Monday, 11 March 2024

ங்க காலத் தமிழர் வாணிகம்

  “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு”

-ஔவையார் ‌‌

பழந்தமிழர் செல்வம் ஈட்டும் பொருட்டு உலகின் பலநாடுகளுக்கு கடற்பயணம் மூலம் வாணிகம் செய்துள்ளனர். கங்கைக்கரையில் இருந்த பாடாலிபுரம்,இலங்கை,பர்மா, கடாரம்(மலேசியா), சாவகநாடு(கிழக்கிந்திய தீவுகள்), அரபுநாடுகள், எகிப்து, யவன தேசம்(ரோம்,கிரேக்கம்) போன்ற பலநாடுகளுடன் வாணிகம் செய்ததுடன் பல துறைமுகங்கள் தமிழரின் கட்டுபாட்டிலே இருந்துள்ளன. “கலிங்க நாட்டில் பித்தும்டா வணிக நகரம் பலகாலமாக தமிழர் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது என்பதையும், அதை மீட்ட கலிங்க மன்னர் அந்நகரத்தை உழுது அழித்தார்” என்பதையும் அத்திக்கும்பா கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது

யூத அரசர் சாலோமன் அரண்மனையில் தமிழகத் தேக்கு மரப்பொருள்கள் இருந்த குறிப்புகள் யூதர்களின் புனிதநூலான தோராவில் உள்ளது. யவனர்களுடனான வணிக தொடர்பை “பெரிப்ளூசின் செங்கடல் செலவு”( The periplus of the Erith-rean Sea) என்னும் நூலில் அறியலாம்.. இந்நூல் கொற்கை நகரில் கிடைக்கும் முத்துக்கள் வேறு பொருட்களை விட மதிப்பு வாய்ந்தவை என்று குறிப்பிடுகிறது. பிளைனி, தலாமி போன்றோரின் குறிப்புகளும் தமிழரின் பிறநாட்டு வணிக தொடர்பையும் பண்டைய தமிழக துறைமுகங்களின் பெருமையையும் குறிப்பிடுகின்றனர். கீழடியில் கிடைத்த உரோமானிய நாணயங்களும், ரௌலட் அரிட்டைன் வகை மண்பாண்டங்களும் கிடைத்துள்ளன. மண்டபம் அருகில் உள்ள அழகன்குளம், புதுச்சேரியின் அரிக்கமேடு போன்ற இடங்களில் தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்த எகிப்து நாட்டின் பானையோடுகளும், பெண்ணின் சித்திரம் பதித்த பானையோடுகளும், மணிகளும், நந்த அரசர்களின் நாணயங்களும் கிடைத்துள்ளன.‌‌


ங்க காலத் தமிழர் வாணிகம்' கடைச்சங்க காலத்தில் (அதாவது கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரையில்) தமிழர் நடத்திய வாணிகத்தைப் பற்றிக் கூறுகிறது. 


அந்தக் காலத்துப் பழந்தமிழர், பாரத தேசத்தின் வடக்கே கங்கைக்கரை (பாடலிபுரம்) முதலாகக் கிழக்குக்கரை மேற்குக்கரை நாடுகளில் நடத்திய வாணிகத்தைப் பற்றியும் தமிழகத்துக்கப்பால் கிழக்கே இலங்கை, சாவக நாடு (கிழக் கிந்தியத் தீவுகள்), மலேயா, பர்மா முதலான கடல் கடந்த நாடுகளோடு செய்த வாணிகத்தைப் பற்றியும், மேற்கே அரபுநாடு, அலக்சாந்திரியம் (எகிப்து), உரோம் சாம்ராச் சியம் (யவன தேசம்) ஆகிய நாடுகளுடனும் செய்த வாணி கத்தைப் பற்றியும் கூறுகிறது. அந்தப் பழங்காலத்து வாணிகச் செய்திகளைச் சங்ககாலத்து நூல்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது. மற்றும் தாலமி, பிளைனி முதலான யவன ஆசிரியர் எழுதின குறிப்புகளிலிருந்தும் 'செங்கடல் வாணிகம்' என்னும் நூலிலிருந்தும், புதைபொருள் ஆய்வுகளிலிருந்தும் கிடைத்த செய்திகளிலிருந்தும் கிடைக்கும் சான்றுகளைக் கொண்டும் எழுதப்பட்டது.

