Tuesday, 22 December 2020

நாட்டுப்புறப்பாடல்கள் -22.12.2020

 

நாட்டுப்புறப் பாடல்கள்

நமக்குத் தமிழில் கிடைக்கும் மிகத் தொன்மையான எழுத்துச்சான்று தொல்காப்பியரின் தொல்காப்பியமாகும். தொல்காப்பியர் வாய்மொழி இலக்கியங்களுக்கும் இலக்கணம் கூறியுள்ளார். ‘பண்ணத்தி’ என்று தொல்காப்பியர் கூறுவது ‘நாட்டுப்புறப் பாடல்களையே’ என்று அறிஞர்கள் சுட்டுகின்றனர். வேறு சிலர் தொல்காப்பியர் சுட்டும் ‘புலன்’ என்பதையே நாட்டுப்புறப் பாடல்களைக் குறிக்கும் என்பர். நாட்டுப்புறப் பாடல்களுள் இசைப்பாடல்களைப் ‘பண்ணத்தி’ என்றும் இசை குறைந்த பிற பாடல்களைப் ‘புலன்’ என்றும் கருதும் போக்கு காணப்படுகின்றது.

3.1.1 தொன்மை

சங்க இலக்கியங்களில் நாட்டுப்புறப் பாடல்களின் செல்வாக்கினைக் காணமுடிகின்றது. நாட்டுப்புறப் பாடல்களிலிருந்து தமிழிசைப் பாடல்கள் உருவாகியிருப்பதை ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன. கலித்தொகை, பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்கள் செப்பம் செய்யப்பட்ட நாட்டுப்புறப் பாடல்களைப் போலவே காணப்படுகின்றன. நாட்டுப்புறப் பாடல்கள் பற்றிய குறிப்புகள் பல சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் பல பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்களை அடியொற்றியவை. ‘ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்’ எனும் மங்கல வாழ்த்துப் பாடலும் நாட்டுப்புறப் பாடல் வடிவைப் பின்பற்றி எழுதப்பட்டதாகும். ‘கானல்வரி, வேட்டுவவரி, அம்மானைவரி, கந்துகவரி, ஊசல்வரி, வள்ளைப்பாட்டு முதலியன நாட்டுப்புறப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவையாகும். நாயன்மார்களும், ஆழ்வார்களும் நாட்டுப்புறப் பாடல் வடிவங்களைப் பயன்படுத்திய போக்கினைக் காணமுடிகின்றது. ஏராளமான சிற்றிலக்கியங்கள் நாட்டுப்புறப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டன. குறவஞ்சி, சிந்து, அம்மானை, ஊசல், பள்ளு, தாலாட்டு, ஏசல், ஏற்றம், தெம்மாங்கு முதலான ஏராளமான நாட்டுப்புற இலக்கிய வடிவங்களை அடிப்படையாகக் கொண்டு சிற்றிலக்கியங்கள் உருவாக்கப்பட்டன. மக்களை ஒருங்கிணைத்து, நாட்டுப்புற இலக்கியங்களை ஒரே இலக்கியமாகச் செயல்படுத்த வேண்டும் என்று கருதிய காலகட்டங்களில் எல்லாம் நாட்டுப்புற இலக்கியங்களைப் பயன்படுத்தி எழுத்திலக்கியங்கள் உருவாக்கப்பட்ட போக்கினை அறியமுடிகிறது. நீதிக் கருத்துகளோ பக்திச் செய்திகளோ, மக்களைச் சென்றடைவதற்காக இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆயினும் நாட்டுப்புறப் பாடல்களைத் தனியே சேகரித்துப் பாதுகாக்கவேண்டும் என்ற எண்ணம் ஐரோப்பியர்களின் தொடர்பால் ஏற்பட்டதேயாகும்.

