சங்ககால நோக்கில் பெண்ணினம் - ஒரு பார்வை
சங்ககால மக்கள் காதலிலும் வீரத்திலும் சிறந்து விளங்கினார்கள். சங்கப்பாக்கள் ஒவ்வொன்றும் தமிழரின் பண்பாட்டையும் நாகரிகத்தையும் எடுத்தியம்பும். அகத்திணையில் தலைவனுக்காகத் தலைவி ஏங்குவதும் தலைவிக்காகத் தலைவன் நெஞ்சிற்குச் சொல்லியதும் குடும்பத்தின்பால் கணவன் மனைவியின் உறவை வெளிக்காட்டி நிற்பதாகும். ஒவ்வொரு மனிதனும் உள்ளத்தில் பேரன்போடு வாழ்வானாயின் இவ்வுலகம் பேறுபெற்றதாய் விளங்கும். ஆனால் கோபம், பொய், பொறாமை, வஞ்சகக் குணத்தோடுதான் நிறைய மனிதர்கள் உறவாடிக்கொண்டிருக்கிறார்கள். சங்ககாலத்தில் மனிதர்களின் கோபம் எங்கே வெளிப்படுகிறது? புறத்திணையில் போர்க்களங்களில் அடிமனதில் தோன்றும் கோபத்தின் எல்லையே ஒருவரை ஒருவர் வீழ்த்துகின்றனர். போரின் காரணமாக இறந்து போன மனிதப் பிணங்கள் குவிக்கப்படுகின்றன. அவர்களின் தாய், தாரம், மகள் எங்கே? அவர்கள் இவ்வுலகத்தில் எத்தனை துன்பங்களை அனுபவித்தாக வேண்டும். சமுதாயத்தில் நடக்கும் ஒவ்வொரு சூழ்நிலை மாற்றத்திற்கும் பெண்ணே பாதிக்கப்படுகிறாள். குடும்பத்தின் சுமையையும் சுமக்க வேண்டும். சமுதாயத்தின் பார்வையையும் தவிர்க்க வேண்டும்.
பெண்ணினம்
‘‘அச்சமும் நாணும் மடனும்முந் துறுதல் நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப’’(தொல்.பொருள்.களவு.நூ.8) பெண்களுக்கு அச்சம், மடம், நாணம் என்ற மூவகைப் பண்புகள் இருக்க வேண்டும் என்கிறார் தொல்காப்பியர். அச்சம் - பெண்களின் மனதில் குறிப்பின்றித் தோன்றும் நடுக்கம். நாணம் - பெண் தன்மைக்குப் பொருந்தாத செயல்களில் ஒதுங்கி இருப்பது. மடம் - மனதால் புரிந்தும் புரியாமல் இருத்தல். பெண்ணினம் பண்பாலும் நெறியாலும் சிறந்தவர்கள். இவ்வுலகம் தழைக்க மக்களைப் பெற்றுக்கொடுத்தவர்கள். பெண்ணினம் இல்லையாயின் மனித இனமே இல்லா ஒன்றாகியிருக்கும்.
கல்வி நெறியில் பெண்கள்
பெண்கள் இல்லாத சமூகம் வெறுமையுற்றது. இவ்வுலகில் பெண்மையைப் போற்ற வேண்டும் ‘‘சங்ககாலப் பெண்கள் ஆண்கள் அளவிற்குச் சமவுரிமை பெறவில்லை என்றாலும் அடிமைகளாய் வாழ முடியாதவர்களாய் இல்லை. சமயம், கல்வி, காதல் ஆகியவற்றில் உரிமை மகளிராய்த் திகழ்ந்தனர்’’1 என இறையரசன் கூறுவது உண்மையானது. சங்க காலத்தில் நச்செள்ளையார், நன்முல்லையார், ஆதி மந்தியார், நப்பசலையார், ஒக்கூர் மாசாத்தியார், காவற்பெண்டு, நக்கண்ணையார், நெட்டிமையார், நெடும்பல்லியத்தை, பொத்தியார், பேய்மகள், இளவெயினி, வருமுலையாரித்தி, வெண்ணிக்குயத்தியார், வெள்ளிவீதியார், பாரி மகளிர்கள், காமக்கண்ணியார், முடத்தாமக்கண்ணியார், பொன்முடியார், காக்கைப்பாடினியார், ஒளவையார் போன்ற பெண்பால் புலவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியுள்ளனர்.