அந்தப் பழங்கால வாணிகத்துக்கும் இக்காலத்து விஞ்ஞான உலக வாணிகத்துக்கும் பெருத்த வேறுபாடுகள் உள்ளன. ஆனால், அந்தப் பழங்காலத்தவர், அக்காலத்து இடம், பொருள், ஏவல்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் தக்கபடித் தரை வாணிகத்தையும் கடல் வாணிகத்தையும் நடத்தினார் கள். அவர்கள் கூட்டாகச் சேர்ந்து 'சாத்து' அமைத்துப் பெரிய வாணிகத்தை நடத்தினார்கள். தரை வாணிகஞ் செய்த வாணிகத் தலைவர் மாசாத்துவர் என்று பெயர் பெற்றனர். கடல் வாணிகத் தலைவர் மாநாய்கர் (மாநாவிகர்) என்று பெயர் கூறப்பட்டனர். அக்காலத் தமிழகத்திலே பல மாசாத்துவர்களும் பல மாநாய்கர்களும் இருந்தார்கள்.

சங்ககாலத்துத் தமிழரசர்கள் தங்களுடைய நாடுகளில் வணிகர்க்கு ஊக்கமளித்து வாணிகத்தை வளர்த்தார்கள்; அவர்கள் தங்களுடைய நாடுகளில் வாணிகக் கப்பல்கள் வந்துபோகவும் ஏற்றுமதி இறக்குமதி செய்யவும் துறைமுகப் பட்டினங்களை அமைத்தார்கள். இராக்காலத்தில் கடலில் வருகிற கப்பல்கள் திசை தப்பிப் போகாமலும், துறைமுகத்தைக் காட்டவும் கலங்கரை விளக்குகளை அமைத்தார்கள். துறைமுகங்களில் உள்ள வாணிகப் பொருள்கள் களவு போகாதபடி காவல் வைத்தனர். வாணிகஞ் செய்து பெரும் பொருள் ஈட்டின வணிகப் பெருமக்களுக்கு 'எட்டி' என்னும் சிறப்புப் பெயரும், 'எட்டிப்பூ' என்னும் பொற் பதக்கத்தையும் அளித்துச் சிறப்பினைச் செய்தார்கள். தரை வாணிகமும் கடல் வாணிகமும் பெருகவே, அவற்றைச் சார்ந்து பயிர்தொழில் வளர்ச்சியும் கைத்தொழில் வளர்ச்சியும் பெருகிப் பொருள் உற்பத்தி அதிகப்பட்டது. பொருள்களின் உற்பத்தியினாலும் வாணிகத்தினாலும் பொருளா தாரம் உயர்ந்து நாடு செழித்து மக்கள் நல்வாழ்வு வாழ்ந்தார்கள். நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கும் நாகரிக வாழ்க்கைக்கும் வாணிகம் முக்கிய காரணமாக இருந்தது.

நாட்டின் சரித்திரம் அந்நாட்டை அரசாண்ட அரசர்களுடைய வரலாறு மட்டும் அன்று, அந்நாட்டில் வாழ்ந்த குடிமக்களின் வாழ்க்கை வரலாறும் சேர்ந்ததே சரித்திர மாகும். சங்ககாலத்தில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றில் ஒரு பகுதி வாணிகத்தைச் சார்ந்தது.


துறைமுகங்கள்:

சங்க காலத்தில் கொற்கை,முசிறி, காவிரிப்பூம்பட்டினம், குமரி, எயிற்பட்டினம், கொல்லத்துறை, அரிக்கமேடு, மருங்கூர்ப்பட்டினம், மங்களூர், நறவு, வைக்கரை போன்ற துறைமுகங்கள் சிறப்புற இயங்கியுள்ளன. ‌‌

கொற்கை:

சங்க கால பாண்டிய மன்னர்களின் சிறப்புமிக்க துறைமுகமாக இது விளங்கியுள்ளது. தாமிரபரணி ஆற்றின் கழிமுகத்தில் அமைந்த இந்த துறைமுகம் கி.பி 10 நூற்றாண்டு வரையில் வணிகத்தின் முக்கிய இடமாக இருந்ததை பெரிப்ளூஸ் நூலிலும், தலாமியின் குறிப்புகளிலும் அறியமுடிகிறது. மேலும் சங்க இலக்கியங்களில் மதுரைக்காஞ்சி இந்த துறைமுகத்தின் பெருமையை பல இடங்களில் குறிப்பிடுகிறது.