3.1.2 சேகரிப்பும் பதிப்பும்

உலகின் பல்வேறு நாடுகளில் கி.பி. 1600 தொடங்கி நாட்டுப்புறப் பாடல்களைப் பதிவு செய்து பாதுகாத்த போக்கு காணப்படுகிறது. பல்வேறு நாடுகளில் நாட்டுப்புறவியல் ஆவணக்காப்பகங்களும் நாட்டுப்புறவியல் கழகங்களும் உருவாக்கப்பட்டன. 1831இல் பின்லாந்தியர்களால் உருவாக்கப்பட்ட ஆவணக்காப்பகம், 1878இல் இலண்டனில் உருவாக்கப்பட்ட நாட்டுப்புறவியல் கழகம், 1888இல் அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட நாட்டுப்புறவியல் கழகம் முதலானவற்றைச் சான்றுகளாகக் கூறலாம். இத்தகைய அமைப்புகளில் நாட்டுப்புறப் பாடல்களைச் சேகரித்துப் பாதுகாக்கும் பணி, வெளியிடும் பணி நிகழ்ந்து வந்தன. இத்தகைய உலகச் செல்நெறிக் (trends) காரணமாகத் தமிழகத்திலும் நாட்டுப்புறப் பாடல்களைச் சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டது. முதன்முதலில் 1871ல் ‘சார்லஸ்-இ-கோவர்’ எனும் ஆங்கிலேயர் Folk Songs of South India என்னும் தலைப்பில் நூலினை வெளியிட்டார். இந்நூலில் தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுத் தரப்பட்டுள்ளன. மக்களின் உணர்வுகளை ஐரோப்பியர்கள் அறிந்து கொள்வதற்கான ஆதாரங்களை நல்குவது இந்த நூலின் முதன்மையான நோக்கமாக இருந்தது. இந்நூலில் நாட்டுப்புறப் பாடல்கள் மட்டுமல்லாது திருக்குறள், பத்திரகிரியார் பாடல்கள், கபிலர் அகவல், சிவவாக்கியார் பாடல்கள் போன்ற எழுத்திலக்கியப் பாடல்களும் மொழிபெயர்க்கப்பட்டு நாட்டுப்புறப் பாடல்கள் என்று தவறாக அளிக்கப்பட்டுள்ளன. சார்லஸ்-இ-கோவரைத் தொடர்ந்து இந்திய அறிஞர்கள் நாட்டுப்புற இலக்கியங்களைச் சேகரித்து வெளியிடத் தொடங்கினர். 1939 தொடங்கி தமிழகத்திலும் இலங்கையிலும் இதுவரை ஏறத்தாழ நூறு நாட்டுப்புறப் பாடல் தொகுப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. இவையேயன்றி தமிழகம் முழுவதும் முதுகலை (M.A.) ஆய்வியல், நிறைஞர் (M. Phil), முனைவர் (Ph.d) பட்டங்களுக்காக உருவாக்கப்பட்ட ஆய்வேடுகளின் பின்னிணைப்புகளில் ஏராளமான நாட்டுப்புறப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இவை இன்னும் நூல்வடிவம் பெறவில்லை.

இதுவரை வெளியிடப்பட்ட நாட்டுப்புறப் பாடல் தொகுப்புகளுள் குறிப்பிடத்தக்க ஒரு சில ஏடுகள் பற்றிச் சுருக்கமாகக் காணலாம்.

தமிழண்ணல் (1956) வெளியிட்ட தாலாட்டு என்னும் நூலில் பாண்டிய நாடு, ஈழநாடு, சோழநாடு, நாஞ்சில்நாடு, தென்பாண்டிநாடு, கொங்குநாடு, கவிஞர்கள் பாடிய தாலாட்டுக்கள், பிறமொழித் தாலாட்டுக்கள் என்ற தலைப்புக்களில் பாடல்களைத் தந்துள்ளார். தாலாட்டுப் பற்றி இவர் எழுதியுள்ள ஆய்வுரை குறிப்பிடத்தக்கது.

கி.வா. ஜகந்நாதன் பல பாடல் தொகுப்புகளை வெளியிட்டவர். மக்கள் எளிதில் புரிந்துகொள்வதற்காகப் பாடலுக்கு முன்னும் பின்னும் எளிய விளக்கங்களைத் தந்து பாடல்களை வெளியிட்டவர். இந்த விளக்கங்கள் கற்பித வர்ணனைகளாக அமைந்திருக்கும். ‘பெர்சி மக்வின்’ சேகரித்து, தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தால் வெளியிடப்பட்ட மலையருவி எனும் நூலை இவர் பதிப்பித்துள்ளார். நல்லதொரு ஆய்வு முன்னுரையுடன் கூடிய பழைய பாடல்களை உள்ளடக்கிய தொகுப்பு நூலாக இதனைக் கருதலாம். பாடல்களில் திருத்தம் செய்து செப்பம் செய்திருப்பது இதன் குறையாகும்.