காதல் மகளிர்
சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள பெண்கள் சுதந்திரமாகவும், அதே நேரத்தில் தன்னுடைய தலைவனைத் தானே தெரிவு செய்யும் மனப்பான்மையையும் பெற்றிருந்தனர். தங்கள் தலைவர்களோடு தினைப் புனம், காடு, வயல், கடற்கரை மணல், சுனை போன்ற இடங்களில் காதலை வளர்த்துக்கொண்டார்கள்.
‘‘நிலத்தினும் பெரியதே, வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆர் அளவின்றே
கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே’’ (குறும்.3:1-4)
இங்கு தலைவனோடு தலைவி கொண்ட காதலானது நட்பு, மொழி, மனம், மெய் என்பதைக் கடந்து நிற்பது ஆகும். நிலம், வான், நீர் என மூன்றினையும் விட உயர்ந்தது என்கிறார் ஆசிரியர். ஊரில் ஏற்பட்ட அலரால் தலைவியுடைய காதல் பெற்றோர்க்கு தெரிய வருகிறது. பெற்றோரும் எதிர்ப்பு தெரிவிக்கும் நேரத்தில், தலைவி தன் தலைவனோடு உடன்போக்கு செல்வதற்கும் தயங்க மாட்டாள் என்கிறது சங்க இலக்கியப் பாக்கள்.
துள்ளித் திரிந்த மகளிர்கள்
எப்போதும் மகிழ்ச்சியும் மனநிறைவுமாகவே வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இல்லையென்றால் குறிஞ்சிப்பாட்டிலே தலைவி ஒருத்தி தன் தோழிகளுடன் சுனை நீராடுகையில் அங்கே இருக்கும் கற்பாறையில் தொண்ணூற்று ஒன்பது வகையான மலர்களைப் பறித்து வைத்து அழகு பார்த்திருக்க மாட்டாள்.
சங்ககாலத்தில் மூவகை மகளிர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். குடும்பத்து நலன் சார்ந்த நல்உறவுகளைக் கொண்ட பெண்கள் என முதல் வகையும், புலமைத்தன்மையோடு வாழும் பெண்பாற்புலவர்கள், எதிர் காலத்தை அறியும் கட்டுவிச்சி, வெறியாட்டு நடத்தும் குறமகள் முதல் விறலியர்கள் வரையிலான இரண்டாம் வகையும், தன்னை விற்றுப் பிழைப்பு நடத்தும் விலைமாதர்கள் என்ற மூன்றாம் வகையாகவும் இருந்து வந்துள்ளனர். ஒவ்வொரு கால நிகழ்வுகளிலும் பெண்களின் வாழ்வானது அலைக்கழிக்கப்படுவதும், தூக்கி எறியப்படுவதும் வாடிக்கையாகவே இருக்கிறது. குடும்பத்தில் உள்ள பெண்கள் பிரச்சினைகளை எதிர்கொள்வதும் பரத்தையர் போன்ற பெண்கள் வாழ்க்கையே பிரச்சனையாக எதிர்கொள்ளவும் தயாராகின்றனர். பிரச்சினையுள்ள ஒரு சாராரைத் தவிர்த்துப் பார்த்தால் ஒவ்வொரு பெண்ணினுடைய வாழ்வும் சமூக மதிப்பீட்டில் முதன்மை அடைந்தே வருகிறது எனலாம். பண்டையக் காலத் தமிழ்ப் பெண்ணினம் அகப்புற வாழ்வில் சிறப்புற்று விளங்கியதை இதன்மூலம் காணமுடிகிறது.