சமய இலக்கியங்கள்
சமய இலக்கியங்கள் பக்திப் பெருக்கை எடுத்துரைப்பவை; சமயத் தத்துவங்களைப் புலப்படுத்துபவை. சமண சமயத் துறவிகளும், பௌத்த சமயத் துறவிகளும் மெய்ப்பொருளியலைக் (மெய்ப்பொருளியல் - அவரவர் சமயம் கூறும் உண்மைக் கருத்துகள்) கூறும் இலக்கிய நூல்களைப் படைத்தனர். நாயன்மார்களும், ஆழ்வார்களும் கல் நெஞ்சையும் கனிவிக்கும் பக்திப் பாடல்களை இயற்றிப் பரம்பொருளை வழிபடும் மரபைத் தோற்றுவித்தனர். இவ்வாறு சமயச் சான்றோர்களாம் ஞானச் செல்வர்கள் அருளியவை சமய இலக்கியங்களாம்.
முதலில், சமய இலக்கியம் தோன்றிய காலத்தின் தமிழக அரசியல் சமூகச் சூழல்கள் எவ்வாறு இருந்தன என்பதையும், அவை அவ்விலக்கியத் தோற்றத்திற்கு எவ்வாறு காரணமாயின என்பதையும் காண்போம்.
தோன்றுவதற்கான காலச் சூழல்
தமிழகத்தைக் கி.பி. 250 முதல் 600 வரை களப்பிரர் அல்லது களப்பாளர் ஆண்டனர். களப்பிரர் தமிழகத்திற்கு வந்த அயலவர். அவர்கள் கருநாடக தேசத்திலிருந்து தமிழகத்தில் புகுந்து மூவேந்தர்களை வென்று தமிழகத்தைக் கைப்பற்றினர். கி.பி. ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்களும், பாண்டியர்களும் அதிகார வலிமை பெறும் வரை இவர்தம் ஆட்சி இருந்தது. இவர்கள் காலத்தில் தமிழகத்து அரசியலிலும், சமயத்திலும், சமூகத்திலும், இலக்கியப் பாடுபொருளிலும் மாறுதல்கள் ஏற்பட்டன.
அளவரிய அதிராஜரை நீக்கி அகலிடத்தைக்
களப்பாளன் என்னும் கலியரசன்
கைக்கொண்டனன்
என்று வேள்விக்குடிச் சாசன வரிகள். அச்சுதக் களப்பாளன் தமிழகத்தைக் கைப்பற்றியதைச் சொல்கின்றன.
ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் சிம்ம விட்டுணு எனும் பல்லவனும், பாண்டியன் கடுங்கோனும் களப்பாளரை வெற்றி கொண்டனர். பல்லவர்களும் தமிழகத்திற்கு அயலவரே. ஆந்திர தேசத்தில் கிருஷ்ணா ஆற்றுக்கும், வடபெண்ணை ஆற்றுக்கும் இடையே ஆட்சியை வலிமைப்படுத்திக் கொண்டிருந்த பல்லவ வம்சத்தினர் களப்பாளருடன் மோதித் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றினர். காஞ்சி அவர்தம் அரசிருக்கை ஆகியது.
அரசியல் சூழல்
கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்தின் வடக்கில் முற்காலப் பல்லவர்களும், நடுப்பகுதியில் களப்பாளர்களும், தெற்குப் பகுதியில் பாண்டியர்களும் ஆண்டனர். கொங்கு நாட்டுப் பகுதியும், குமரிக்கு அருகில் வேள்நாடும் குறுநில மன்னர்களுக்கு உட்பட்டிருந்தன.
கருநாடக வேந்தன் ஒருவன் பாண்டிய நாட்டில் புகுந்து ஆண்டான் என்றும், அவன் காலத்தில் சைவம் அழிந்தது, சமணம் செழித்தது என்றும் பெரியபுராணம் (மூர்த்தி நாயனார் புராணம்-11-12), கல்லாடம் (கல்லாடம் - 56) ஆகிய நூல்கள் குறிப்பிடுகின்றன.