செ. அன்ன காமு (1959) வெளியிட்ட ஏட்டில் எழுதாக் கவிதைகள் என்னும் நூல் களப்பணி வாயிலாக அவரால் சேகரிக்கப்பட்ட பாடல்களைக் கொண்டதாக உள்ளது. அவருடைய அனுபவபூர்வமான குறிப்புகள் இத்தொகுப்பு நூலின் சிறப்பாகும்.

நா. வானமாமலையின் நாட்டுப்புறப் பாடல் பதிப்புப் பணி சிறப்பாகக் குறிக்கத்தக்கது. தமிழர் நாட்டுப் பாடல்கள் (1964) என்ற தொகுப்பு, சிறந்த ஆய்வு முன்னுரையுடன் வழங்கும் சொற்பொருள், சேகரிப்பாளர் பற்றிய விவரம், ஆழமான குறிப்புகள் போன்றவற்றுடன் வெளிவந்துள்ளது.

க. கிருட்டினசாமி (1978, 1980) பதிப்பித்து வெளியிட்ட கொங்கு நாட்டுப்புறப் பாடல்கள், கவிஞர் கோ.பெ.நா. (1986) பதிப்பித்த பாலை - மலைப் பாடல்கள் முதலிய நூல்களும் குறிப்பிடத்தக்கவை.

ஆறு. இராமநாதனை முதன்மைப் பதிப்பாசிரியாராகக் கொண்டு மெய்யப்பன் தமிழாய்வகம் வெளியிட்டுள்ள நாட்டுப்புறப் பாடல் களஞ்சியம் (2001) பத்துத் தொகுதிகள் குறிப்பிடத்தக்கவை. பாடல்களைச் சேகரித்த முறை, பாடகர்களின் கருத்துக்கள், பதிப்பாசிரியர்களின் கருத்துக்கள், வழக்குச் சொற்பொருள், பாடல் பற்றிய விவரங்கள் முதலான அனைத்து விவரங்களையும் கொண்ட சிறந்த பதிப்பாக இதனைக் குறிப்பிடலாம்.

3.1.3 ஆய்வுப் பணிகள்

நா. வானமாமலை நாட்டுப்புறப் பாடல்கள் பற்றிய எழுதிய கட்டுரைகள் சிறந்த ஆய்வுகளாக காணப்படுகின்றன. நாட்டுப்புறப் பாடல் தொகுப்புகளுக்கு அவர் எழுதியுள்ள முன்னுரைகளும், பாடல் குறிப்புகளும் மிக ஆழமானவை. பல்துறைக் கலப்பாய்வாக (inter-deciplinary research) இவருடைய ஆய்வுகள் காணப்படுகின்றன. அதன் பிறகு பல்கலைக்கழகப் பட்டங்களுக்காக ஆய்வு செய்யும் போக்கு தொடங்குகிறது. நாட்டுப்புறவியல் துறையில் தொடக்க காலத்தில் தமிழ் இலக்கியம் படித்தவர்களே ஆய்வுகளில் ஈடுபட்டனர். எனவே தொடக்க காலத்தில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகள் நாட்டுப்புறப் பாடல்கள் பற்றியனவாகவே இருந்தன. ஆறு. அழகப்பன் தன்னுடைய எம்.லிட். பட்டத்திற்காக நாட்டுப்புறப் பாடல்களை ஆராய்ந்தார். பா.ரா. சுப்பிரமணியன் (1969) சாதி அடிப்படைத் தாலாட்டு ஒப்பாரிப் பாடல்களை ஆராய்ந்தார். சு.சண்முக சுந்தரம் ‘நெல்லை மாவட்ட நாட்டுப்புறப் பாடல்களையும், ஆறு. இராமநாதன் தென்னார்க்காடு மாவட்ட நாட்டுப்புறப் பாடல்களையும், ச.நசீர் அலி திருச்சி மாவட்டப் பாடல்களையும், இ.பாலசுந்தரம் ஈழத்து நாட்டார் பாடல்களையும், க.கிருட்டினசாமி கொங்கு நாட்டுப்புறப் பாடல்களையும், த.கனகசபை தஞ்சைப் பகுதிப் பாடல்களையும் ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். இவர்களின் ஆய்வுகள் நூலாக வெளிவந்துள்ளன. இந்த ஆய்வுகள் வழி நாட்டுப்புறப் பாடல் சிலவற்றின் அமைப்புகளையும், பாடல்கள்வழி மக்கள் வாழ்வியலையும் அறிந்து கொள்ள முடிகிறது. நாட்டுப்புறப் பாடல்கள் மக்கள் வாழ்க்கையை எவ்வித ஒளிவு மறைவுமின்றி வெளிப்படையாக எடுத்துரைக்கின்றன. எழுத்திலக்கியங்களோ எவ்வாறு வாழவேண்டும் என்று நன்னெறி காட்டுவனவாக அமைந்துள்ளன. எழுத்திலக்கியங்களை மட்டுமே வைத்துக் கொண்டு தமிழக மக்களின் வாழ்வியலை முழுமையாக உள்ளது உள்ளபடி தெரிந்துகொள்ள இயலாது. நாட்டுப்புறப் பாடல்களையும் தரவுகளாகக் கொள்ளும் போதுதான் தமிழக மக்களின் வாழ்க்கையினை முழுமையாகப் புரிந்து கொள்ள இயலும். இந்த உண்மையை மேற்குறிப்பிட்ட ஆய்வுகள் தெளிவுபடுத்தியுள்ளன.

