Thursday, 17 July 2025

 

                                                               ஓவியங்கள் 

எல்லோரா, அஜந்தா, சித்தன்னவாசல் ஆகியவை இந்தியப் பாரம்பரியத்தின் முக்கிய இடங்களாகும். இவை குகை ஓவியங்கள் மற்றும் சிற்பங்களுக்குப் புகழ் பெற்றவை. அஜந்தா மற்றும் எல்லோரா குகைகள் மகாராஷ்டிராவிலும், சித்தன்னவாசல் புதுக்கோட்டை மாவட்டத்திலும் உள்ளன. இந்த மூன்று இடங்களிலும் உள்ள ஓவியங்கள் வெவ்வேறு காலக்கட்டங்களில் வரையப்பட்டிருந்தாலும், இவை அனைத்தும் இந்திய கலாச்சாரத்தின் முக்கிய அம்சங்களாக கருதப்படுகிறது.

அஜந்தா குகைகள்: இவை 29 குகைகளின் தொகுப்பாகும்.

  • இவை புத்த கட்டிடக்கலை, குகை ஓவியங்கள் மற்றும் சிற்பங்களுக்குப் பெயர் பெற்றது.
  • இந்த குகைகளில் புத்த மதத்தின் ஜாதக கதைகள் மற்றும் பிற மதக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
  • அஜந்தா குகைகளில் உள்ள ஓவியங்கள் உலகப்புகழ் பெற்றவை.
எல்லோரா குகைகள்
இவை 34 குகைகளைக் கொண்டுள்ளது.
  • இவை புத்த, இந்து மற்றும் ஜெயின் மதங்களின் கோயில்கள் மற்றும் மடங்களைக் கொண்டுள்ளது.
  • எல்லோரா குகைகளில் உள்ள கைலாசநாதர் கோயில் (Kailasa temple) உலகப்புகழ் பெற்றது.
சித்தன்னவாசல் குகைகள்
இவை தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது.
  • இங்குள்ள குகை ஓவியங்கள் பாண்டியர் காலத்தைச் சேர்ந்தவை.
  • இந்த ஓவியங்களில் அரசன், அரசியர், தாமரைக்குளம், மீன்கள், வாத்துகள் போன்ற காட்சிகள் வரையப்பட்டுள்ளன.
சித்தன்ன வாசல்!
இந்த மூன்று இடங்களிலும் உள்ள ஓவியங்கள், இந்தியக் கலை மற்றும் கலாச்சாரத்தின் முக்கியத்துவம் வாய்ந்தவை மற்றும் உலகெங்கிலும் உள்ளவர்களுக்கு ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ளது.
 அஜந்தா ஓவியம்
அஜந்தா, பாக் போன்ற இடங்களில் காணும் ஓவியங்களையும் காஞ்சிபுரம், சித்தன்ன வாசல், தஞ்சாவூர் போன்ற இடங்களில் காணும் தமிழ் நாட்டு ஓவியங்களையும் ஆய்வு செய்த தொல்லியல் வேதியலறிஞர் எஸ்.பரமசிவன் என்பவர், இவற்றில் முன்னதை முதலாம் வகைத் தொழில் நுட்ப ஓவியம் என்றும், பின்னதை இரண்டாம் வகைத் தொழில் நுட்ப ஓவியம் என்றும் பெயரிட்டு, அவற்றின் தொழில் நுட்பங்களைப் பின்வருமாறு விரித்துக் கூறுகின்றார்:
இவ்விரண்டு ஓவியங்களிலும் வேறுபட்ட நுட்பங்கள் பின்பற்றப் பட்டு ஓவியங்கள் வரையப் பட்டுள்ளன. அஜந்தா, எல்லோரா, பாக் போன்ற இடங்களில் உள்ள ஓவியங்கள் `டெம்பரா' என்றழைக்கப் படும் பற்றோவிய முறையினைப் பின்பற்றி வரையப் பட்டவை. மாட்டுச் சாணம், உமி, தாவர நார் ஆகியவை பற்றுப் பொருளாகக் கலந்த களி மண்ணைப் பாறைச் சுவர் மீது பூசி அதன் மீது மெல்லிய சுண்ணாம்புப் பூச்சினை அடித்து முதல் வகை ஓவியங்களின் அடித்தளம் உருவாக்கப் பட்டிருக்கிறது. தாதுப் பொருட்களால் தயாரிக்கப் பட்ட வண்ணத்தைக் கொண்டு இவற்றில் ஓவியம் தீட்டியுள்ளனர்.
இரண்டாம் வகையான தமிழ்நாட்டுச் சித்தன்ன வாசல், காஞ்சிபுரம், தஞ்சாவூர் ஓவியங்கள் அடித்தளம் நன்கு உலர்ந்த பின் வரையப் பட்ட சுவரோவிய முறையைப் பின்பற்றி வரையப் பட்டவை ஆகும். இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாகச் சித்தன்ன வாசல் குடை வரைக் கோயில் சமண ஓவியங்கள் திகழ்கின்றன. அஜந்தாவில் காணப்படும் வலிவும் ஒட்டுத் தன்மையும் குறைந்த அடித்தளத்திற்கு. மாறாக, வலிவும் ஒட்டுத் தன்மையும் மிக்க அடித்தளத்தினைச் சித்தன்ன வாசல் ஓவியம் கொண்டிருக்கிறது. சித்தன்ன வாசல் ஓவியங்களின் அடித்தளம் அஜந்தாவிலுள்ள களிமண், சுண்ணாம்புப் பூச்சுக்கொண்ட அடித்தளத்திற்கு மாறாக நன்கு தயாரிக்கப் பட்ட முழுவதும் சுண்ணாம்பால்     ஆன     உறுதியான அடித்தளமாக விளங்குகிறது. சித்தன்ன வாசலில் சுண்ணாம்பு நீரையே மீண்டும் அடித்தளத்தின் மீது பூசி அதனை உறுதியாக்கியுள்ளனர்.