‌‌முசிறி:

சேர நாட்டின் பேர் பெற்ற துறைமுகங்களில் முசிறி துறைமுகம் முக்கியமானது. யவனர்கள் சேரநாட்டின் மிளகை வாங்குவதற்காகவே முசிறி துறைமுகத்திற்கு அதிகளவில் வந்தனர். யவனர்கள் முசிறியை ‘முசிறிஸ்’ என்று குறிப்பிடுகின்றனர். வால்மீகி இராமாயணம் முசிறியை ‘முரசி பதனம்’ என்று குறிப்பிடுகிறது. ‌‌

“இன்னிசைப் புணரி இரங்கும் பௌவத்து

நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்க்

கமழுந் தாழைக் கானலம் பெருந்துறை”

(6ஆம் பத்து 5) ‌‌

முசிறி துறைமுகத்தின் கடைவீதியில் பொன்னும் முத்தும் விற்கப்பட்டன என்று பதிற்றுப்பத்தின் இந்த பாடல் குறிப்பிடுகிறது. ‌‌

அரபிக்கடல் பகுதியில் கடல்துறுத்தி என்ற தீவில் கடற்குரும்பர்கள் என்பவர்களால் யவனநாட்டுக் கப்பல்கள் முசிறி துறைமுகம் வருவது குறைந்தது. அன்று சேரநாட்டை ஆட்சி செய்த இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் தன் மகன் சேரன் செங்குட்டுவனைப் பெரும்படையுடன் அனுப்பினான். சேரன் செங்குட்டுவன் அவர்களை வென்று அங்கிருந்த பெரிய கடம்பமரத்தை வெட்டி அதன் அடிப்பாகத்தில் முரசு செய்து அதில் தன் வெற்றியை அறிவித்துக்கொண்டே நாட்டை அடைந்தான் என்று பதிற்றுபத்து பாடல்கள் குறிப்பிடுகின்றன.

மாரோகத்து நப்பசலையார் என்றப பெண்புலவர் சேரன் மலையமான் குறித்து இயற்றிய பாடலில்

” சினமிகு தானை வானவன் குடகடல்பொலந்தரு நாவாய்ஓட்டிய அவ்வழிப்பிறகலம் செல்கலாது அனையேம்”

-(புறநானூறு 126(வரிகள் 14- 16)

மேற்கு கடலில் சேரன் தன் பெருங்கப்பலை செலுத்தும் போது வேறு எவரும் தன் கலன்களை அங்கே செலுத்த இயலாது என்கிறார் புலவர்.

காவிரிப்பூம்பட்டினம்: ‌‌

சங்க காலத்தில் மற்றொரு உலக சிறப்பு வாய்ந்த துறைமுகம் சோழர்களின் புகார் என்ற காவிரிப்பூம்பட்டின துறைமுகம். இதைப்பற்றி பட்டினப்பாலை, சிலப்பதிகாரம், புறநானூறு போன்ற நூல்கள் அதிகம் குறிப்பிடுகின்றன. தலாமி தன் குறிப்பில் இந்த துறைமுகத்தை சபரிஸ் என்று குறிப்பிட்டுள்ளார்.இந்திய கடற்படையில் வேலைசெய்த, வரலாற்று அறிஞர் நரைசய்யா என்பவர் கடல்வழி வணிகம் என்ற புத்தகம் எழுதியுள்ளார். அதில் அவர் ஒரு கப்பல் துறைமுகத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு எடுத்துக்கொள்ளும் நேரம் பொறுத்தே அந்த துறைமுகத்தின் மதிப்பீடு உயரும். குறைந்த நேரத்தில் இவற்றை முடிக்க அந்த துறைமுகத்தின் உள்கட்டமைப்பு சரியாக இருக்க வேண்டும். புகார் துறைமுகம் அத்தகைய சிறப்பு வாய்ந்த துறைமுகம் என்கிறார்.

“‌‌” நெடுநுகத்துப் பகல்போல நடுவுநின்ற நல்நெஞ்சினார்

வடுஅஞ்சி வாய்மொழிந்து தமவும் பிறவும் ஒப்ப நாடி

கொள்வதும் மிகைகொளா கொடுப்பதும் குறைகொடாத”

(பட்டினப்பாலை 206)

புகார் வணிகர்கள் நடுநிலை தவறாதவர்களாகவும், பழிக்கு அஞ்சியவராகவும், தம்மையும் பிறரையும் ஒன்றாக மதிப்பவராகவும், பொருள் கொடுக்கும் போது குறையாமலும் பெறும் போது மிகாமலும் பெற்றனர் என்கிறது இந்த பாடல்.

‌‌”கூம்பொடு

மீப்பாய் களையாது மிசைப்பரந் தோண்டாது

புகாஅர் புகுந்த பெருங்கலம், தகாஅர்

இடைப்புலப் பெருவழிச் சொரியுங்

கடற்பல தாரத்த நாடகிழ வோயே”

(புறநானூறு- 30)

புகாருக்கு வரும் வணிகக் கப்பல்கள் பாய்களைச் சுருட்டாமலும், பாரத்தைக் கழிக்காமலும் வரும் என்று கூறுகிறார் உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.