சிம்மவிஷ்ணு பல்லவன் களப்பிரர்கள் மீது படையெடுத்து வெற்றி கண்டான் என்று காசக்குடிச் சாசனம் கூறுகிறது.
தமிழகத்தின் வடக்கில் களப்பிரர்களைப் பல்லவர் ஒடுக்கினர். ஏறத்தாழ இதே காலத்தில் தமிழகத்தின் தெற்கில் பாண்டியன் கடுங்கோன் வலிவு பெற்றுக் களப்பிரர்களைத் தோற்கடித்துப் பாண்டிய நாட்டை மீட்டான்.
சமூக மாற்றம்
தமிழகத்தின் மன்னராட்சி களப்பிரர், பல்லவர் எனும் அயலவர் கரங்களுக்கு மாறியது. விவசாய உற்பத்தி தேவைக்கு அதிக விளையுளைச் சேமிக்க, உள்நாட்டு, வெளிநாட்டு வாணிபத்தின் மூலம் விற்பனை செய்ய வழி செய்தது. செல்வர்கள், வணிகர்கள், அரசர்கள், உழைப்பவர்கள் என்ற வெவ்வேறான பகுப்பினர் ஆயினர். பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பெருகின. அசோகர் முயற்சியால் ஆந்திர தேசத்தின் வழி தமிழகம் வந்த பௌத்த சமயம் களப்பிரர் ஆட்சியில் சிறந்து விளங்கியது. புத்தபிக்குகளும், பிக்குணிகளும் தமிழகமெங்கும் சுற்றி உரையாற்றினர். காவிரிப்பூம்பட்டினம், நாகப்பட்டினம், புத்தமங்கலம், மயிலாடுதுறை, உறையூர் முதலியன செல்வாக்குப் பெற்ற பௌத்த மையங்களாகத் திகழ்ந்தன. காஞ்சியில் பிறந்த போதி தருமர் எனும் புத்தப் பெரியார் காண்டன் நகரம் வழியாகச் சீனாவுக்குச் சென்று புத்தசமயத்தைப் பரப்பினார்.
இந்நூற்றாண்டில் சமணர்கள் தொண்டை மண்டலத்திலும், தமிழகத்தில் பிற இடங்களிலும் சமணத்தைப் பரப்பினர். சமணர்களும், பௌத்தர்களும் நாடுகளின் எல்லைகளைத் தாண்டியும், மொழி மண்டலங்களின் எல்லைகளைத் தாண்டியும் தத்தம் சமயங்களைப் பரப்பியது குறிக்கத்தகு நிகழ்வாகும். சமணர்களும், பௌத்தர்களும் புதுவகைக் கல்வி முறையைப் பின்பற்றினர். பௌத்தர்களின் விகாரம் சிறந்த கல்வி நிலையமாகும். காஞ்சி, உறையூர், போதிமங்கை ஆகிய இடங்களில் பௌத்தக் கல்வி நிலையங்கள் இருந்தன. காஞ்சியில் பயின்ற போதி தர்மரும், தர்மபாலரும் காஞ்சியிலும், நாலந்தாப் பல்கலைக்கழகத்திலும் ஆசிரியர்களாகத் திகழ்ந்தனர்.