சித்தன்ன வாசல் ஓவியங்கள்

சித்தன்ன வாசல் ஓவியங்கள் மூன்று அடுக்குகளைக் கொண்டவையாகத் திகழ்கின்றன. இவற்றில் கீழே உள்ள அடுக்கு சொரசொரப்பான சுண்ணாம்புக் கலவைப் பூச்சாலானது. அதன் மீதுள்ள இரண்டாவது அடுக்கு. நன்கு அரைத்து உருவாக்கப் பட்ட மென்மையான சுண்ணாம்புக் கலவைப் பூச்சாலானது. அதன் மீது மூன்றாவது அடுக்காக வண்ண ஓவியங்கள் உள்ளன. இவ்வடுக்குகள் முறையே 2.5 மி.மீ. / 0.5 மி.மீ / 0.4 மி.மீ கனம் உள்ளவையாகக்     காணப்படுகின்றன.     இதற்கு மாறாக அஜந்தாவிலுள்ள ஓவியங்களின் அடித்தளம் 15 மி.மீ வரை கன அளவு கொண்டதாய் உள்ளது. அஜந்தாவிலுள்ள ஓவியங்கள் தலை சிறந்தவையாக விளங்கினாலும் அவற்றின் தொழில் நுட்பம் சித்தன்ன வாசல் ஓவியங்களோடு ஒப்பிடும்போது தரம் குறைந்ததாகவே உள்ளது.

சித்தன்ன வாசல் ஓவியங்களில் வெள்ளை, கறுப்பு, மஞ்சள், சிவப்பு, பச்சை முதலிய வண்ணங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. இவை இயற்கையில் கிடைக்கும் கனிமப் பொருட்களில் இருந்து செய்யப் பட்டவை ஆகும்.