‌‌”மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்

புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும்

முட்டாச் சிறப்பிற் பட்டினம்”

(பட்டினப்பாலை 216-218)
சாதுகன் என்னும் வணிகன் காவேரிபூம்பட்டிணத்தில் இருந்து சாவக நாட்டிற்கு செல்லும் போது ஏற்பட்டப் புயலினால் நாகர்மலைப் பக்கத்தில் அவன் கப்பல் கவிழ்ந்ததாகவும் அவன் ஒரு மரத்தைப் பற்றிக்கொண்டு அந்த தீவிற்கு சென்று தஞ்சம் அடைந்ததாகவும் மணிமேகலையில் ஒரு பாடல் குறிப்பிடுகிறது..

” நளியிரு முந்நீர் வளிகலன் வௌவ;

ஒடிமரம் பற்றி, ஊர்திரை உதைப்ப,

நக்க சாரணர், நாகர் வாழ்மலைப்

பக்கஞ் சார்ந்தவர் பான்மையன் ஆயினன்;”

( மணிமேகலை- 16 ; (13-16))

புகாரில் பல மொழிகளைப் பேசக்கூடிய பல நாட்டு மாலுமிகள் தங்கியிருந்ததை இந்த பாடல் குறிப்பிடுகிறது. ‌‌

” நீரில் வந்த நிமிர்பரிப் புரவியும்

காலின் வந்த கருங்கறி மூடையும்

வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்

குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்

தெறிகடல் முத்தும் குணகடல் துகிலும்

கங்கை வாரியும் காவிரிப் பயனும்

ஈழத் துணவும் காழகத் தாக்கமும்

அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி

வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகு”

(பட்டினப்பாலை 185-193) ‌‌

என்று புகாரில் வந்திறங்கிய பொருள்களை இந்த பாடல் பட்டியலிடுகிறது. ‌‌

இதே போல் வடபெண்ணையாற்றின் கரையில் இப்பொழுது ஆந்திராவில் உள்ள நெல்லூரில் இருந்த கொல்லத்துறை துறைமுகம், தொண்டை நாட்டின் மரக்காணம் பகுதியில் இருந்த எயிற்பட்டினம் துறைமுகம், புதுச்சேரியில் இருந்த அரிக்கமேடு துறைமுகம், சேர நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் இருந்த இரண்டு தொண்டி துறைமுகங்களும் சிறப்பு வாய்ந்ததாக இருந்துள்ளன. பெரிப்ளூஸ், தலாமி ஆகியோரின் குறிப்புகளும், சங்க இலக்கியங்களும், தொல்லியல் சான்றுகளும் இதை உறுதிபடுத்துகின்றன. ‌‌‌‌

வணிகப் பொருள்கள்:

பழந்தமிழர் சர்க்கரை, மிளகு, கள்ளு, உப்பு, முத்து, நீலக்கல், தேக்கு, அறுவை(துணி), வலம்புரிச் சங்கு போன்ற பல பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளனர். குதிரை, தங்கம் போன்ற பொருட்களை இறக்குமதி செய்துள்ளனர். ‌‌

கரும்பு: ‌‌

“கரும்பின் எந்திரம் களிற்றெதிர் பிளிற்றும்

தேர்வண் கோமான் தேனூர்” ‌‌

பாண்டிய நாட்டில் தேனூரில் கரும்புச்சாறு பிழியும் எந்திரமும் வெல்லங் காய்ச்சும் ஆலையும் இருந்ததை இந்த ஐங்குறுநூறு பாடல் குறிப்பிடுகிறது. ‌‌

“மழை கண்டன்ன ஆலைதொறும் ஞெரேரெனக்

கழைகண் உடைக்கும் கரும்பின் ஏத்தமும்”

என்று மலைபடு கடாம் என்னும் தமிழ்நூலில் 340வது செய்யுள் குறிப்பிடுகிறது. ‌‌

கள்ளு: ‌‌

கள், தேறல், தோப்பி, பிழி, நறவு, மகிழ், மட்டு முதலான பெயர்கள் பழங்காலத்தில் மதுவிற்கு வழங்கப்பட்டன. “கொழு மடல் தெங்கின் விளைபூந் தேறல்” (மணிமேகலை 3:89) என்றும், “இரும் பனம் தீம்பிழி” (நற்றினை 38:3) என்றும், “பிணர்ப் பெண்ணைப் பிழி” (பட்டினப்பாலை 89) என்றும், “நுளை மகள் அரித்த பழம்படு தேறல்”(சிறுபாணாற்றுப்படை 58) என்றும் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ‌‌