3.1.4 வகைகள்

நாட்டுப்புறப் பாடல்களை அவை வழங்கப்படும் ‘சூழல்’ அடிப்படையில் எட்டுப் பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம். அவை வருமாறு:

• தாலாட்டுப் பாடல்கள்

குழந்தையை மகிழ்ச்சிப்படுத்தும் அல்லது தூங்க செய்யும் சூழல்களில் பாடப்படும் பாடல்கள்.

• குழந்தை வளர்ச்சி நிலைப் பாடல்கள்

குழந்தை வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் பாடல்கள் பாடப்படுகின்றன. குழந்தை தவழும்போதும், உண்ணும்போதும், சாய்ந்தாடும் போதும், அம்புலி தூக்கும்போதும் குழந்தைக்காகப் பாடப்படும் பாடல்களும் இதில் அடங்கும்.

• விளையாட்டுப் பாடல்கள்

விளையாடும் சூழல்களில் பாடப்படும் உடற்பயிற்சி விளையாட்டுப் பாடல்கள், வாய்மொழி விளையாட்டுப் பாடல்கள் ஆகியன இப்பகுதியில் வைக்கப்படும்.


• தொழிற் பாடல்கள்

தொழில் செய்யும் போது பாடப்படும் பாடல்கள் தொழிற்பாடல்கள். வேளாண்மைத் தொழிலும் வேளாண்மை அல்லாத தொழிலும் இதில் அடங்கும்.


• வழிபாட்டுப் பாடல்கள்

வழிபடும் சூழலில் வழிபடும் தெய்வங்கள் குறித்துப் பாடப்படும் பாடல் அனைத்தும் இப்பிரிவில் அடங்கும்.


• கொண்டாட்டப் பாடல்கள்

மகிழ்ச்சியை ஏற்படுத்தும் அனைத்துச் சூழல்களிலும் பாடப்படும் பாடல்களைக் கொண்டாட்டப் பாடல்கள் எனலாம். ஓய்வு நேரங்கள், மக்கள் ஈடுபடும் பொதுவான கொண்டாட்டங்கள், விழா எடுத்துக் கொண்டாடப்படும் சிறப்பான நிகழ்ச்சிகள், அதுபோன்ற கொண்டாட்டங்களில் பொதுமக்களே பாடுபவை, கலைஞர்கள் பாடுபவை, குடும்பக் கொண்டாட்டங்கள் என்று பலவாறான கொண்டாட்டச் சூழல்களில் பாடப்படும் பாடல்களை இவ்வகையில் அடக்கலாம்.


• இரத்தல் பாடல்கள்

ஊர் ஊராகச் சென்று யாசித்து வாழ்வோர் யாசிக்கும் சூழலில் பாடும் பாடல்கள் இதில் அடங்கும்.


• இழப்புப் பாடல்கள்

யாதேனும் ஒன்றை இழக்கும் சூழல்களில் பாடப்படும் பாடல்கள். உயிர் இழத்தலின் போது பாடப்படும் ஒப்பாரிப் பாடல்களும், (மகளிர் பாடுவன, கலைஞர்கள் பாடுவன) பொருட்களை இழந்து புலம்பும் பாடல்களும் இதில் அடங்கும்.


மேற்காட்டப்பட்ட பாடல்களுள் தாலாட்டுப் பாடல்கள், குழந்தை வளர்ச்சி நிலைப் பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள், தொழிற்பாடல்கள் ஆகிய பாடல் வகைகளை மட்டும் இப்பாடத்தில் காணலாம்.