்களை அணிந்துகொண்டிக்கும் மடப்பத்தன்மை கொண்ட நல்லவளே! நீ விளையாடுவதற்கு சிறுவீடு கட்டித் தரட்டுமா என்றான். தோழி! நீ "சிற்றில் பெற்றேன்" என்று மகிழ்வுடன் அவன் கட்டித் தந்த இல்லத்துக்குச் சென்று விளையாடுவாய். "பிறர் கட்டித் தந்த இல்லத்தில் விளையாட நான் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை" என்று சொல்லி மறுத்துவிட்டேன்.

தாது சூழ் கூந்தல் தகை பெறத் தைஇய
கோதை புனைகோ, நினக்கு?' என்றான்; 'எல்லா! நீ
ஏதிலார் தந்த பூக் கொள்வாய்; நனி மிகப்
பேதையை மன்ற பெரிது' என்றேன். 'மாதராய்!   15

"
முற்றிழாய்! பூந்தாது உதிர்ந்திருக்கும் உன் கூந்தல் அழகு பெறும்படி பூ முடித்துவிடட்டுமா" என்றான். தோழி! நீ வேறொருவன் தந்த பூவை வாங்கி முடித்துக்கொள்வாய். நீ ஒன்றுமறியாத பேதை ஆயிற்றே?

ஐய பிதிர்ந்த சுணங்கு அணி மென் முலைமேல்
தொய்யில் எழுதுகோ மற்று?' என்றான்; 'யாம் பிறர்
செய் புறம் நோக்கி இருத்துமோ? நீ பெரிது
மையலைமாதோ; விடுக!' என்றேன். தையலாய்!

"
பெண்ணே! மென்மையாகப் பிதுங்கியிருக்கும் உன் முலை மேல் தொய்யில் எழுதிவிடட்டுமா" என்றான். நான் பிறர் அழகு செய்வதற்காக ஏங்கிக் கிடக்கிறோமா? அனக்கு ஆசை அதிகம்" என்று கூறிவிட்டேன்.

சொல்லிய ஆறு எல்லாம் மாறு மாறு யான் பெயர்ப்ப,  20
அல்லாந்தான் போலப் பெயர்ந்தான்; அவனை நீ
ஆயர் மகளிர் இயல்பு உரைத்து, எந்தையும்
யாயும் அறிய உரைத்தீயின், யான் உற்ற
நோயும் களைகுவைமன்

பெண்ணே! அவன் சொல்லியதற்கெல்லாம் மாறாகப் பேசி நான் மறுத்துவிட்டேன். அவன் ஏமாந்தவன் போலத் திரும்பிச் சென்றுவிட்டான். அவனிடம் நீ ஆயர் மகளிர் நடந்துகொள்ளும் மரபினை எடுத்துரைக்க வேண்டும். என் தந்தையும் தாயும் அறியும்படி எடுத்துரைக்க வேண்டும். அப்படிச் செய்தால் என் காதல் நோய் தீரும்
தலைவி ஆயத்திடைத் தலைவனைக் கண்டவாறும் அவனைக் கூறியனவும் கூறி, தோழியைத் தலைவனை வரைவு கடாவி, யாய்க்கு அறத்தொடு நிற்க வேண்டும் என்றது

கலித்தொகைமுல்லைக் கலி
பாடியவர்நல்லுருத்திரன்
திணை - மருதம்
கி.மு. காலத்துப் பாடல்

தோழி கூற்று

நிரை திமில் களிறாக, திரை ஒலி பறையாக,
கரை சேர் புள்ளினத்து அம் சிறை படையாக,
அரைசு கால் கிளர்ந்தன்ன உரவு நீர்ச் சேர்ப்ப! கேள்:

கடலில் மீன் பிடிக்கச் செல்லும் திமில் படகுகளை யானைப் படையாகவும், கடலலை ஓசையை முரசுப் பறையாகவும், கடலிலிருந்து கரைக்குச் செல்லும் பறவைகள்  ஆள்படையாகவும் கொண்டு அரசன்  போருக்குச் செல்வது போலத் தோன்றும்  சேர்ப்பு நிலத் தலைவனே! கேள்.

கற்பித்தான் நெஞ்சு அழுங்கப் பகர்ந்து உண்ணான், விச்சைக்கண்
தப்பித்தான் பொருளேபோல், தமியவே தேயுமால்,   5
ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான்; மற்று அவன்
எச்சத்துள் ஆயினும், அஃது எறியாது விடாதே காண்

கல்வி கற்பித்தவன் நெஞ்சம் வருந்துமாறு உணவுப் பொருள்களை ஆசிரியனுக்கு வழங்காதவன் தானே தேய்ந்துபோவான். கற்ற வித்தையைச் சொல்லித்தரும் ஒருவன் தப்புத் தப்பாகக் கற்பித்துவிட்டு மாணவனிடம் பெற்ற செல்வம் தானே தேய்ந்துபோகும். வறுமைக் காலத்தில் உதவியவனுக்குத் திரும்ப  உதவாதவன் தானே அழிந்துபோவான். அவனை அது தாக்காவிட்டாலும் அவன் எச்சமாகிய அவன் பிள்ளைகளையாவது தாக்கியே தீரும்.

கேளிர்கள் நெஞ்சு அழுங்கக் கெழுவுற்ற செல்வங்கள்
தாள் இலான் குடியே போல், தமியவே தேயுமால்,
சூள் வாய்த்த மனத்தவன் வினை பொய்ப்பின்; மற்று அவன்  10
வாள் வாய் நன்று ஆயினும், அஃது எறியாது விடாதே காண்

உறவினர்களின் நெஞ்சம் பதைபதைக்கச் சேர்த்த செல்வம் தானே தேயும். முயற்சி இல்லாதவன் குடி போலத் தானே தேயும். சூள் உரைத்தவன் செயல் பொய்யானால் அவன் வாள் நல்லதாக இருந்தாலும் அது அவனையே திருப்பித் தாக்காது விடாது.

ஆங்கு

அனைத்து, இனி பெரும! அதன் நிலை; நினைத்துக் காண்:
சினைஇய வேந்தன் எயிற்புறத்து இறுத்த
வினை வரு பருவரல் போல,  15
துணை வரு நெஞ்சமொடு வருந்தினள் பெரிதே

எல்லாமே இப்படித்தான் நடக்கும். அதனால், பெருமானே! சினம் கொண்ட பகைவேந்தன் கோட்டையைத் தாக்க வளைத்துக்கொண்டிருக்கும்போது உள்ளே இருக்கும் குடிமக்களின்  வேதனை போல என் தலைவி நீ இல்லாமல் வருந்துகிறாள். இந்த வருத்தத்தின் விளைவு உன்னைத் தாக்காமல் விடாது. - தோழி தலைவனைக் கண்டு இவ்வாறு கூறுகிறாள்.
வரைவு நீட்டித்துழித் தலைவியது ஆற்றாமை கூறி, தலைவனை வரைவு கடாயது.

கலித்தொகைநெய்தல் கலி
பாடியவர்நல்லந்துவனார்
திணை - மருதம்
கி.மு. காலத்துப் பாடல்