மிளகு:

சங்க காலத்தில் உலகில் மதிப்பு வாய்ந்த மிளகு பயிர் செய்யும் இடமாக சேரநாடு இருந்தது. சேரநாட்டிலிருந்து யவனர்கள் மிளகை மிகுதியான அளவில் இறக்குமதி செய்தனர். மிளகை அவர்கள் ‘யவனப் பிரியா’ என்று அழைத்தனர். தமிழர்கள் மிளகை கறி மற்றும் மிரியல் என்று அழைத்தனர். ‌‌

“தடவுநிலைப் பலவின் முழுமுதல் கொண்ட

சிறுசுளைப் பெரும்பழம் கடுப்ப மிரியல்

புணர்ப்பொறை தாங்கிய வடுவாழ் நோன்புறத்து

அணர்செவிக் கழுதை சாத்தோடு வழங்கும்

உல்குடைப் பெருவழி”

(பெரும்பாணாற்றுப்படை 77-89) ‌‌

மிளகு பொதிகளை கழுதையின் முதுகில் ஏற்றிக்கொண்டு நெடுஞ்சாலை வழியே சென்றதையும், வழியில் இருந்த சுங்கச்சாவடியில் சுங்கம் செலுத்தியதையும் கடியலூர் உருத்திர கண்ணனார் இந்த பாடலில் குறிப்பிடுகிறார். ‌‌

“சேரலர்

கள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க

யவனர் தந்த வினைமாண் நன்கலம்

பொன்னொடு வந்து கறியொடு பெயரும்

வளங்கெழு முசிறி”

(அகநானூறு 149: 8-11)

முசிறி துறைமுகத்தில் யவனர்கள் பொற்காசுகளை கொடுத்து மிளகு வாங்கிச் சென்றதை தாயக்கண்ணனார் குறிப்பிடுகிறார். ‌‌

உப்பு:‌‌

சங்க காலத்தில் உப்பு வணிகரை உமணர் என்று அழைத்தனர். ‌‌”உவர்விளை உப்பின் உழாஅ உழவர்

ஓகை உமணர் வருபதம் நோக்கி

கானல் இட்ட காவற் குப்பை”

(நற்றிணை 331: 1-3)‌‌

உப்பளங்களில் உப்பு விளைந்த பிறகு குவியலாகக் குவித்து வைத்தார்கள். பிறகு, உப்பை வாங்குவதற்கு வருகிற உப்பு வணிகரை எதிர் பார்த்திருந்தார்கள் என்கிறது இந்த பாடல். ‌‌

முத்து:

பாண்டிய நாட்டின் கொற்கைக் கடல் ஓரத்தில் முத்துச்சிற்பிகள் அதிக அளவில் கிடைத்தன. ‌‌

“சீருடைய விழுச்சிறப்பின்

விலைந்து முதிர்ந்த விழுமுத்தின்

இலங்கு வளை யிருஞ்சேரிக்

கட்கொண்டிக் குடிப்பாக்கத்து

நற்கொற்கையோர் நசைப் பொருந”

(மதுரைக்காஞ்சி 134-138)

என்று கொற்கையின் பெருமையை ‘தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்’ குறிப்பிடுகிறான். ‌‌

நீலக்கல்:

கொங்குநாட்டின் புன்னாடு என்னும் சிற்றரசில் கோமேதம் என்னும் நீலக்கல் அதிகளவில் கிடைத்துள்ளன. இதை உரோமானிய பெண்டீர் அதிகளவில் வாங்கி அணிந்துள்ளனர். புன்னாட்டின் நீலக்கல் சுரங்கத்தைக் கைப்பற்றிக்கொள்ள எண்ணிய துளு மன்னன் நன்னன் அதன்மீது போர் தொடுத்துள்ளான். இதை அறிந்த சேரமன்னன் களக்காய் கண்ணி நார்முடிச் சேரல், தன்னுடைய சேனைத் தலைவனான ஆய் எயினன் தலைமையில் சேனையை அனுப்பிப் புன்னாட்டை நன்னன் கைப்பற்றாதவாறு தடுத்தான். இதை பரணர் பின்வருமாறு குறிப்பிடுகிறார். ‌‌

“பொலம்பூண் நன்னன் புன்னாடு கடிந்தென

யாழிசை மறுகிற பாழி யாங்கண்

அஞ்சலென்ற ஆஅய் எயினன்

இகலடு கற்பிற் மிஞிலியொடு தாக்கித்

தன்னுயிர் கொடுத்தனன்”

(அகநானூறு 396: 2-6)

 



.