சமணர்கள் அமண் பள்ளிகளை வைத்துக் கல்வி புகட்டினர். சிம்மசூரி முனிவரும், சர்வநந்தியும் சிறந்த சமண ஆசிரியர்களாக இருந்தனர். சமண சமயப் பணிக்காக வச்சிரநந்தி மதுரைத் திரமிள சங்கத்தை நிறுவினார். காஞ்சியைக் கைப்பற்றிய பல்லவர்கள், கடிகைப் பள்ளி களை நிறுவினர். வேதக் கல்வியும் உடற்பயிற்சி, போர்ப் பயிற்சி ஆகியவையும் வழங்கப்பட்டன. அரசு செலவில், உண்டியும், உறையுளும் நல்கிச் சமூகத்தின் ஒரு பிரிவினருக்கு மட்டும் கல்வி வழங்கும் கடிகைப் பள்ளியில், கடம்ப நாட்டு மயூரசன்மனும், சேர நாட்டு மேலத்தூர் அக்கினி ஹோத்திரியும் கல்வி பயின்றுள்ளனர். செல்வர்களின் பேராதரவும் கிடைத்தது.
தமிழகத்தின் தொன்மையான சமயம் சைவம். குடிமல்லம், கழாத்தூர், குடுமியான் மலை ஆகிய இடங்களில் கிடைத்துள்ள சிவலிங்கங்கள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று தொல்லாய்வினர் கூறுகின்றனர். களப்பாள மன்னர்கள் சைவம் சார்ந்தவர்கள் அல்லர். சோழ அரசன் செங்கணான் காவிரிப்படுகையில் கட்டிய சிவாலயங்கள் பல வழிபாடின்றிக் கிடந்தன. கி.பி. ஆறாம் நூற்றாண்டில் சிவ ஆலயங்கள் பல்லவர் ஆட்சியில் மீண்டும் பேணப்படும் நிலை தோன்றியது.
களப்பிரர்களை வென்று ஆட்சியைக் காஞ்சியில் தோற்றுவித்த பல்லவர்கள் வேதியர்களின் குடியிருப்புகளை விரிவுபடுத்தினர். உழவர்களது நிலங்கள் பிரம்மதேய (பிரம்மதேயம் - வேதியர்களுக்குக் கொடையாகத் தரப்படும் நிலம்) தானத்தின் வழி வேதியர்களுக்கு மாறின. தேவதானங்கள் (தேவதானம் - கோயிலுக்குக் கொடையாகத் தரப்படும் நிலம்) வழி கோயில்களுக்கு மாறின. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று திணை அடிப்படையில் பகுக்கும் முறை மாறியது. (திணை அடிப்படை - நிலத்தின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு மலை, காடு,வயல், கடல், வறண்ட சுரவெளிப் பகுதிகளைத் திணைகளாகப் பகுக்கும் முறை) அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்று வர்ண சமுதாய அமைப்பும், மேலோர், கீழோர் என்ற அடுக்குமுறையும், வெவ்வேறு சாதிகளும் முன்னிறுத்தப்பட்டன. சாதிகளின் உரிமைகளும், கடமைகளும், எல்லைக் கோடுகளும், கட்டுப்பாடுகளும் வரையறுக்கப்பட்டன.
சைவத்தைப் போன்றே வைணவமும் தொன்மையான வழிபாட்டுச் சமயப் பிரிவு ஆகும். மாயோன் எனத் தொல்காப்பியம் திருமாலைக் குறிக்கிறது. பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன் என்று பெரும்பாணாற்றுப்படை திருமாலைப் போற்றுகிறது. சிலப்பதிகாரத்தில் வைணவ ஆலயம் குறிக்கப்பட்டுள்ளது. சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவையில் திருமால் பலவாறு போற்றப்படுகிறார். களப்பாள மன்னர்கள் சிலரும், பல்லவ மன்னர்கள் சிலரும் வைணவப் பெயர்களைத் தாங்கி உள்ளமையால் வைணவம் வெறுக்கப்படவில்லை எனலாம்.
பௌத்த விகாரைகள், சைத்தியங்கள், சமணப் பள்ளிகள், குகைகள், சைவ ஆலயங்கள், வைணவக் கோயில்கள் என்று கோயில்களை மையமிட்ட நகரங்கள் வளர்ந்தன. பழைய வாணிப நகரங்களின் ஆரவாரமும் சிறப்பும் கோயில்களுக்கு இடம்மாறின.