Saturday, 31 July 2021

கல்வெட்டியல்

 கல்வெட்டியல்

கல்வெட்டியல் அல்லது சாசனவியல் (Epigraphy) என்பது, கல் அல்லது வேறு பொருட்களில் வெட்டப்பட்ட அல்லது உலோகங்களில் வார்க்கப்பட்ட எழுத்துக்கள் தொடர்பான ஆய்வுத்துறை ஆகும். இத்துறை பண்பாடு மற்றும் கால அடிப்படையில் கல்வெட்டுக்களை வகைப்படுத்துவதையும், அவற்றை வாசித்து விளக்குதல், அவற்றிலிருந்து முடிவுகளைப் பெற முயல்தல் என்பவற்றையும் உள்ளடக்குகிறது. கல்வெட்டியல் ஆய்வில் ஈடுபட்டுள்ளவர்கள் கல்வெட்டியலாளர் எனப்படுகிறார்கள்.

கற்பாறைகள், தூண்கள், கோயிற் சுவர்கள், செப்பேடுகள், காசுகள், கற்கள், உலோகங்கள், பானைகள், மரங்கள், ஓலைச்சுவடிகள், துணிகள், சங்குகள் மற்றும் ஓவியங்கள் மீதான எழுத்துப் பதிவுகள் பற்றிய ஆய்வு கல்வெட்டியல் எனப்படுகிறது. இப்பதிவு உள்ளத்தை வியக்க வைப்பதாகவும், தகவல் பொருந்தியதாகவும் விளங்குகிறது. இந்த எழுத்துக் கலையானது விலங்கிலிருந்து மனிதனை உயர்ந்தவனாக்கிய அடிப்படைக் கூறுகளில் ஒன்றாகவும், ஒருதலை முறையில் நிகழ்ந்த நிகழ்வுகளை வரலாறாக மாற்றவும், அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஊடகமாகவும் விளங்குகிறது.

பண்டைய நாகரீகங்களின் வரலாறு, பண்பாடு முதலியவற்றை முழுமையாக  வடிவமைத்து அறிந்து கொள்ள உதவும் முக்கியமான சான்றாகக் கல்வெட்டியல் விளங்குகின்றது. நீதி இயல், சமுதாயப் பண்பாட்டியல், இலக்கியம், தொல்லியல் ஆகியவற்றின் வரலாற்றுத் தொன்மையை நிலைநிறுத்த முதன்மை ஆவணச்சான்றாகக் கல்வெட்டியல் விளங்குகின்றது.

பரப்பு

கல்வெட்டியல், தொல்லியலில் பெருமளவு பயன்படுகிறது. ஐக்கிய அமெரிக்க நூலகச் சங்கம் (US Library of Congress), கல்வெட்டியலை, வரலாற்றுத் துறையின் துணைத் துறைகளில் ஒன்றாக வகைப்படுத்தியுள்ளது.

கல்வெட்டியலின் ஆய்வுப் பரப்பினுள் அடங்கும் எழுதும் முறை பற்றிய விடயம், தனியாக ஆராயப்படுகின்ற, கல்வெட்டில் எழுதப்பட்ட உரையின் இயல்பிலிருந்து வேறுபட்டதாகும். பொதுவாகக் கல்வெட்டுக்கள் பொது மக்களின் பார்வைக்காக வெட்டப்படுவனவாகும். எல்லாக் கல்வெட்டுக்களுமே இவ்வாறு இருக்கவேண்டும் என்பதில்லை. சில பண்பாடுகளில் இவை கடவுளின் பார்வைக்கு எனக் கருதியும் வெட்டப்படுகின்றன. மைசீனியப் பண்பாட்டைச் சேர்ந்த லீனியர் பி ("Linear B") என்று அழைக்கப்படும் கல்வெட்டு, பொருளாதார மற்றும் நிர்வாகம் தொடர்பான பதிவுகள் என்று கண்டறியப் பட்டுள்ளது.




வரலாறு

கல்வெட்டியல் துறை 16 ஆம் நூற்றாண்டில் இருந்து உறுதியான வளர்ச்சி பெற்று வருகிறது. கல்வெட்டியலின் கொள்கைகள் பண்பாட்டுக்குப் பண்பாடு வேறுபட்டுள்ளன. ஐரோப்பியக் கல்வெட்டியல் தொடக்கத்தில், இலத்தீன் கல்வெட்டுக்கள் தொடர்பிலேயே அதிக கவனம் செலுத்தியது. ஜார்ஜ் ஃபப்ரிசியஸ் (Georg Fabricius) - (1516–1571); ஆகஸ்ட் வில்ஹெல்ம் சம்ப்ட் (August Wilhelm Zumpt) - (1815–1877); தியோடோர் மாம்சென் (Theodor Mommsen) - (1817–1903); எமில் ஹியூப்னெர் (Emil Hübner) - (1834–1901); பிரான்ஸ் கியுமொண்ட் (Franz Cumont) - (1868–1947); லூயிஸ் ராபர்ட் (Louis Robert) - (1904–1985) போன்றவர்கள் இத்துறையில் தனிப்பட்ட பங்களிப்புக்களைச் செய்துள்ளனர்.

மாம்சென்னினால் 1863 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டட, கோப்பஸ் இன்ஸ்கிரிப்ஷனம் லட்டினரம் என்னும் இலத்தீன் கல்வெட்டுக்கள் தொடர்பான தொகுப்பு, போர்க்கால இடையீடுகளைத் தவிர்த்து, இன்றுவரை பெர்லினில் இருந்து வெளியிடப்பட்டு வருகிறது. இலத்தீன் கல்வெட்டுக்கள் தொடர்பிலான மிகப் பெரியதும், விரிவானதுமான தொகுப்பு இதுவேயாகும்.

கிரேக்கக் கல்வெட்டியல் தொடர்பான நடவடிக்கைகள் வேறொரு குழுவினால் எடுக்கப்பட்டன. 1825 தொடக்கம் 1877 வரையான காலப்பகுதியில், கோப்பஸ் இன்ஸ்கிரிப்ஷனம் கிரீசாரம் (Corpus Inscriptionum Graecarum) என்னும் தொகுப்பும் ஜெர்மனியிலிருந்தே வெளியிடப்பட்டது. பின்னர் வெளியிடப்பட்ட நவீன தொகுப்புக்களினால் இதைப் பலர் தற்போது பயன்படுத்துவதில்லை.